Ad

புதன், 14 ஜூலை, 2021

புத்தம் புது காலை: அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றிய காமராஜர்... கிங் மேக்கரின் தாயார் பேட்டி!

விருதுப்பட்டி (தற்போதைய விருதுநகர்) குமாரசாமி, சிவகாமி அம்மாள் தம்பதியினருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. 1903-ம் ஆண்டு, ஜூலை மாதம் 15-ம் தேதியன்று தங்களுக்குப் பிறந்த அந்த ஆண் குழந்தையான காமாட்சி ராஜா என்ற காமராஜர் தான் பிற்காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி வகித்து, சிறந்ததொரு தலைவராகவும், நாட்டிற்கே கிங் மேக்கராகவும் விளங்குவார் என்று!
ஒரு பெருந்தலைவரை, கர்மவீரரை, புனிதரைப் பெற்ற அந்த அன்னை சிவகாமி அம்மாளுடன் ஓர் இனிய பேட்டி.

1961-ம் ஆண்டு ஜூன் மாதம். விருதுநகர் தெப்பக்குளத்தை சுற்றிலும் கடைவீதிகள். அந்த வீதிகள் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்றன. அவற்றுள் செல்லும் சுலோசன நாடார் வீதி என்னும் அந்த சின்னஞ்சிறு சந்துக்குள்ளே தான், காமராஜரைப் பெற்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வசித்து வந்தார்.

மிகச் சாதாரணமான எளிய இல்லம். அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் சிவகாமி அம்மையார்படுத்திருந்தார். சின்ன இடம். நான்கு பக்க சுவர்களிலும் தேசபக்தர்களின் படங்கள்... அவற்றிற்கிடையே வேல்முருகன் படம்.

கட்டிலில் படுத்திருந்த அவரைப் பார்க்க அந்த வார இதழ் நிருபர் சென்றார். நிருபரைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தார் அன்னை. மூச்சுத் திணறியது. என்றாலும்,"வாங்க ஐயா..." என்று அன்புடன் அழைத்தபடியே எழுந்துபோய், மின்சார விளக்கு சுவிட்சைப் போட்டார்.

பண்புமிக்க சிவகாமி அம்மாள் "நீங்கள் யார்?" என்று கூட கேட்கவில்லை.

நிருபர் அவரிடம் பேசத் தொடங்கினார்.

"அம்மா... தங்கள் திருமகனைப் பற்றி தாங்கள் ஏதாவது சொல்லவேண்டும்."

"நான் என்ன சொல்லப்போறேன்யா? எனக்கு வயசாகிட்டது. அதோட ரத்தக்கொதிப்பு வேற. பேசினா மூச்சுத் திணறுது. இரண்டு வருசம் உப்பில்லாத பத்திய சாப்பாடு சாப்பிட்டேன். இப்போ பரவாயில்ல. சாப்பாட்டில உப்பு கொஞ்சம் சேர்த்துக்கறேன்."

காமராஜர்

"சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா?"

"நல்லா சொன்னீங்கய்யா. அவன் மந்திரியாகி ஏழெட்டு வருஷம் ஆகுது. இதுவரைக்கும் நான் அங்கே ஒரு அஞ்சு தடவைதான் போயிருப்பேன்!"

"போனால் ஒரு மாதம், இரண்டு மாதம் தங்கிவிட்டு வருவீர்களா?"

"தங்கறதாவது ஒண்ணாவது... எப்பவாவது போனாலும், போன உடனே என்னை ஊருக்கு திரும்பப் பயணம் அனுப்புறதிலேயே குறியா இருப்பான். 'பட்டணம் பாக்கணும்னா சுத்திப் பாரு. திருப்பதிக்கு போகணும்னா போய்ட்டு வா. எல்லாத்தையும் பாத்துட்டு உடனே விருதுநகர் போய் சேரு'ம்பான்."

"இந்த வீட்டுக்கு வந்து உங்களை பார்ப்பாரா?"

"ஆறு மாசத்துக்கு ஒருக்கா வருவான். இப்படி வாசப்படி ஏறி உள்ளே வருவான். 'சௌக்கியமாம்மா?' அப்படின்னு கேட்பான். இப்படியே திரும்பிப் போயிடுவான். அவனுக்கு ஏதய்யா நேரம்?"

"மாதச் செலவுக்கு உங்களுக்கு பணம் அனுப்புகிறாரா?"

"அனுப்புறான். பெட்டிக்கடை தனக்கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்!"

"எவ்வளவு பணம் அனுப்புவார்?"

"120 ரூபாய்... அது பத்துமாய்யா? தண்ணி வரியே 13 ரூபாய் கட்டறேன். எப்பவும் மாசம் அந்த 120 ரூபாயேதான். அதுக்கு மேலே செலவு செய்யக்கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும்பான். நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம் தானேய்யா?! அப்பறம் ரேஷன் வந்தது பாருங்க. அப்ப இங்க வந்திருந்தான். 'என்னப்பா இப்படி கேப்பையும், கம்பும் போடறாங்களே... இதை எப்படி சாப்பிடறது... நெல்லு வாங்கி தரப்படாதா?'ன்னு கேட்டேன். 'நெல்லு பேச்சுப் பேசாதே. ஊருக்கெல்லாம் ஒண்ணு... நமக்கு ஒண்ணா'ன்னு கேட்டான். அவன் சொல்றதும் நியாயம் தானேய்யா? அதோட விட்டுட்டேன்."

"இந்த வீடு எப்ப கட்டினது?"

"என் மகன் பிறக்கறதுக்கு முந்தியே கட்டினது இந்த வீடு. எனக்கு பதினேழு வயசுல மகன் பிறந்தான். எனக்கு இருபத்தஞ்சு வயசுல, அவன் தகப்பனார் இறந்துபோனாரு. நிலம் நீர் எல்லாம் இருந்துச்சு. இவன் ஜெயில்ல இருக்கிறப்போ அதையெல்லாம் வித்து செலவழிச்சுட்டேன். இப்ப இந்த வீடு ஒண்ணுதான் மிச்சம்.''

"சின்ன வயதில் அவரைப் பற்றி?"

"சின்ன வயசுல இவனைப் படிக்க வைக்கணும்னு கொஞ்ச பாடா பட்டேன்... ஒரு வாத்தியாரை வீட்டுக்கு கூட்டிவந்து கூட படிக்க வைக்கச் சொன்னேன்!''

காமராஜர்

"ஏன் படிப்பை பாதியிலேயே விட்டார்?"

''எட்டு வரைக்கும் படிச்சான்.. அப்புறம் மூளைக்கு எட்டலேன்னு விட்டுட்டான். வீட்டில தங்கவே மாட்டான். தலை முழுக வரமாட்டான். பாடாப் படுத்துவான். கொட்டற மழையில எங்க போவானோ, எங்க திரிவானோ, வலைபோட்டுத் தேடினாலும் அம்படமாட்டான். சரி, வெயில் அடிச்சா வருவானா..? அப்பவும் வரமாட்டான். ஆனா ஒன்னு, எப்பவும் தலைவலின்னு படுத்ததில்லை. சின்னப்பிள்ளையில ரொம்ப கோபக்காரனா இருந்தான். ரொம்ப அடம் பிடிப்பான். இப்ப எங்க போச்சோன்னு தெரியல, அந்த கோபமெல்லாம். அப்படியிருந்தவன் இவ்வளவு அறிவாளி ஆயிட்டான்னு எனக்கே அதிசயமா இருக்குப்பா. அதோ இருக்காரே... அந்த முருகன்தான் இவனுக்கு இவ்வளவு அறிவைக் கொடுத்திருக்கணும்."

"நேரு இங்கு வந்தபோது உங்களைப் பார்த்து விட்டுப் போனாராமே... அவர் என்ன சொன்னார்?"

"சிரிச்சுட்டே சந்தோஷமா என் கையைப் பிடிச்சுக் குலுக்கினாரு. என்னமோ சொன்னாரு. என் மகனும் அப்போ பக்கத்துல தான் இருந்தான். அவங்க பாஷை எனக்கு என்ன புரியுதய்யா..? ஆனா வேற என்ன சொல்லியிருப்பாரு... எல்லாரையும் போல இந்த மகனைப் பெற்றெடுத்த நீங்க பாக்கியசாலின்னு தானே சொல்லியிருப்பாரு."

"இப்படி ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த நீங்கள் உண்மையிலேயே பாக்கியசாலி தான் அம்மா.." என்று நிருபர் சொன்னதும் அன்னையின் கண்கள் கலங்கிவிட்டன..

"ஏன் கண் கலங்குகிறீர்கள் அம்மா?"

"கலங்காம என்னய்யா செய்ய... துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை அவன் தாய் துறந்துட்டதைப் போல, நானும் என் மகனை இந்த நாட்டுக்காக துறந்துட்டு நிக்கறேன்" என்று கண்ணீருடன் நிருபரிடம் நெகிழ்ந்து, நம்மையும் நெகிழச் செய்கிறார் இந்த எளிய அன்னை!

பார் புகழும் தனது மகன் மீது, எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, எளிமையின் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த அன்னை சிவகாமி அம்மையார் ஒருமுறை சுகவீனமாக இருப்பதைக் கேள்விப்பட்டதும் கர்மவீரர் காமராஜர் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை போய் அங்கிருந்து காரில் விருதுநகர் சென்றடைந்தார்.

எம்.ஜி.ஆர்., காமராஜர்

விருதுநகரில் வீட்டுக்குள் நுழைந்த காமராஜர் மயங்கிய நிலையில் இருந்த தாயார் அருகில் அமர்ந்தார்.

"அம்மா அண்ணன் வந்திருக்கிறார்..." என்று சகோதரி தாயாரிடம் கூறியதும், மறுகணம் கண்விழித்துப் பார்த்தார் அன்னை.

பாசத்துடன் மகனை அந்தத் தாய் பார்த்ததும் அவர் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுக்க, காமராஜரோ எந்தவித சலனமும் இன்றி, மருந்து, உணவு ஆகியவற்றைப் பற்றி விசாரித்தார். பிறகு, "உடம்பை நல்லாப் பார்த்துக்கோ... நான் வரேன்" என்று கூறிவிட்டு புறப்பட...

"ஒரு வாய் சாப்பிட்டுப் போப்பா..." என்று அன்னை சிரமப்பட்டு கூறியிருக்கிறார்.

"வேண்டாம்... மதுரை போய் சாப்பிட்டுக் கொள்கிறேன்" என்று கூறி எழுந்த காமராஜர், அன்னையின் கண்களில் கண்ணீரைப் பார்த்து, பிறகு அங்கேயே உணவை உட்கொண்டிருக்கிறார்.

ஏறத்தாழ இருபத்தி ஐந்து வருடங்கள் கழிந்து வீட்டில் உணவருந்தி, மரணப்படுக்கையில் இருந்த தனது தாயின் கடைசி ஆசையை அப்போது நிறைவேற்றிய தலைவர் காமராஜர், பிறகு எப்போதும் போல மக்களைப் பற்றிய சிந்தனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாராம்!

- சொ.மு. முத்து அவர்கள் தொகுத்த 'காமராஜரின் வாழ்வும், சாதனைகளும்!' புத்தகத்திலிருந்து.


source https://www.vikatan.com/anniversaries/birth/remembering-kamarajar-on-his-birth-anniversary

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக