கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது நிதி நிறுவனம் நடத்தி ரூ.600 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து பதியப்பட்ட வழக்கில் சகோதரர்கள் இருவரும் தலைமறைவாக இருந்தனர். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம், பொன்மராவதியில் வக்கீல் ஒருவரின் பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த சகோதரர்களை இன்று மூன்று தனிப்படை போலீஸ் டீம் சுற்றிவளைத்து கைதுசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர் சுவாமி நாதன் சகோதரர்கள். விக்டரி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம், கிரிஷ் பால் பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்துவருகின்றனர். எப்போதும் ஹெலிகாப்டரிலேயே வலம்வந்ததால் `ஹெலிகாப்டர் பிரதர்ஸ்' என கும்பகோணம் மக்களால் அழைக்கப்பட்டனர். தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகத் திருப்பி தரப்படும் என ஆசைவார்த்தை கூறி கும்பகோணத்தைச் சேர்ந்த பலரிடம் நிதி வசூல் செய்தனர். செல்வந்தர்கள், வர்த்தகர்கள், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் எனப் பலரும் கோடிகளில் அவர்களிடம் முதலீடு செய்தனர்.
இந்தநிலையில், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த தம்பதியான ஜபருல்லா - பைரோஜ்பானு, ஹெலிகாப்டர் சகோதரர்கள் தங்களிடம் ரூ.15 கோடி மோசடி செய்துவிட்டதாகவும், பணத்தைத் திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் போலீஸில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சகோதரர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இந்தநிலையில், அவர்களின் பால் பண்ணையில் பணிபுரியும் ஊழியர்களும், பொதுமக்கள் பலரும் புகார் கொடுத்தனர்.
Also Read: கும்பகோணம்: `ஹெலிகாப்டர் சகோதரர்கள் ரூ.600 கோடி மெகா மோசடி?’-புகாரைத் தொடர்ந்து அதிரவைத்த போஸ்டர்கள்
இதையடுத்து ஹெலிகாப்டர் சகோதரர்கள் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 12 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் எம்.ஆர்.கணேஷ் மனைவி அகிலா உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைதுசெய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸை தனிப்படை போலீஸார் தேடிவந்தனர். சென்னை, பாண்டிச்சேரி, வடலூர் உள்ளிட்ட ஊர்களில் செல்போனை வைத்து ஆய்வு செய்து தேடிச் சென்றனர்.
ஆனால் அந்தத் தேடுதல் வேட்டையில் அவர்கள் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமாராவதி அருகேயுள்ள வேந்தன்பட்டி கிராமத்தில் வக்கீல் ஒருவரின் பண்ணை வீட்டில் அவர்கள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. பின்னர் இன்று மூன்று தனிப்படை போலீஸ் குழுக்கள் தலமையிலான போலீஸார் பண்ணை வீட்டைச் சுற்றிவளைத்து அவர்களைக் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 13 பேக்குகள், உயர் ரக கார், செல்போன் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தஞ்சாவூர் குற்றப்பிரிவு அலுவகத்துக்கு ஹெலிகாப்டர் சகோதரர்களை அழைத்து வந்து, பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணை தொடர்ந்துவருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/crime/kumbakonam-helicopter-brothers-arrested-by-police
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக