Also Read: “துருக்கி விசாக்காரனுங்க சரியான ஆளுங்கப்பா!” - கிராமத்தானின் பயணம் -3
ஒரு வழியாக இஸ்தான்புல் வந்து ஒரு இரவும் ஆகிவிட்டது. சொன்னேன் மிகவும் பிசியாக இருந்தோம் என்று. விவரிக்கிறேன்.
முதலில் என் ஒரு கெட்ட பழக்கத்தை சொல்லிவிடுகிறேன். எனக்கு திட்டமிடல் மிகவும் பிடிக்கும். எந்த பயணமானாலும் ஒவ்வொரு நாளும் என்ன, எங்கே, எப்படி என்று அட்டவணையிட்டுவிடுவேன். எதிர்பாரா தடங்கல்களுக்கும் ஒரு அளவு நேரம் ஒதுக்குவேன். இப்படி செய்வதால் முடிந்தவரை ஏமாற்றத்தை தவிர்க்கலாம். மேலும் எல்லாவற்றையும் மறக்காமல் செய்து முடிக்கலாம். சமயத்தில் சற்றுமே எதிர் பார்க்காமல் சில அசம்பாவிதங்கள் நடக்கலாம். எனக்கு சிட்னியில் (ஆஸ்திரேலியா) கால் முட்டி பிசகி அவசர சிகிச்சைக்கு எடுத்து சென்றதுபோல். ஆனால் திட்டமிட தவறுவது தோல்விக்கு/குழப்பத்திற்கு திட்டமிடல் ஆகிவிடும். (Failing to plan is planning to fail).
துருக்கி: முஸ்தபா கெமால் அத்தாதுர்க் என்பவர்தான் இன்றைய துருக்கியின் சிற்பி. (1920-38 அவர் அதிபர்). கடுமையான மதச்சார்பற்ற நாடாக பிரகடனம் செய்தார். முக்காடு (Head Scarf) அணிவது அரசு பணியில் / ஆளும் இடங்களில் இருப்பவர்களுக்கு தடையே செய்யப்பட்டது. இன்றைய துருக்கி நிறைய மாறி வருகிறது. என் முதல் பயணம் 2005 இல். 2019 வரை நானே கண்கூடாக பார்க்க முடிந்தது, சமுதாய மாற்றத்தை. சரி, அரசியல், அதுவும் சர்வதேச அரசியல், நமக்கு சிலபஸில் இல்லை. ஆகையால் தவிர்க்கவேண்டும்.
அத்தாதுர்க்கிற்கு முன் துருக்கி ஒட்டோமான் (Ottomon Empire) பேரரசின் மய்யமாக இருந்தது. ஒட்டோமான் பேரரசின் காலம் 13ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து ஏறக்குறைய 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை நீண்டது. உச்சத்தில் மேற்கு ஆசியா, தென் கிழக்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா என பரந்து விரிந்து இருந்தது. இன்றைய இஸ்தான்புல் 1450கள் வரை கிழக்கு ரோமன் பேரரசுக்கு கீழ் இருந்தது, கான்ஸ்டான்டிநோபில் (Constantinople) என்ற பெயருடன். இன்றும் சிதையுண்ட ரோமன் வரலாற்று சின்னங்கள் பல உண்டு, துருக்கியில். சிதையாத ஹாகிய சோபியா மஸூதி ஒரு பிரம்மாண்டமான கட்டிடம்.
இங்கு ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும். பள்ளியில், நான் ஒன்றும் பெரிதாக உழைக்கவில்லையென்றாலும், எனக்கு நல்ல ஓய்வு அளித்த பாடம் வரலாறு. ஆசிரியர் நல்லவர். வந்தோமா, மேஜை மீது அமர்ந்து டீ/வடை சாப்பிட்டோமா, ஒரு 20 வரிகள் புத்தகத்தில் இருந்து படித்தோமா என்று இருந்தவர். முக்கியமாக தூங்குபவர்களை, நான் உட்பட, தொந்தரவே செய்யமாட்டார்.
ஆனால் என்னுடைய பயணங்கள் எனக்கு வரலாற்றின் மேல் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது என்றால் அதுமிகையாகாது. நம்முடைய தஞ்சை பெரியகோவில், கர்நாடகாவின் பேலூர், ஹளபேடு, சென்னகேசவகோவில்கள் (ஹொய்சாலா வம்சம்) இன்னும் பலப்பல பார்த்து வியக்க வேண்டியவை. மும்பை வாழ்க்கை சத்ரபதி சிவாஜி மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது. மத்திய கிழக்கில் வாழ்வது இஸ்லாமிய, யூத, குர்திஷ், ஓட்டோமான், ஆர்மேனியன், பெர்சியன் வரலாறுகளை ஒரு அளவாவது தெரிந்து பாராட்ட உதவியது.
இஸ்தான்புல்: இஸ்தான்புல் அழகிய மிக சுத்தமான நகரம். பார்ப்பதற்கு நிறைய உள்ளன. நீல மசூதி (Blue Mosque), ஹாகிய சோஃபியா (Hagia Sophia - கிறிஸ்துவ தேவாலயம், பின்னர் மசூதியாக மாற்றப்பட்டு பின்னர் அருங்காட்சியகமாகி இப்போது மீண்டும் மசூதியாக மாற்றப்பட்டுள்ளது). கலாடா கோபுரம், பெரிய பஜார் (Grand Bazaar), தக்சிம் சதுக்கம் (Thaksim Square) என பல இடங்கள் 3-4 நாட்களில் நிதானமாக பார்த்து முடிக்கலாம். விலைவாசி அதிகமா குறைவா என்பது அவரவர் பார்வை பொறுத்தது. சர்வேதேச ஒப்பீட்டில் (comparison) இஸ்தான்புல் சற்று செலவு மிதமான ஊர்தான். இஸ்தான்புல் ஒரு பகுதி ஐரோப்பாவிலும் மற்றொரு பகுதி ஆசியாவிலும் அமைந்த நகரம். பிரிப்பது பாஸ்போருஸ் (Bosporus) நதி/முகத்துவாரம் (strait) என்று சொல்லலாம்.
தக்சிம் சதுக்கம் ஒரு ரங்கநாதன் தெரு மாதிரி ஒரு சுறுசுறுப்பான இடம். ஆனால் கொஞ்சம் அகால் ஜுகால் நடக்கும் இடம். பலமுறை தரகர்கள் என்னிடம் வந்து நம்மூர் பரிசு சீட்டு விற்பவர்கள் போல் அந்த நாடு இருக்கு இந்த நாடு இருக்கு வேண்டுமா கேட்டு ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். நிறைய டாஸ்மாக் கடைகள் உண்டு. காலணி துடைப்பவர்கள் சாதுவாக வந்து உங்கள் காலருகில் அவர்களுடைய துடைப்பானை தவறவிடுவதுபோல் போடுவார்கள். நீங்கள் பரிதாபப்பட்டு எடுத்து கொடுத்தால் உடனே பிரதியுபகாரமாக உங்கள் காலணி சுத்தம் செய்வதாக சொல்லி ஒரு மூலையில் வைத்து காசு பறிப்பது ஒரு நல்ல விளையாட்டு. வெள்ளைக்காரர்கள் நிறைய விதத்தில் ஏமாறுகின்ற இடம்.
இஸ்தான்புல் அசைவ உணவு பிரியர்களுக்கு அருமையான இடம். நல்ல மீன், இறால் மற்றும் இறைச்சி உணவு வகைகள் அபரிமிதமாக கிடைக்கும். தக்சிம் சதுக்கம் அருகிலேயே ஏறக்குறைய 2 கிமீ முழுவதும் துர்கிஷ் உணவு விடுதிகள். ஒரு கட்டு கட்டலாம். சொற்ப அளவிலேயே இந்திய உணவு விடுதிகள் இங்கே.
சுற்றுலா பயணிகள் செய்யவேண்டிய மற்றொன்று பாஸ்போருஸ் கரை (bosphorus). மக்கள் மொய்க்கும் இடம். கரையில் அமர்ந்து அல்லது படகில் பாஸ்போருஸ் நதியில் ஊர்ந்து நிதானமாக உணவருந்தி மகிழ்வது ஒரு அனுபவம். இரவு கேளிக்கைகளுக்கு குறைவே இல்லை. நான்/பாரியாள் இரவு 1000 மணிக்கு மேல் உலகம் எப்படி இருக்கும் என்று தெரியாத ஜென்மங்கள். மன்னிக்கவும்.
டோல்மாபச்சே மாளிகை ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் இருக்கை. பறந்து விரிந்த இல்லங்கள், அலுவலகங்கள், சமையல் கூடங்கள், கேளிக்கை இல்லங்கள் என ஒரு ஊரையே உள்ளடக்கிய தவறாமல் பார்க்க வேண்டிய இடம். டோல்மாபச்சே செல்வ செழிப்பின் உறைவிடம், ஒரு காலத்தில்.
இன்னும் ஒரு தவறவிடக்கூடாத விஷயம் சுழலும் டெர்விஷ்ஸ் (Whirling Dervishes). ஹோட்ஜ்பாஷா (முன் பதிவு அவசியம்) என்ற இடம் மிகவும் பிரபலம். சுஃபி மத துறவிகள் (Dervishes) ஒரே இடத்தில் தங்களை தாங்களே சுற்றி சுற்றி வருவார்கள். இதமான இசை பின்னணியில். பார்க்கும் நமக்கே தலை சுற்றும். நல்ல அனுபவம். சுஃபிகளின் ஒரு வழிபாட்டு முறை, இன்று சுற்றுலா பயணிகளின் தவறவிடக்கூடாத ஒன்றாகிவிட்டது. (Not to be missed)
கப்படோச்சியா: கப்படோச்சியா செல்ல விமானம் மூலம் 90 நிமிடங்கள். கெய்சரி விமான நிலையம் சென்று அங்கிருந்து விடுதி செல்ல 80 கிமீ, வாகனம் (Car) மூலம். இறங்கியாகிற்று. 30 நிமிடம் கடந்தும் வாகனம் வரவில்லை. சிறிய விமான நிலையம். ஈ இருந்தது, காக்கா இல்லை. விடுதியை அழைத்து, “வண்டி எங்கே?” என்று வினவினேன். ஓட்டுனரிடம் தகவல் சரிபார்த்து உடனே அழைத்தார்கள். ஐயா ஓட்டுநர் தகவல்படி நீங்கள் இப்போது அந்த வாகனத்தில்தான் உள்ளீர்கள். சுற்றி எதற்கும் ஒருமுறை பார்த்துவிட்டு சொன்னேன், இல்லை என்று. சொதப்பல் என்று அறிந்து மாற்று வாகனம் அனுப்ப சம்மதித்தார்கள். 45 நிமிடம் குளிரில் வெளியில் நின்றோம் (வாகன ஓட்டி மீண்டும் சொதப்பிவிட்டால்). வந்தார்.
என்ன சண்டையோ மனைவியிடம். வீட்டில் சொல்லிவந்த மாதிரி ஒரு மார்கமாக (மூர்க்கமாக?) ஓட்டினார். நாங்கள் அப்படி சொல்லிவிட்டு வரவில்லை, அவரிடம் சைகை செய்து "உயிரோடு விடுதிக்கு செல்ல விரும்புகிறோம்" என்று புரிய வைத்தேன். கேட்டவர், "நான் திறமையாக ஒட்டுகிறவன். கம்முனு குந்திகினு கட" போல் அவர் பாஷையில் சொன்னார். இந்த மாதிரி சமயங்களில் பொறுமை அவசியம். இல்லாவிடில் சில பைத்தியங்கள் நடுவில் இறக்கி விட்டாலும் ஒன்னும் சொல்வதற்கில்லை. மால்டாவில் (Malta) ஏறக்குறைய அப்படிதான். பின்பு சொல்கிறேன்.
வாழ்க்கையில் நான் புரிந்து கொண்ட ஒன்று. நாம் எவ்வளவுதான் நல்ல மனது/மதிப்புடன் நடத்தினாலும் சில சமயங்களில் மற்றவர் காரணமே இல்லாமல் கேணைத்தனம் செய்வார்கள். 95.7% மக்கள் நம் நடவடிக்கையை பிரதிபலிப்பார்கள். 3.7% காரணமேயில்லாமல் கடுப்படிப்பார்கள். மீதி ரெண்டும்கெட்டான். வாழ்க்கையின் இயல்பு. அவர்களுக்கு நம்முடைய அனுதாபங்களை செலுத்திவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டும்.
விடுதி வந்தாச்சு. விடுதியாளர் நன்கு ஆங்கிலம் பேசினார். இது கொஞ்சம் அரிது, துர்கியில். சில நாட்டு மக்கள் என் நாட்டுக்கு வந்தால் என் மொழி பேசு ஒரு விளக்க முடியாத மனோபாவம் கொண்டிருப்பார்கள். (நம்ம "நேதாக்களின் “ராஷ்ட்ர பாஷா”). நம்ம 10 நாள் துருக்கி செல்வதற்க்காக துருக்கிஷா கற்றுக்கொள்ள முடியும்? சைகை பாஷையில் ஒப்பேத்திவிடவேண்டும்.
கப்படோச்சியா நிலப்பரப்பு கிட்டத்தட்ட அமெரிக்காவின் கிராண்ட் பள்ளத்தாக்கு (Grand Canyon) மாதிரி இயற்கையின் அதிசயத்தை உணரவைக்கும் இடம். ஆந்திராவிலும் கண்டிக்கோடா என்ற பள்ளத்தாக்கு உள்ளதாம், பார்க்க வேண்டும். இங்குதான் ரஜனி நயனை "கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும்" பாடி மயக்கியதாக சரித்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் இங்கு "புதை நகரம்" பார்க்கவேண்டிய இடம். கொஞ்சம் மனோ தைரியம் வேண்டும். குறுகிய சிறிய இடங்களில் சிரமப்படுவோர்கள் (Claustrophobia) தவிர்க்கவேண்டும்.
தவறவிடக்கூடாத அனுபவம் வெப்ப ஊதற்பை பயணம்தான் (Hot Air Balloon Ride). விடியல் முன்பே ஆரம்பிக்கவேண்டும். புகைப்படத்தில் அந்த பரிமாணம் கிடைக்காது. நேரில் அந்த ஊதற்பை ராட்சத பெரியது. அதை அவர்கள் லாவகமாக தயார்படுத்தி வெப்பத்தை செலுத்தி (உணர ஆனால் தாங்க கூடிய அளவு வெப்பம்) நம்மையும் கை கொடுத்து ஏற்றி எல்லா கதையும் சொல்லி சிரிக்கவைத்து 90 நிமிடங்கள் அந்த பள்ளத்தாக்கை சுற்றி காட்டுவார்கள். முடிவில் அவர்களை பாராட்டாமல் இருக்கமுடியாது. இறுதி நிறுத்தம் இஸ்மிர்.
இஸ்மிர்: கப்படோச்சியாவில் இருந்து 60 நிமிட விமான பயணம். ரோமானிய புராதன இடங்கள் நிறைந்த கடற்கரை நகரம். இயேசு கிறிஸ்துவின் தாய் மேரியின் இருப்பிடம் (2000 வருட புராதனம் வாய்ந்தது) இங்குதான் உள்ளது. வியப்புதான் அதை பார்க்கும்போது.
28/29/30 தேதிகளில் நிதானமாக சுற்றிவிட்டு, உல்லாசபோக்கிடத்தில் (resort) நன்கு உண்டு (அந்த ஈரல் வறுவல், அப்பா - சைவர்கள் மன்னிக்க) இறுதி நாள் அன்று துர்கிஷ் குளியல் (Turkish Hammam) செய்துகொண்டேன். Hammam சோப்பின் மூலப்பெயர் துரகிஷ்தான் என்று நினைக்கிறன். பெரிய குளியல் அறை. அதனுள் ஓர் பெரிய ஆனால் ஆழம் குறைந்த தொட்டி.
தொட்டியில் மிதமான சூட்டில் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும். தொட்டியின் விளிம்பு ஒரு ஆள் படுக்கக்கூடிய அளவு. அந்த விளிம்பில் நம்மை படுக்கவைத்து ஒரு வலிமையான ஆண் சற்றே கரடுமுரடான தேய்ப்பான் கொண்டு ஒரு கால் கிலோ அழுக்கை பிரித்தெடுத்து அன்பளிப்பார். 45 நிமிடம் நம்மை நன்கு சோப்பு போட்டு பிடித்து விட்டு குளிப்பாட்டி போடா என்று அனுப்புவார்.
இத்தனை நாள் குளித்ததெல்லாம் வீண் என தலைகுனிவு உங்களுக்கு ஏற்பட்டால் அது இயல்பே. ஆனாலும் புதிதாய் உணர்வீர்கள். என் மனைவி நம்ம ஊர் குளங்களில் எருமையை வைக்கோல் கொண்டு குளிப்பாட்டுவதுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்தார்.
அட, ஒரு மசாஜும் செய்துகொண்டு விடுவோம் என்று (package offer) அதையும் அனுபவித்து விட்டு ஒரு மிதப்பிலேயே போய் உணவருந்திவிட்டு விடைபெற மணித்துளிகளை எண்ண ஆரம்பித்தோம்.
படுக்கையில் படுத்து சற்றே கண்ணை மூட, எங்கள் கிராமத்து "ஆறுமுகம்" மனதுக்கு வந்தார். மறக்கமுடியாத மனிதர். வித்தியாசமானவர். உண்மையில் நாம் எல்லோருமே ஒருவரிலிருந்து ஒருவர் வித்தியாசமானவர்கள்தான்.
சரி, இப்பொழுது எதற்கு ஆறுமுகம் என் மனதில் தோன்றவேண்டும். இதுதாங்க இந்த மனித மூளை. இருக்கிற இடத்தில் இருப்பதை இக்கணம் அனுபவிப்போம் என்பதே கிடையாது. துருக்கியில் இருக்கும்போது வரக்கால்பட்டு வரும். வரகால்பட்டில் இருக்கும்போது வந்தவாசியோ வாஷிங்டனோ வரும். மனோநிறைவுநிலை (Mindfulness) வேண்டும், எனக்கு.
அமெரிக்கா போவதற்கு முன் ஆறுமுகத்துக்கு அறிமுகம் செய்துவைக்கிறேன். அடுத்தவாரம்.
-சங்கர் வெங்கடேசன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/myvikatan-article-about-istanbul-travel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக