Ad

வெள்ளி, 23 ஜூலை, 2021

ரோமப் பேரரசையே புரட்டிப்போட்ட பிளேக்; உலகை உலுக்கிய கொள்ளை நோய்களின் வரலாறு - பகுதி 2

ரோமப் பேரரசை வீழ்த்திய பிளேக்: அத்தியாயம் -2

ஆன்டோனைன் பிளேக் (காலம் கி.பி. 165-180)

கிரேக்கத்தைப் போன்றே ரோமானியப் பேரரசும் வரலாற்றுப் பெருமை வாய்ந்த பழைமையான ஒரு பேரரசு. பண்டைய காலத்தில் இருந்த ஒரே பேரரசும் ரோம்தான். கலை, இலக்கியம், சமயம், மொழி, ஆட்சி, சட்டம், போர்முறை, தொழில்நுட்பம் என அனைத்தையும் இன்றுள்ள மேற்குலக நாடுகளுக்கு வழங்கிய ரோமப் பேரரசுக்கு அழையா விருந்தாளியாக வந்திறங்கியது ஆன்டோனைன் என்ற பிளேக் நோய்.

ஐரோப்பிய ஆப்பிரிக்க கண்டங்களோடு ஆசியா கண்டத்தை இணைக்கும் வணிகப் பாதையான பட்டுப்பாதையின் மூலம் சீனாவிடமிருந்தே இந்த நோய் பயணப்பட்டது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக கி.பி.165-ம் ஆண்டு காலத்தில், மத்திய கிழக்குநாடுகளுக்கு படையெடுத்துச் சென்றது ரோமானியப்படை. அங்குள்ள மெசபடோமியாவிலிருந்து திரும்பிவரும் வழியில் ரோமானியப்படை வீரர்களுக்கே இந்த நோய் முதலில் தொற்றியது. அதன் பின்னர், நாடுதிரும்பிய படைவீரர்கள் மூலம் ஒட்டுமொத்த ரோமப்பேரரசுக்குமே மிகத்தீவிரமாகப் பரவியது.

Rome

Also Read: சிர்கா முதல் கோவிட் வரை; உலகை உலுக்கிய கொள்ளை நோய்களின் வரலாறு! - பகுதி 1

அந்தக்கொடிய நோயின் தாக்குதலுக்கு அந்நாட்டு அரசர்களும் பலியாகினர். ஆம், மக்கள் என்றும் மன்னன் என்றும் பார்த்திட அறியாத அந்த நோய், ரோமானியப் பேரரசர்கள் மார்கஸ் அராலியஸ் ஆன்டனன்ஸ் மற்றும் இரண்டாம் லூசியஸ் வீரஸ் ஆகிய இருவரையும் பலிகொண்டது. அதனால்தான், நோயால் மாண்டுபோன பேரரசரின் பெயராலேயே அக்கொடிய நோய் `ஆன்டோனைன் பிளேக்' என்று அழைக்கப்பட்டது.

கி.பி. 165 முதல் 180 வரை தொடர்ந்த இந்த நோயால் சுமார் 50 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். அதாவது, அந்நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் ஒருபங்கு மக்களின் உயிர்களை ஆன்டோனைன் பிளேக் பறித்தது. வரலாற்று ஆய்வாளர்களின் கணக்குப்படி, இந்த நோய்த்தாக்கத்தால் ரோம் நகரில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 2,000 மக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

காய்ச்சல், தொண்டைவலி, வயிற்றுப்போக்கு, கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளுடன் தொடங்கிய இந்த நோயை பெரியம்மை என்றும் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எதுவாகினும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஆறாத வடுவாகவே வரலாற்றில் நிலைகொண்டுவிட்டது, இந்த ஆன்டோனைன் பிளேக் என்கிற கொடிய நோய்!

Rome

பிளேக் ஆப் சைபீரியன் (காலம்: கி.பி.250 – 270)

ஆன்டோனைன் பிளேக்குக்கு அடுத்தபடியாக 70 ஆண்டுகள் கழித்து ரோமானியப் பேரரசை உலுக்கிய மற்றுமொரு கொடிய நோய் சைபீரியன் பிளேக். இது கி.பி. 250-ம் ஆண்டு, ஈஸ்டர் தினத்தன்று எத்தியோப்பியா நாட்டில் பரவியது. அதன்பிறகு வேகமெடுத்த நோய், நேரடியாக ரோம் நகரைத் தாக்கியது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, கொப்புளங்கள், உடல்வலி என முந்தைய நோயைப் போன்றே, சைபீரியன் பிளேக்கும் கடுமையான அறிகுறிகளைக் கொண்டிருந்தது.

இந்த நோயிலிருந்து தப்பிக்க ரோம் நகர மக்கள் பெரும்பாலானோர் கிராமங்களை நோக்கி ஓடினர். இருப்பினும் விடாது துரத்திய நோய் அங்கேயும் பரவி பல்லாயிரக் கணக்கோரை கொன்று குவித்தது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் வரை தொடர்ந்து தாக்கிய நோயின் வீரியத்தால், ரோம் நகரில் மட்டும் அனுதினமும் சுமார் 5,000 பேர் செத்து மடிந்தனர். ஏற்கெனவே, ரோமப் பேரரசு பஞ்சம், வறட்சி, திடீர் வெள்ளம் மற்றும் எல்லையோரங்களில் இருக்கும் பாரம்பர்யப் பழங்குடிகளின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து சிக்கித் தவித்துக்கொண்டிருந்த நிலையில்தான் இந்த சைபீரிய பிளேக்கின் கோரத் தாண்டவம் ஒரே வீச்சாக மிச்சமின்றி சூறையாடியது. ரோமின் அப்போதைய கோரநிகழ்வுகளைக் கண்டு, அந்நாட்டின் கார்த்ரேஜ் நகரப் பாதிரியார் புனித சைபீரியன், ``உலகம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது போல் எண்ணினேன்” என்கிறார். இறுதியில் அவரின் பெயராலே இந்த நோய் `சைபீரியன் பிளேக்' என்றும் அழைக்கப்பட்டது.

Representational Image

இரண்டாவது மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் பரவி கடுமையாகத் தாக்கிய ஆன்டைனைன் மற்றும் சைபீரியன் போன்ற பிளேக் நோய்கள்தான் ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணம் என ஜெர்மனி, இத்தாலி, எகிப்து போன்ற நாடுகளில் தற்போது அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டுவரும் ஆராய்ச்சியாளர்கள் அடித்துக் கூறுகின்றனர். எத்தனையோ நாடுகளின் படையெடுப்புகளில் வீழாது, நெஞ்சுரத்தோடு போரிட்டு வெற்றிகண்ட மாபெரும் ரோமானியப் பேரரசு, கண்ணுக்குத் தெரியாத ஒரு நோயிடம் சரணடைந்து வீழ்ச்சியடைந்தது என்பது வரலாறு.

ரோமப் பேரரசை வீழ்த்திய நோய்களை இந்தத் தொடரில் பார்த்தோம், இதேபோல பைசன்டைன் பேரரசை வீழ்த்திய நோய் என்ன என்பது பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? காத்திருங்கள் அடுத்த பகுதி வரை!

- தொடரும்.


source https://www.vikatan.com/news/healthy/story-of-how-antonine-plague-and-siberian-plague-affected-rome-empire

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக