Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

``தமிழகத்தில் குழந்தை திருமணம் நடத்தப்பட்டால் வழக்கு பாயும்!" – அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை!

தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சார்ந்த பணிகள் குறித்த தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட தென் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

முதியோர் இல்லத்தில் ஆய்வு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு சமூக நலன் மற்றும் மகளிர் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் சுவரொட்டிகளை வெளியிட்டார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள், மகளிருக்கான திட்டங்கள், குழந்தைகளுக்கான திட்டங்களில் முக்கியதுவம் செலுத்தவேண்டியது பற்றி எடுத்துக்கூறினார்.

இதையடுத்து, குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குழந்தைத் திருமணம் நடத்தபடுவதால் பெண்களுக்கு உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே குழந்தைத் திருமணம் நடத்தக்கூடாது என்பதைப் பற்றி பெற்றோர்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீறி குழந்தை திருமணத்தை நடத்தினால் காவல்துறை, சமூகநலத்துறை இணைந்து குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின்கீழ் கட்டாயம் வழக்கு பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இது குறித்து பாதிக்கப்படும் குழந்தை அல்லது பெற்றோர் ’1098’ என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

முதியோர் இல்லத்தில் ஆய்வு

தமிழகத்தில் திருமண உதவித்தொகை திட்டத்தில் நிலுவையில் இருந்த 20 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, தற்போது அந்த 20 ஆயிரம் நபர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்குப் படிப்படியாக வழங்கப்படும். கொரோனா நோய் தொற்றால் பெற்றோர் இரண்டு பேரையும் இழந்தவர்கள், தாய் அல்லது தந்தை யாரேனும் ஒருவரை இழந்தவர்கள் என சுமார் 1,000 குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/minister-geetha-jee-van-warned-the-people-who-encourage-the-child-marriage

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக