Ad

வெள்ளி, 23 ஜூலை, 2021

போராட்டமே வாழ்க்கை... ஒற்றை மனுஷியாக ஜுடோ களத்தில் குதிக்கும் சுஷிலா தேவி யார்?

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜுடோ போட்டியில் ஆட இந்தியா சார்பில் ஒரே ஒரு வீராங்கனை மட்டுமே தேர்வாகியிருக்கிறார். 26 வயதாகும் சுஷிலா தேவி லிக்மபம் எனும் அந்த வீராங்கனை இந்த உயரத்தை எட்டுவதற்கு ஏகப்பட்ட சிரமங்களை கடந்து வந்திருக்கிறார்.

சுஷிலா தேவியின் சொந்த ஊர் மணிப்பூர். விளையாட்டு வீராங்கனை எனும் முன்னுரிமையில் கிடைத்த காவலர் பணியையும் கவனித்துக் கொண்டேதான் ஜுடோ போட்டியிலும் ஆடி வருகிறார். ஜுடோ போட்டிகளில் ஆடுவதற்கு பெரியளவில் நிதியுதவிகள் செய்யப்படுவதில்லை என்பதால் சொந்த பணத்தை செலவழித்தே உலகமெங்கும் நடைபெறும் தொடர்களில் பங்கேற்று வந்திருக்கிறார். சில நேரங்களில் வெறும் ரொட்டியையும் தண்ணீரையும் மட்டுமே அருந்திவிட்டு ஜுடோ களத்திற்கு சென்றிருக்கிறேன் என சுஷிலாவே கூறியிருக்கிறார்.

இப்படியான கடினமான சூழலிலும் சிறப்பாக பெர்ஃபாம் செய்திருக்கும் அவர் பல பதக்கங்களையும் குவித்திருக்கிறார்.

சுஷிலா தேவி
2010-ல் காமென்வெல்த் ஜுடோ சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருந்தார். 2011 இளையோருக்கான ஆசிய போட்டியில் தங்கம், 2014 காமென்வெல்த் போட்டியில் வெள்ளி, 2016 மற்றும் 2018 இல் ஆசிய மற்றும் காமென்வெல்த் போட்டிகளில் தங்கம் என ஜுடோவில் பதக்க வேட்டையே நடத்தியிருக்கிறார்.

சிரமங்களை தாண்டி சாதிப்பதே சுஷிலா தேவியின் வழக்கம். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெறவும் பல தடைகளை எதிர்கொண்டார். ஒலிம்பிக்கிற்கான ஆசிய தகுதிச்சுற்று போட்டியில் ஆட சென்ற இந்திய ஜுடோ அணியில் இருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வர, ஒட்டுமொத்த அணியுமே தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. ஒட்டுமொத்த ஜுடோ அணியின் கனவுமே சிதைந்தது. ''எங்களால் முடிந்ததை முயன்றோம். இனி நடப்பது நடக்கட்டும்'' என்ற விரக்தியான நிலைக்கு சென்றார் சுஷிலா.

ஆனால், இந்த முறையும் இடர்பாடுகளை தாண்டி சுஷிலாவுக்கு ஒரு நல்ல செய்தி வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜுடோ சாம்பியன்ஷிப்பில் அவர் நன்றாக ஆடியிருக்க, அது தரவரிசை பட்டியலில் எதிரொளித்து தரவரிசையின் படி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு சுஷிலா தகுதிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜுடோ போட்டியில் இந்தியா சார்பில் சுஷிலா மட்டுமே தேர்வாகியுள்ளார். 48 கிலோ எடைப்பிரிவில் அவர் பங்கேற்க இருக்கிறார். போராட்டங்களைத் தாண்டி இந்த இடத்தை அடைந்திருக்கும் அவர் டோக்கியோவிலும் தனது போர்க்குணத்தை வெளிப்படுத்துவார் என நம்பலாம்.

சுஷிலா தேவி இன்னும் சற்று நேரத்தில் அதாவது இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு 48 கிலோ எடைப்பிரிவில் ஹங்கேரி வீராங்கனையுடன் மோதுகிறார்!



source https://sports.vikatan.com/olympics/sushila-a-olympian-girl-with-fighting-spirit-who-is-she

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக