Ad

திங்கள், 19 ஜூலை, 2021

`ஸ்டெர்லைட் ஆலைக்கு கூடுதல் அனுமதி அளிக்கக்கூடாது!' - ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கொரோனா இரண்டாவது அலையாக கோரத் தாண்டவம் ஆடி வந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. பல தனியார் அமைப்புகள் மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வழங்கி வந்தது. இந்நிலையில், ’ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தர தயாராக இருக்கிறோம். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என மத்திய, மாநில அரசுகளுக்குக் கடிதம் அனுப்பியதுடன், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவையும் தாக்கல் செய்தது வேதாந்தா.

ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை

இதையடுத்து, ஆக்ஸிஜன் தேவையை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், ஆக்ஸிஜன் தயாரிப்பைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுவையும் அமைத்தது. கடந்த மே 5-ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திகாக துவக்கப்பட்டது. ஆலையில் இருந்தது தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, இதுவரை சுமார் 650 டன் மருத்துவ பயன்பாட்டிற்கான திரவ ஆக்ஸிஜனும், 350 டன் வாயு நிலையிலான ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

வரும் ஜூலை 31-ம் தேதியுடன், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மேலும் 6 மாதம் அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது வேதாந்தா. இதையடுத்து, மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தியைக் காரணம் காட்டி கூடுதல் அவகாசம் கேட்டால் அனுமதி அளிக்கக்கூடாது” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், ‘ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர்’ இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்களில் பேரணியாக வந்தனர்.

ஆர்ப்பாட்டம்

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆட்சியர் அலுவலக நுழைவு பகுதிகளில் ’வஜ்ரா’ வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், ஆட்சியர் அலுவலக பிரதான வாயிலில் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலத்திற்கு வருபவர்கள், கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Also Read: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ஒரே நாளில் கோரிக்கையை ஏற்று பணிநியமன ஆணை வழங்கிய தூத்துக்குடி ஆட்சியர்

பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீஸார், தடுப்பு வேலிகளை அமைத்து கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களில் 20 பேரை மட்டும் ஆட்சியரை சந்திக்க அனுமதியளித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பினர், ”கொரோனா பெருந்தொற்று மிகவும் குறைந்து வருகிறது. தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாத நிலையிலையே நிலவுகிறது. இந்நிலையில், தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூடப்பட்டது. ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கப்பட்ட அனுமதி வரும் ஜூலை 31-ம் தேதி தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குப் பிறகு எந்தவொரு காரணத்தைக் காட்டியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கக்கூடாது.

போராட்டம்

அப்படி அனுமதி அளித்தால், மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும். தமிழகஅரசு, ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கக் கூடாது. தேர்தல் சமயத்தில் முதல்வர் அளித்த வாக்குறுதிப்படி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக தூத்துக்குடி மண்ணில் இருந்தது அகற்றிட வேண்டும். இது தொடர்பாக, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். தூத்துக்குடியில் 13 அப்பாவிகளின் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் நினைவாக தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் நினைவகம் அமைக்க வேண்டும்” என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/no-additional-permits-should-be-granted-for-the-sterlite-plant-the-protesters-on-collector-office

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக