வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகேயுள்ள ஓர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவரின் கணவன், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். 14 வயது மகளுடன் வசித்துவந்த அந்தப் பெண்ணுக்கு வேலூர் கருகம்பத்தூரைச் சேர்ந்த 35 வயதுடைய ஞானசேகரன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தன்னைவிட ஐந்து வயது குறைந்தவராக இருந்தபோதிலும், ஞானசேகரனை மறுமணம் செய்துகொண்டார் அந்தப் பெண். இவர்களுடன் ஞானசேகரனின் அண்ணனான ஆட்டோ ஓட்டுநர் லோகநாதன் என்பவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் தனது தம்பியை மறுமணம் செய்துகொண்ட பெண்ணின் 14 வயது மகளைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் லோகநாதன். சற்றும் யோசிக்காமல், மகளைக் கட்டிக்கொடுக்க சம்மதித்துள்ளார் அந்தப் பெண்.
ஆட்டோ ஓட்டி வந்த லோகநாதனுக்கு 37 வயதாகிறது. ‘தவறிழைக்கிறோம்’ என்று தெரிந்தும் வீட்டுக்குள் வைத்தே சிறுமியைத் திருமணம் செய்து கொண்டு குடும்பமும் நடத்தியுள்ளார் லோகநாதன். இதில், அந்தச் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதுதொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சமூக நலத்துறை அலுவலர்கள் சிறுமியின் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விவரிக்க முடியாத இன்னல்களுக்கு அந்தச் சிறுமி ஆளாகியிருப்பதை சமூக நலத்துறை அலுவலர்கள் உணர்ந்தனர். இதையடுத்து, சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து, விரிஞ்சிபுரம் காவல் நிலையத்திலும் புகாரளித்தனர். போக்சோ மற்றும் வன்கொடுமை ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிறுமியின் தாய் மற்றும் அவரைத் திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநர் லோகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/crime/14-year-old-girl-married-to-37-year-old-auto-driver-in-vellore
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக