கரூரில் தடுப்பூசி மையத்திற்கு பூட்டு போட்டதால், பொதுமக்களுடன் கேட்டிற்கு வெளியே காத்திருந்த தடுப்பூசி இருந்த பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தடுப்பூசி மையம் பள்ளியில் நடைபெற்றதால், தலைமை ஆசிரியை உள்ளே பணி செய்ய அனுமதிக்காததால், அவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
Also Read: கரூர்: சாலையில் நின்ற கன்டெய்னர்; கடத்திய இளைஞர்! - சினிமாவை விஞ்சிய 'சேஸிங்' செய்து மீட்ட போலீஸ்
கரூர் மாவட்டத்தில் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று பொதுமக்களுக்கு செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தடுப்பூசி மையங்களில் 1,200 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படவுள்ளாதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், கரூர் நகர் பகுதியில் உள்ள நகராட்சி பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் 400 நபர்களுக்கு கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாகச் சொல்லப்பட்டது. இதனால், இம்மையத்தில் அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போட வந்து குவிந்தனர். தடுப்பூசி மையத்தில் சுமார். 300 பேர் முதல்கட்டமாக உள்ளே அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணி துவங்கியது.
மேலும், 400 தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், மீதமுள்ள 100 தடுப்பூசிக்காக பொதுமக்கள் தடுப்பூசி மையத்திற்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் தடுப்பூசி மையத்திற்கு பூட்டு போட்டு சாவியை எடுத்துச் சென்றனர். இதனால் கொதிப்படைந்த மக்கள், 'பூட்டைத் திறந்து உள்ளே அனுப்புங்க' என்று அதிகாரிகளிடம் கேட்டபோது, 'யாரிடமும் சாவி இல்லை' என பதிலளித்தனர். இதனால், தடுப்பூசி மையத்திற்கு கொண்டு வரப்பட்ட தடுப்பூசி கொண்டு செல்ல முடியாமல் வெளியே காத்திருந்த பொதுமக்களோடு தடுப்பூசி பெட்டியும் காத்திருந்தது.
மையத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய அதிகாரிகளால் பொதுமக்களுடன் தடுப்பூசியும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து சுகாதாரத்துறையினர் தடுப்பூசியை கேட்டிற்கு சுவரின் மேல்புறமாக கொடுக்குமாறு கூறி, தடுப்பூசி பெட்டியை வாங்கி சென்றனர். இதற்கிடையில், தடுப்பூசி போடும் மையம் அமைந்துள்ள இடம் நகராட்சி அரசு பள்ளி என்பதால், பணிக்கு வந்த தலைமையாசியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் உள்ளே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.பள்ளியின் வளாகத்திற்கு முன்பு காத்திருந்த ஆசிரியர்களையே உள்ளே அனுமதிக்கப்படாததால், பள்ளி தலைமையாசிரியை, அங்கிருந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினருடன் தங்களை உள்ளே அனுப்புமாறு வாக்குவாதம் செய்தார்.
இன்னொருபக்கம், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தடுப்பூசி மையத்திற்கு உள்ளே இருந்து வெளியேற முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். கோவாக்சின் 2 ஆம் கட்ட தடுப்பூசி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கரூர் மாவட்டத்தில் செலுத்தப்படாததால், ஒரேநேரத்தில் ஏராளமானோர் கூடியதே இந்த குளறுபடிகளுக்கு காரணம் என்று மக்களே பேசிக்கொண்டனர். இந்த நிலையில், 'தடுப்பூசி ஸ்டாக் இல்லாத காரணத்தினால், இன்று (15 - ஆம் தேதி) தடுப்பூசி போடப்படவில்லை' என்று அறிவிப்பு செய்திருப்பது, பொதுமக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/controversy/covaxin-demand-in-karur-district-vaccine-center-closed
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக