Ad

வெள்ளி, 23 ஜூலை, 2021

சிவகங்கை: `மணல் கடத்தல்; திமுக கொடி கட்டினால் தடுக்க மாட்டார்கள்!’ - அமமுக-வினர் சிக்கியது எப்படி?

சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூர் சோதனைச்சாவடியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் நம்பர் பிளேட் இல்லாத மணல் லோடு லாரி ஒன்று வந்திருக்கிறது. அந்த லாரியை போலீஸார் நிறுத்திச் சோதனையிட முயன்றபோது, அந்த லாரி நிற்காமல் அதிவேகமாகச் சென்றிருக்கிறது. இதையடுத்து, அங்கு பணியிலிருந்த காவலர்கள் பரோஸ்கான், திவாகர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் அந்த லாரியை விரட்டிச் சென்றிருக்கிறார்கள். போலீஸார் துரத்துவதை அறிந்த லாரி டிரைவர் மேலும் அதிவேகமாக லாரியை இயக்கினார். இதில், லாரியின் பின்புறக் கதவு திறந்து மணல் சிதறியது.

லாரிக்குச் சரிசமமாக டூ வீலரை நெருங்கிச் செல்லும் போலீஸார், லாரி டிரைவரிடம், ``நிப்பாடிரு, வருத்தப்படுவ” என்று கூறினார்கள். இதற்கிடையேதான் லாரியின் பின்னே லாரிக்குப் பாதுகாப்பாக தி.மு.க கட்சிக்கொடி கட்டிய கார் ஒன்றும் அதே வேகத்தில் சென்றிருக்கிறது. ஒருகட்டத்தில் லாரியை நெருங்கிச் சென்ற போலீஸாரால் லாரியைப் பிடிக்க முடியவில்லை. இதற்கிடையே காரில் சென்றவர்கள் போலீஸாரின் இருசக்கர வாகனத்தை மறித்து, போலீஸாரிடம் `உங்க எஸ்.எஸ்.ஐ பேசுவதாக’க் கூறி போனை போலீஸாரிடம் கொடுத்திருக்கின்றனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடந்துள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக திருவேகம்பத்தூர் போலீஸார் வழக்கு பதிவு ஏதும் செய்யவில்லை.

சினிமாவை விஞ்சும் அளவில் நடைபெற்றிருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். வீடியோவை ஆதாரமாகக்கொண்டு சருகணி பிர்கா வி.ஏ.ஓ சந்திரா திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணையில், மணல் கடத்திலில் ஈடுபட்ட நபர்கள் தேவகோட்டை அருகே புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஜயனும், சிறு நல்லூரைச் சேர்ந்த பிரபுவும் என்பது தெரியவந்தது.

சிறு நல்லூரில் பதுங்கியிருந்த பிரபுவை போலீஸார் கைதுசெய்தனர். முக்கியக் குற்றவாளியான விஜயனைத் தேடிவருகின்றனர். இதற்கிடையே திமுக கட்சிக் கொடி கட்டியிருந்த காரில் வந்த விஜய் என்பவரைக் கைதுசெய்தனர். காரில் வந்தவர்கள் திமுக கட்சியினர் இல்லை. அமமுக கட்சியைச் சேர்ந்தவர்கள். திமுக கொடியைக் கட்டிக்கொண்டு மணல் திருட்டில் ஈடுபட்டதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

Also Read: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி: மருத்துவ அதிகாரியின் சர்ச்சை ஆடியோவும்; டீனின் விளக்கமும்!

இது பற்றி சிவகங்கை எஸ்.பி செந்தில்குமார் கூறும்போது, ``தி.மு.க கொடிகட்டிய காரில் வந்தவர்கள் முதலில் தி.மு.க-வினரே இல்லை. காரில் வந்தவர்கள் அ.ம.மு.க-வைச் சேர்ந்தவர்கள். இருவரில் ஒருவர் அ.ம.மு.க-வின் கிளைச் செயலாளராக இருக்கிறார். திருட்டு வேலையைச் செய்யும் இவர்கள், தி.மு.க கொடியைக் கட்டிக்கொண்டு லாரிக்கு பாதுகாப்பாக வந்தால், செக்போஸ்ட்டில் லாரியை போலீஸார் பிடிக்க மாட்டார்கள் என்றே காரில் தி.மு.க கொடி கட்டிக்கொண்டு வந்துள்ளனர். அதோடு, திருவேகம்பத்தூர் செக்போஸ்ட்டிலிருந்து அடுத்த இரண்டு கிலோமீட்டரில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை லிமிட் வந்திருக்கிறது. முப்பையூர் தாண்டி திருவாடனைப் பகுதியிலிருந்து மணலைக் கடத்திக்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் எஸ்.எஸ்.ஐ மணல் கடத்தல்காரர்களுக்கு துணை போகியிருக்கிறார் என்பது தவறானது.

துரத்திச் சென்ற காவலர்களிடம் எஸ்.எஸ்.ஐ மோகன், `துரத்திச் சென்று ஏதேனும் விபத்து ஏற்பட்டுவிடக் கூடாது. அதனால், வண்டி எண்ணைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த செக்போஸ்ட்டில் பிடித்துவிடுவோம்’ என்று கூறியிருக்கிறார். அந்தநேரத்தில் அதை தேவகோட்டை டி.எஸ்.பி கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். அவர் டிரான்ஸ்ஃபர் வேலையில் இதை விட்டுவிட்டார். பரோஸ்கானும் குடும்பப் பிரச்னையில் தொடர் விடுமுறை எடுக்க, இந்த வழக்கு பற்றித் தெரியாமல் போனது. தொடர்ந்து, மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/in-sivagangai-ammk-cadres-used-dmk-flag-in-car-for-sand-theft

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக