Ad

ஞாயிறு, 6 ஜூன், 2021

WTC21 Final இறுதிச்சுற்று – 1: தோனிக்கு நேர்மாறான அணுகுமுறை... வரலாறு படைக்குமா கோலியின் படை?!

ஆகஸ்ட் 22, 2011. லண்டனின் ஓவல் மைதானம், கடைசி பேட்ஸ்மேனான ஸ்ரீசாந்தின் பேட்டை ஏமாற்றி சுழன்றுக்கொண்டு ஸ்டம்ப்களை சாய்க்கிறது கிரேம் ஸ்வானின் பந்து. இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூம் முழுவதும் பேரமைதி. இரண்டு இன்னிங்ஸ் தோல்விகள் உட்பட விளையாடிய நான்கு டெஸ்ட்களையும் இழந்து அவமானகரமான தோல்வியை சந்தித்த கையோடு ஆஸ்திரேலியா செல்கிறது இந்திய அணி. அங்கே இதைவிட மோசமான தோல்வி. தோல்வி தந்த வலியை சற்றே கூடுதலாக்குகிறது இந்திய அணி பெற்றிருந்த உலகக்கோப்பை. ஆம், உலக சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலிய போன்ற அந்நிய தேசங்களில் ஒரு டெஸ்ட் கூட வெல்ல முடியாத, ஏன் டிரா கூட செய்ய முடியாத அணியாக உலக கிரிக்கெட் ரசிகர்களால் எள்ளி நகையாடப்படும் நிலை.

அன்றிலிருந்து சுமார் பத்து வருடங்கள் முன்னோக்கி பயணித்தோமானால் உலக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கின் அசைக்கமுடியாத எந்த மண்ணிலும் எந்த அணியையும் வீழ்த்த அனைத்து வல்லமையையும் பெற்ற இந்திய அணி மற்றொரு அணியான நியூஸிலாந்தை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் சந்திக்க இருக்கின்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை

மேற்கண்ட இரண்டு பத்திகளில் தான் எத்தனை எத்தனை முரண்கள். இந்த முரண்கள் அனைத்தையும் தனதாக்கியத்திற்கு பின்னால் எத்தனை வலிகள், போரட்டங்கள். வலிகளும் போராட்டங்களும் காத்திருப்புகளும் ஏமாற்றங்களும் நிறைந்ததுதானே டெஸ்ட் கிரிக்கெட். கிரிக்கெட்டின் மற்ற ஃபார்மேட்களை விட களத்தில் இருக்கும் வீரர்களுக்குக் கூடுதலாக சில பண்புகளும் திறன்களும் தேவைப்படுவதாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டை இவ்விளையாட்டின் ஆகச்சிறந்த ஃபார்மேட்டாக சந்தேகமில்லாமல் கூறிவிடலாம். ஒவ்வொரு செஸ்ஷனாக ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு இன்னிங்ஸாக வெற்றிக்கான கட்டமைப்பு எழுப்பப்படும் ஒரு மாரத்தானிற்கு இணையான ஒவ்வொரு டெஸ்ட்டுமே ஒரு வீரனுக்கு புதிய ‘டெஸ்ட்’ தான்.

இந்த ஃபார்மேட்டில்தான் தற்போது உலகின் நம்பர் 1 அணியாக இந்தியா திகழ்கிறது. வரும் ஜூன் 18 அன்று சௌதாம்ப்டனில் தொடங்கும் போட்டியில் நியூஸிலாந்து அணியை மட்டும் வீழ்த்தினால் டெஸ்ட் உலகக்கோப்பையை வெல்லும் முதல் அணி என்னும் வரலாற்று சிறப்புமிக்க சாதனையை படைக்கும் விராட் கோலியின் படை. இந்திய அணியின் இந்த எழுச்சி ஸ்போர்ட்ஸ் சினிமாக்களில் வருவது போல ஒரே பாடலில் சாத்தியமானதொன்றில்லை.

டிசம்பர் 30, 2014. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் பாதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது ஓய்வை அறிவிக்கிறார் எம்.எஸ்.தோனி. புதிய கேப்டனாக பதவியேற்கிறார் தோனியைவிட அனைத்து வகையிலும் நேர்மாறானவரான விராட் கோலி. புதிய கேப்டன், ஆட்டத்தின் மீதான அணியின் புதிய அணுகுமுறை, புதிய பயிற்சியாளர் என விடியலுக்கான அனைத்தையும் புத்தம்புதிய பாணியிலிருந்து தொடங்குகிறது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய அத்தியாயம்.

விராட் கோலி

அன்று இளம் ரத்தம் விராட் கோலியின் பேட்டிங் திறன் பற்றி உலகமே மெச்சினாலும் அவரின் ஆட்ட அணுகுமுறையை பற்றி ஏனோ பலரும் விமர்சித்தனர். மேலும் தோனி என்னும் மாபெரும் ஜாம்பவானின் இடத்திற்கு அவர் ஏற்றப்பட்டதால் எதற்கெடுத்தாலும் கோலியை தோனியுடன் ஒப்பீடு பார்க்கும் நிலை இருந்தது. ஆனால், விராட் கோலி கொஞ்சமும் அசரவில்லை. ரத்தத்திற்கு ரத்தம் என்னும் தனது பாணியை சிறிதும் கைவிடாமல் அதை தன் தலைமை பண்பில் பொருத்தி கேப்டன்சி திறனை அதற்கேற்றவாறு மாற்றம் செய்து உயர்த்தி மொத்த அணியின் அணுகுமுறையையும் தன்வழிக்கு மாற்றி செயல்படத்தொடங்கினார்.

2011-ம் ஆண்டில் நாம் உலகக்கோப்பையை வென்றாலும் அந்த அணியில் மிகப்பெரிய குறையொன்று இருந்தது. அது வேகப்பந்துவீச்சு. துணை கண்ட ஆடுகளங்களிலேயே பெரும்பாலான போட்டிகளை விளையாடி வந்த இந்திய அணியில் ஓர் சிறப்பான வேகப்பந்து வீச்சு கூட்டணி இல்லாத குறை ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க, இங்கிலாந்து தொடர்களில் வெட்டவெளிச்சமானது. விராட் கோலி இதை நன்கு புரிந்துக்கொண்டு தன் தலைமையின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பானதொரு வேகபந்துவீச்சு கூட்டணியை கட்டமைக்க தொடங்கினார். இதன் பலனிற்கு ஓர் சிறிய உதாரணம் சென்ற வருட நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர். இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி என உலகத்தரம் வாய்ந்த கூட்டணி ஒருபுறம் இருக்க கோலி தன் மேல்வைத்த தொடர் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார் இளம் வீரர் சிராஜ்.

இந்திய அணி

அடுத்ததாக இந்திய அணியின் லோயர் ஆடர் பேட்டிங். அஷ்வின், ஜடேஜா ஆகிய தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் ஏற்கெனவே இந்திய அணியில் உள்ளனர். இவர்கள் பத்தாது என்று வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோரை கோலி தொடர்ந்து பேக்அப் செய்ய அவர்களும் தங்களை தக்க சமயங்களில் நிரூபித்தனர்.

இதையெல்லாம்விட மாஸ்டர் ஸ்ட்ரோக் ரிஷப் பண்ட் என்னும் அசுரனின் மேல் கோலி வைத்த நம்பிக்கை. டி20 ஃபார்மேட்டுக்கு மட்டுமே அனைத்து தகுதிகளையும் உடைய ஒரு வீரன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எப்படி பொருந்துவான் என எண்ணிலடங்கா விமர்சனங்கள். அதற்கேற்றவாறு அவரும் கொஞ்சம் சொதப்பினார். ஆனால், பண்டுக்கே தன்மேல் நம்பிக்கை குறைந்தபோதிலும் கோலி பண்ட்டை நம்பியதன் விளைவிற்கு கடந்த சில தொடர்களில் நிகழ்ந்த வாணவேடிக்கைகளே சாட்சி.

இப்படி இந்திய அணியில் நிகழ்ந்த அசாத்திய மாற்றங்களும் அதனிடையே நிகழ்த்திய மகத்தான பயணத்தையும் வரும் நாள்களில் பார்ப்போம்.

- களம் காண்போம்...



source https://sports.vikatan.com/cricket/wtc21-final-india-vs-new-zealand-how-kohli-become-the-best-captain

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக