சென்ற மாதம் சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குநர் பாண்டிராஜின் 'எதற்கும் துணிந்தவன்', த.செ.ஞானவேலின் 'ஜெய் பீம்' படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் அள்ளின. இன்று ட்விட்டரில் சூர்யா, ஓர் ஆச்சரிய தகவலை வெளியிட்டுள்ளார். அவரது 2டி நிறுவனம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் தொடர்ந்து கை கோத்து அடுத்தடுத்து படங்களை வெளியிட இருக்கிறது.
"வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து நான்கு மாதங்களுக்கு அழகான நான்கு கதைகளைச் சொல்லப்போகிறோம். உங்கள் வாழ்த்துகளையும் ஆதரவையும் அளியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்!" என்று ட்விட்டிருக்கிறார் சூர்யா. அதன்படி 'ஜெய் பீம்', 'உடன்பிறப்பே', 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' மற்றும் 'ஓ மை டாக்' ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகவிருக்கின்றன.
Dear all! Four beautiful stories will be told every month, starting September! Need all your wishes and support! Stay safe!! @2D_ENTPVTLTD @PrimeVideoIN
— Suriya Sivakumar (@Suriya_offl) August 5, 2021
ஜெய் பீம்
இதில் க்ரைம் த்ரில்லர் படமான 'ஜெய் பீம்'மில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார். பழங்குடியின தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை இந்தப் படம் எடுத்துரைக்கிறது. ராஜகண்ணுவை போலீசார் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்ய, அவர் காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். செங்கேணி, இது தொடர்பாக பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சந்துருவின் உதவியை நாடுகிறாள். சந்துரு தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா என்பதே ஜெய் பீம் கதை.
ஒளிப்பதிவு எஸ்ஆர் கதிர், இசை ஷான் ரோல்டன். இப்படம் வரும் நவம்பரில் வெளியாகிறது. அசோக் செல்வன், பிரியா ஆனந்த் நடித்த 'கூட்டத்தில் ஒருவன்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் இரண்டாவது படமிது.
சூர்யாவின் தயாரிப்பில் ஒடிடியில் வெளியாகும் பிற படங்கள் ஒரு பார்வை.
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்த நையாண்டி நகைச்சுவை படம், 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்'. இதை அரிசில் மூர்த்தி இயக்குகிறார். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒரு கிராமத்தைப் பற்றிய செய்தி வெளியாகிறது. ஆனால், அந்தக் கிராம மக்களுக்கு டிவி பார்க்க மின்சாரம் இல்லை.
மனைவி வீராயியுடன் வாழ்ந்து வரும் விவசாயி குனிமுத்து, கருப்பன் மற்றும் வெள்ளையன் என்னும் தனது காளைகளை இழக்கிறார். நண்பர் மாந்தினியுடன் அவர் தனது காளைகளை தேட தொடங்குகையில், நர்மதா என்ற நிருபர் அவர்களுக்கு உதவுகிறார். பெரும் போராட்டத்தின் மத்தியில் காளைகளைக் கண்டுபிடிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் அதனால் கிராமத்தில் ஏற்படும் மாற்றங்களும்தான் கதை.
ஒளிப்பதிவு சுகுமார், இசை கிரீஷ், படத்தொகுப்பு சரவணன், கலை முஜிபூர், உடைகள் வினோதினி பாண்டியன். இப்படம் வரும் செப்டம்பரில் வெளியாகிறது.
உடன்பிறப்பே
சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் மற்றும் சித்து ஆகியோர் நடித்த படம் 'உடன்பிறப்பே'. 'கத்துக்குட்டி'யை இயக்கிய இரா.சரவணனின் அடுத்த படமிது.
கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருக்கும் உடன்பிறப்புகள் வைரவன், மாதங்கி ஆகியோருக்கு இடையேயான நிபந்தனையற்ற அன்பின் முக்கியத்துவத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது. நீதிக்காக வன்முறை வழியில் போராட வேண்டும் என வைரவனனும், சட்ட விதிகளின் படி விடாமுயற்சியுடன் பயணிக்க வேண்டும் என மாதங்கியின் கணவர் சற்குணமும் வலியுறுத்துகின்றனர். பல ஆண்டுகளாக அவர்களுக்கிடையேயான விரிசலை நீக்குவதற்காகவும், குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவும் மாதங்கி எடுக்கும் முயற்சிகள்தான் ‘உடன்பிறப்பே’.
டி.இமான் இசையமைத்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் படம் அக்டோபரில் வெளியாகிறது.
ஓ மை டாக்
அருண் விஜய், அர்ணவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார் மற்றும் வினை ராய் நடித்த குழந்தைகளை மையப்படுத்திய படம் 'ஓ மை டாக்’. அறிமுக இயக்குநர் சரோவ் சண்முகம் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம் குழந்தைகளின் உலகம், அவர்களின் ஆசை, துணிச்சல், தைரியம், நட்பு, நிபந்தனையற்ற அன்பு மற்றும் விஸ்வாசம் குறித்து பேசுகிறது. பிறவி குறைபாடு காரணமாகக் கொல்லப்படவிருக்கும் நாய்க்குட்டியும், அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு சிறுவனும் சந்திக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைப் பயணமே இந்தப் படம்.
ஒளிப்பதிவு கோபிநாத், இசை நிவாஸ் கே பிரசன்னா. வரும் டிசம்பரில் இந்தப் படம் வெளியாகிறது.
source https://cinema.vikatan.com/tamil-cinema/four-movies-produced-by-suriya-including-jai-bhim-to-head-for-ott-release
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக