கோவிட் தடுப்பூசி (கோவாக்சின்) முதல் தவணை போட்டுக்கொண்டேன். இரண்டாவது தவணை போட்டுக்கொள்ள வேண்டிய இடைவெளியில் அதைப் போடவில்லை. இப்போது எங்கு சென்றாலும் தடுப்பூசி ஸ்டாக் இல்லை என்கிறார்கள். இரண்டாம் தவணைக்கான காலக்கெடு தாண்டிவிட்டது. இந்நிலையில் நான் தடுப்பூசி கிடைக்கும்போது இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாமா அல்லது மீண்டும் முதல் டோஸிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமா?
- சுப்பிரமணி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.
``எல்லாத் தடுப்பூசிகளிலுமே முதல் டோஸ் போட்டுக்கொண்டு, அடுத்த டோஸ் போடுவதில் தாமதம் ஏற்படுவதை `லெஃப்ட் ஓவர்' அல்லது `மிஸ்டு வாக்சின்' என்று சொல்வோம். மீண்டும் எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது போட்டுக்கொள்வதுதான் நல்லது. அதற்காக முதல் டோஸிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பது எல்லாத் தடுப்பூசிகளுக்கும் பொருந்தாது.
கோவிட் தடுப்பூசியைப் பொறுத்தவரை அது அறிமுகமாகி இன்னும் ஒரு வருடம்கூட முடியவில்லை என்பதால் நேரம் கிடைக்கும்போது இரண்டாவது டோஸை மட்டும் போட்டுக்கொள்ளுங்கள். முதல் டோஸிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் விஷயத்தில் கொஞ்சம் கால தாமதம் ஆனாலும் தடுப்பூசி கிடைக்கும்போது தவறாமல் இரண்டாவது டோஸை போட்டுக்கொள்ளலாம், தவறில்லை.
Also Read: Covid Questions: பென்சிலின், அனால்ஜின் மருந்துகள் அலர்ஜி; நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
ஆனால் ஒரு வருடத்துக்குப் பிறகு இந்தத் தடுப்பூசிகள் குறித்த ஆய்வறிக்கை வரும். அதாவது முதல் டோஸ், இரண்டாம் டோஸ் போட்டுக்கொண்டு ஒரு வருடத்தில் இந்த நோய்க்கான எதிர்ப்பாற்றல் எப்படியிருக்கிறது என்பது குறித்த அந்த ஆய்வறிக்கை வந்த பிறகுதான், ஃப்ளூ வாக்சின் போலவே, கோவிட் தடுப்பூசியையும் வருடந்தோறும் போட்டுக்கொள்ள வேண்டுமா என்பது பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். இப்போதைக்கு முதல் டோஸ் எந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டீர்களோ, இரண்டாவது டோஸிலும் அதையே போட்டுக்கொள்ளுங்கள். தடுப்பூசிகளை மாற்றிப் போட்டுக்கொள்வது இன்றைய சூழலுக்குச் சரியானதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவும்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/is-it-need-to-start-from-first-dose-again-if-i-missed-my-due-for-second-dose-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக