இந்திய மகளிர் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அபாரமாக விளையாடி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா அணியைத் தோற்கடித்து அரையிறுதிப் போட்டியில் நுழைந்தது. அரையிறுதியில் அர்ஜென்டினா அணியிடம் போராடித் தோல்வியடைந்தது. ஆனாலும் வெண்கலப் பதக்கத்திற்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பிரிட்டன் அணியுடன் இந்திய அணி மோத இருக்கிறது. இந்நிலையில், இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு குஜராத் வைர வியாபாரி சாவ்ஜி தோலாகியா பரிசு அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகள் அனைவருக்கும் வீடு கட்டிக்கொள்ள ரூ.11 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் அவர்.
இது தொடர்பாக வைர வியாபாரி சாவ்ஜி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ``நமது மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள ரூ.11 லட்சம் வழங்கப்படும். போட்டியில் பதக்கம் வென்றால், அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள காரும் பரிசாக வழங்கப்படும்" என்று அவர் அறிவித்துள்ளார். மேலும் , ``பெண்கள் ஹாக்கி அணி வெற்றிபெற்றால், அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதாக அமெரிக்காவில் உள்ள என் சகோதரனின் நண்பர் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ளவர்கள் இந்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீராங்கனைகளை நாமும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். நாட்டு மக்களும் வீராங்கனைகளுக்கு உதவ முன் வருவதோடு ஊக்கப்படுத்தவேண்டும். இதன் மூலம் எதிர் வரும் போட்டிகளை அவர்கள் சிறப்பாக விளையாட உறுதுணையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
Also Read: ஒலிம்பிக்: `தலித் வீராங்கனைகளால் தோற்றோம்!’ - ஹாக்கி வீராங்கனையின் வீட்டுக்குமுன் அரங்கேறிய கொடூரம்
சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான சாவ்ஜி, இதற்கு முன்பு தொழிலாளர்களுக்கு பரிசுப்பொருள்கள் வழங்கியபோதும் இதேபோல செய்திகளில் இடம்பிடித்தார். தீபாவளி பரிசாக தன் ஊழியர்கள் 600 பேருக்கு கார்கள் வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார். இதுவரை மொத்தம் 1,700 ஊழியர்களுக்கு கார் வழங்கியதாக சாவ்ஜி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டும் வைரம் பட்டை தீட்டும் தொழிலாளர்கள், பொறியாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்களை கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சாவ்ஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
source https://sports.vikatan.com/sports-news/gujarat-business-man-announces-prize-for-indian-women-s-hockey-players
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக