Ad

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

வெளிநாட்டுக் கும்பலை ஏமாற்ற ரூ.39 லட்சம் கள்ள நோட்டு! - சிக்கிய மும்பை நகைக்கடைக்காரர்

வழக்கமாக வெளிநாட்டுக் கும்பல் சமூக வலைத்தளங்களில் பழகுபவர்களிடம் பணம், பரிசுப்பொருள் ஆசையை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்வது வழக்கம். அது போன்ற ஒரு மோசடியில் ஈடுபட நினைத்த கேமரூன் நாட்டு கும்பல் மும்பை ஜூவல்லரி உரிமையாளரிடம் மோசடி செய்ய நினைத்து ஏமாந்துள்ளனர். மும்பை மலாடு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கேமரூன் நாட்டை சேர்ந்த ஜான், ஸ்டீபன் ஆகியோர் அறை எடுத்து தங்கி இருந்தனர். அவர்கள் தங்கிய அறையை நகைக்கடைக்காரர் தரூன் என்பவர்தான் முன்பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் ஹோட்டலில் தங்கியவர்கள் வெளியில் சென்றுவிட்டு அறைக்கு திரும்பவில்லை. ஆனால் ஹோட்டல் அறையை காலி செய்ய வேண்டிய நேரம் வந்தது.

பிடிபட்ட கள்ள நோட்டுக்கள்

இதனால் ஹோட்டல் நிர்வாகம் தரூனுக்கு போன் செய்து இரண்டு பேரும் அறைக்கு திரும்பவில்லை என்றும் , அறையை காலி செய்துவிடவா அல்லது நீட்டிக்கவா என்று கேட்டுள்ளனர். உடனே தரூன் அறையை காலி செய்துவிடுங்கள் என்று தெரிவித்தார். ஹோட்டல் ஊழியர்கள் அறையை சுத்தம் செய்த போது உள்ளே பெரிய பேக் ஒன்று இருந்தது. அதில் 39.64 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. இது குறித்து ஹோட்டல் ஊழியர்கள் தரூனுக்கு போன் செய்து தகவல் கொடுத்தனர்.

உடனே அவை அனைத்தும் கள்ள நோட்டுக்கள் என்றும், அவற்றை குப்பையில் போட்டுவிடும்படியும் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். அதோடு ஜூவல்லரி உரிமையாளர் தரூனையும் பிடித்து சென்று விசாரித்த போது ``கேமரூன் பிரஜைகள் இரண்டு பேர் சமூக வலைத்தளத்தில் அறிமுகமானார்கள். அவர்கள் தாங்களும் ஜூவல்லரி தொழில்தான் செய்வதாக தெரிவித்தனர்.

கள்ளநோட்டு

அவர்கள் தங்களிடம் 70 மில்லியன் டாலர் இருப்பதாகவும், அவற்றிற்கு ரூ.2 ஆயிரம் இந்திய நோட்டுக்களை ஏற்பாடு செய்து கொடுத்தால் 20 சதவீதம் கமிஷன் கொடுப்பதாக தெரிவித்தனர். இதற்கு தரூன் சம்மதித்தார். உடனே அவர்கள் இரண்டு பேரும் மும்பை வந்தனர். இரண்டு பேரும் தங்குவதற்கு ஹோட்டலில் தரூன் அறை ஏற்பாடு செய்து கொடுத்தார். உடனடியாக 39.64 லட்சம் அளவுக்கு 2 ஆயிரம் நோட்டுக்கள் தரூனிடம் இல்லை. இதனால் அவசரமாக தேவையான கள்ள நோட்டுக்களை அச்சடித்து கொடுத்துள்ளார். ஆனால் அவை கள்ள நோட்டுக்கள் என்று தெரிந்ததும் கேமரூன் பிரஜைகள் ஹோட்டலை காலி செய்துவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.



source https://www.vikatan.com/news/crime/mumbai-jeweler-arrested-for-printing-rs-39-lakh-counterfeit-note

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக