"என்னது... பிரசவ வலி இல்லாம இருக்குற ஊசியா... அதெல்லாம் வேணாம்!" என்று பிடிவாதமாக மறுத்து தலையாட்டிய புவனேஸ்வரியின் பாட்டிக்கு வயது எண்பதைத் தாண்டி இருக்கும். கூன் விழுந்த உடல், சுருக்கங்கள் நிறைந்த முகம்… ஆனால், குரலில் மட்டும் அத்தனை தெளிவு, தீர்க்கம்!
"பாட்டிம்மா... உங்க பேத்தி வலி தாங்க மாட்டேங்குறா... பனிக்குடம் வேற உடைஞ்சிருக்கு... வலி குறையுற ஊசியைப் போட்டா, அவங்களுக்கு சுலபமா இருக்கும். இதுல அம்மாவுக்கும், குழந்தைக்கும் பாதிப்பு இருக்காது!" என்று நான் சொன்ன எதையும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
"எனக்கு நாலு புள்ளைங்க... எல்லாம் வீட்டுலயேதான் பொறந்துச்சுங்க. இதோ இவ அப்பன் பொறந்தப்ப, உதவிக்கு கூட யாரும் இல்ல. எல்லாம் நானே தான் பாத்துக்கிட்டேன். இப்ப இவ மட்டும் வலி தாங்கமாட்டாளாமா?" என்றார் கோபமாக!
"பாட்டிம்மா... உங்க காலம் வேற, இந்த காலம் வேற..." என்று நான் சொல்ல ஆரம்பிக்கும்போதே இடைமறித்து, "பரவால்ல... நான் வந்து அவகிட்ட சொல்லிக்கறேன். நல்லா வலி தாங்குனாத்தான், நல்லா முக்கித் தர முடியும்" என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார் பாட்டி. ஆனால், இறுதியில் வென்றது புவனேஸ்வரியின் அழுகைதான்.
"டாக்டர்... பாட்டிகிட்ட நான் சொல்லிக்கிறேன். நீங்க மொதல்ல அவளுக்கு வலிக்காம இருக்குற ஊசியைப் போடுங்க" என்று மனைவியின் வேதனையைப் பொறுக்க முடியாமல் புவனேஸ்வரியின் கணவர் சொல்ல, பாட்டிக்கு அது பெரும் அதிருப்தியையும், மிகுந்த கோபத்தையும் அளித்தது என்பது மட்டும் புரிந்தது.
ஊசிக்குப் பிறகு பிரசவ வலி புவனேஸ்வரிக்கு சற்று குறைய, மருந்துகளுடன் சிறு பயிற்சிகள், துரித நடை ஆகியன கற்றுத்தரப்பட்டு, அத்துடன் தானும் நன்கு முயன்று, ஏறத்தாழ ஆறு மணிநேரம் கழித்து வாக்யூம் டெலிவரி மூலமாக மூன்றரை கிலோ எடையில் ஒரு அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் புவனேஸ்வரி. சிரித்தபடியே!
புவனேஸ்வரி பிரசவ அறையிலிருந்தபோது, ஒவ்வொரு முறையும் வெளியே வந்து அவளது முன்னேற்றங்களை நர்ஸ் சொன்ன போதெல்லாம் நம்பிக்கை இல்லாமலே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார் பாட்டி. பிரசவமான பிறகு,"பாட்டிம்மா… உங்க கொள்ளுப்பேரனைப் பாருங்க!" என்று நான் குழந்தையைக் காண்பித்தபோதும் கூட அவர் சமாதானம் ஆகவில்லை.
பணிகளுக்கிடையே பாட்டியும், அவரது கோபமும் மறந்து விட்ட நிலையில், நேற்று புவனேஸ்வரியின் அறைக்குள் ரவுண்ட்ஸ் செல்லும்போது, அங்கே பாட்டியைப் பார்த்தேன்.
"டெலிவரிக்கு பின்ன உங்களை நான் பாக்கவே இல்ல... கோபமெல்லாம் தீர்ந்துடுச்சா பாட்டிம்மா?" என்று சிரித்தபடி நான் கேட்க, "அதெல்லாம் ஒன்னுமில்ல… இன்னிக்கு கொள்ளுப்பேரனை வீட்டுக்கு கூட்டிட்டு போறோமில்ல... அதான், உன்னைப் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்" என்றவர் தொடர்ந்து, "எங்க காலத்துல வீட்டுல பிரசவம் ஆனதென்னமோ நிசம்தான். ஆனா ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு வலியும் சாட்டையில அடிச்ச மாதிரி இருக்கும். பொறுத்துட்டுத்தான் பிள்ளையைப் பெத்துப்போம். இவ பாரு... சிரிச்சுட்டே பிள்ளையைப் பெத்துட்டா. இதுவும் ஒரு அழகுதான... எல்லாம் உன்னாலதான்!" என்றார்.
நெகிழ்ச்சியுடன் அவரது கைகளை நான் பற்றிக்கொள்ள, தன்னிடமிருந்த கவர் ஒன்றைப் பிரித்து, அழகிய ரோஜாப்பூ ஒன்றை எனக்கு அளித்து, "தோட்டத்துல பூத்தது... நீ வெச்சிக்கோ... நல்லா இரு!" என்று வாழ்த்திவிட்டுப்போனார்.
எத்தனையோ பாராட்டுகளும், பரிசுகளும், விருதுகளும் தராத மன நிறைவை, புன்னகையை, இதுபோன்ற ஒரே ஒரு ஒற்றை ரோஜா தந்து விடுகிறது என்பதுதான் உண்மை. இதுபோல ஆயிரக்கணக்கான ஒற்றை ரோஜாக்களை உலகெங்கிலும் உள்ள மகப்பேறு மருத்துவர்களுக்கு இந்த புன்னகைப் பிரசவங்கள் பெற்றுத்தந்து கொண்டிருக்கின்றன.
எல்லாம் சரி… வலி இல்லாமல் பிரசவம் சாத்தியம்தானா, இதனால் பிரச்னைகள் ஏதும் இருக்காதா என்கிற கேள்வி எல்லோரின் மனதுக்குள்ளும் எழும். அதற்கான பதில்தான் இங்கே!
"வலி தாங்க முடியல டாக்டர்... ஏதாச்சும் பண்ணுங்க!"
"இடுப்பே கழண்டுடும் போலயிருக்கு... சிசேரியனே பண்ணிடலாம் டாக்டர் ப்ளீஸ்!"
"இன்னொரு பிரசவமா... வேணவே வேணாம்... இந்த வலியே ஜென்மத்துக்கும் போதும்!"
-
இவையனைத்தும் பிரசவ காலத்தில் கர்ப்பிணிப் பெண்களால் மட்டுமே பேசப்படும் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பெஷல் டயலாக்ஸ்!
உண்மையிலேயே மனிதனின் மிக அதிகமான வலிகளுள் ஒன்று பிரசவ வலி. பிரசவத்தின்போது கருப்பையின் சுருங்கி விரிதலையும், கருப்பை வாய் விரிதலையும் உண்டாக்கும் முதுகுத் தண்டுவட நரம்புகளே இந்த வலிக்குக் காரணம்.
இந்த சுருங்கி விரிதலுடன் கூடிய பிரசவ காலத்தை, ஸ்டேஜ் 1, 2, 3 என்று பிரிக்கும் மருத்துவ அறிவியல், இதில் முதல் ஸ்டேஜ் என்பதுதான் மிக நீண்ட, அதிக வலியுடன் கூடிய நிலை என்கிறது. அதாவது குழந்தையின் தலை நன்கு இறங்கி, கருப்பையின் வாய் லேசாக விரியும்போது தொடங்கும் முதல் ஸ்டேஜ் பிரசவ வலியானது, மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை எனக் கிட்டத்தட்ட ஆறிலிருந்து இருபது மணிநேரம் வரைகூட நீடிக்கும்.
அடுத்து வரும் இரண்டாம் ஸ்டேஜ், கருப்பைவாய் முழுமையாக விரிவடைவதில் தொடங்கி குழந்தை பிறக்கும்வரை என அரைமணியிலிருந்து ஒரு மணிநேரம் வரை நீடிக்கும். குழந்தை பிறந்தபின் நஞ்சு வெளியேறும் மூன்றாம் ஸ்டேஜானது அரைமணி நேரத்திற்குள்ளாக கருப்பை முற்றிலும் சுருங்க உதவுவதோடு பிரசவத்திற்கு பின்னான இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்தும்.
ஆக, முதல் மற்றும் இரண்டாம் ஸ்டேஜ்களில் ஏற்படும் அடுத்தடுத்த கருப்பையின் சுருங்கி விரிவடைதல்கள்தான் அதீத வலியை உண்டாக்கி, அதை தண்டுவட நரம்புகள் வழியாக மூளைக்கு உணர்த்தி, பிரசவிக்கும் பெண்ணை வாய்விட்டு கதற வைக்கிறது.
இந்த வலியை சுமந்து செல்லும் நரம்புகளின் வலி உணர்வை மட்டுப்படுத்தும் முக்கியமான வழிகளில் ஒன்றுதான் Epidural analgesia என்ற வலியில்லாத பிரசவ முறை. இந்த முறையில் மயக்கவியல் நிபுணர்களால் தண்டுவடத்தின் எபிட்யூரல் ஸ்பேஸ் எனும் இடத்தில், ஊசி மூலம் வலியை மட்டுப்படுத்தும் மருந்துகள் செலுத்தப்படுவதால், பிரசவ வலியின் தீவிரம் தற்காலிகமாகக் குறைகிறது.
வலியும் வேதனையும் குறைந்த நிலையில் பிரசவிக்க இருக்கும் கர்ப்பிணிப் பெண்ணால் இப்போது மருத்துவருக்கும், செவிலியர்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பு தரமுடியும். அதனால்தான் புவனேஸ்வரி போல சிரித்தபடியே தனது குழந்தையை பிரசவிக்கவும் முடிகிறது. இதனாலேயே இந்த எபிட்யூரல் என்ற வலியில்லாத பிரசவ முறை அனைத்து பெண்களுக்கும் உண்மையில் ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
சரி… இதுபோன்ற தண்டுவட ஊசியினால் பாதிப்புகள் எதுவும் இருக்காதா என்ற அடுத்த கேள்வி இயல்பாக நமக்கு எழுகிறதல்லவா? இந்த ஊசியின் காரணமாக பிற்காலத்தில் எந்தவிதமான முதுகு வலியும் ஏற்படாது என மயக்கவியல் நிபுணர்கள் உறுதி அளிக்கிறார்கள். ஆனால், ஒரு சிலருக்கு மட்டும் அலர்ஜி, தலைவலி, இரத்த அழுத்தக் குறைவு, நோய் தொற்று ஆகியவை ஏற்படக்கூடும். இவையும் எளிதில் குணப்படுத்த கூடியது மட்டுமே. பிரசவ வலியுடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை என்கிறார்கள் Anaesthesia நிபுணர்கள். அதிமுக்கியமாக இந்த வலி இல்லாத பிரசவ முறை 'abnormal uterine action' காரணமாக மேற்கொள்ளப்படும் சிசேரியனை பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனால், இந்த வலி இல்லா பிரசவ முறையைத் தேர்ந்தெடுப்பதும், நிராகரிப்பதும் எப்போதும் பிரசவிக்கும் தாயின் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும். ஏனென்றால் வலி என்பது தவிர்க்க முடியாதது என்றாலும், அதன் வேதனையை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்ததே!
எனவே, பெண்ணின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு, புன்னகைப் பிரசவங்களும், புத்தம் புதிய ரோஜாக்களும் மலர வாய்ப்பளிப்போம்!
source https://www.vikatan.com/health/healthy/what-is-epidural-analgesia-and-its-side-effects
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக