Ad

திங்கள், 21 ஜூன், 2021

``எப்பா.. என்ன உட்ருங்கபா..!’’ - நண்பனின் ஊசி பயம் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு குட்டி பிளாஷ்பேக்..

அழுகுரலும் அலறல்களும் நிறைந்த அந்த அறையில் நடுவே நின்றுகொண்டிருந்த அந்த பெண் மிரட்டுவதாகவும் கெஞ்சுவதாகவும் எங்களை அமைதிப்படுத்த முயன்று கொண்டிருந்தார்... என்னைப் போன்றே இன்னும் ஐந்தாறு பேரும் அமைதியாக அழுபவர்களை ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆம் நாங்கள் எல்கேஜி யூகேஜி படித்த அனுபவசாலிகள் அந்த 1டி வகுப்பறையில்.... அது ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு கையின் நீளமே போதுமாயிருந்த காலம்.

நாட்கள் செல்லசெல்ல அனுபவசாலிகளான நாங்கள் அந்த வகுப்பறையின் கேங்லீடர்களாகவும் எங்களுக்குள் இருப்பதற்கு பெயர் நட்பு என்றும் அறிந்திராத ஐந்தாம் வயது நாட்கள்... நட்பென்றாலும் அப்படியொரு நட்பு எங்கே எந்த பிரச்சனையானாலும் எங்களாலேயே நிகழ்த்தப்பட்டிருக்கும். ஏற்கனவே படித்துமுடித்திருந்த அ... ஆ... எங்களுக்கு டீச்சரிடம் நற்பெயரைச் தந்திருந்தது.

Representational Image

திடீரென வகுப்பிலிருந்து வெளியே கூட்டிவந்து எங்களனைவரையும் வரிசையாக நிற்க வைத்தனர். வெள்ளை சீருடையில் இரண்டு பேர் கையில் பெரிய பெட்டியுடன் எங்களது வகுப்பிற்குள் சென்று அமர்ந்தனர்.

ஒவ்வொருவராய் உள்ளே அழைக்கப்பட்டோம் வெளியே வரும் அனைவரும் மறந்திருந்த அழுகையுடனேயே வந்தனர். என் நண்பன் எனக்கு முன்னால் இருந்தான் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு வறட்சியாய் சிரித்துக் கொண்டோம் ... இப்போது வெள்ளை சீருடையில் இன்னுமொருவர் வரவே இரண்டிரண்டு பேராக செல்ல ஆரம்பித்தனர். உள்ளே நடப்பது என்ன என புரியாது திகில் அதிகமாகியிருந்த அந்த நேரத்தில் எங்களது எண் வந்திருந்தது...

இருவரும் உள்ளே சென்றோம்... இரண்டு டேபிள்களில் பெட்டிகள் பிரிக்கப்பட்டு ஊசிகள் சிதறிக் கிடந்தன... எனக்கோ ஊசி போட்டுக் கொள்வதில் பெரிய பயம் இருந்ததில்லை... அவர்கள் சொன்னது போன்று நின்று எனக்கான ஊசியைப் போட்டுக் கொண்டேன்...‌‌ பக்கத்து டேபிளில் இருந்த நண்பனோ கண்கள் கலங்கி உடல்முழுதும் நடுக்கத்துடன் இருந்தான். அவனைப் பிடித்திருந்த அவரது கைகள் ஊசியை எடுக்க சற்றே விலகியதுதான் தாமதம் உசேன் போல்ட்டாகிய நண்பனை துரத்த ஓடிய பலரில் நானுமொருவன்...

பிடிபட்ட வேங்கையிடம் வலிக்காதுடா... நான் பக்கத்துல நிக்கிறேன் டா போன்ற நம்பிக்கை வார்த்தைகள் கூட எங்களது நட்பை இரண்டு மூன்று மாதங்களுக்கு பிரித்தேவிட்டது....

Representational image

போட்டுக் கொண்டது தடுப்பூசி என்றும் அது எதற்காக என்றும் கூட எங்களுக்கு சொல்லப்படவில்லை. இருந்தாலும் பெரிதாக எங்களது பெற்றோரும் கூட கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

ஊசிக்கும் நண்பனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமே... இரத்த வகை தெரிந்து கொள்ள சென்றிருந்த போது விரலில் குத்தி இரண்டு சொட்டு இரத்தம் எடுப்பதற்குள் அந்த லேப் டெக்னீசியனின் கைகளில் ஏழெட்டு ஓட்டைகள், அவர்களிருவருக்குமான சண்டையில் தலையிட்டு என் கையிலும் நாலு ஓட்டைகளுக்கு பிறகுதான் அவனுக்கு டெஸ்ட்டே எடுக்க முடிந்தது...

இன்றோ கொரோனா காலத்தில் மாஸ்க் அணிவதெப்படி என்று மாநில முக்கிய பிரமுகரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று தேசியப் பிரமுகரும் டீவி மொபைல் என எல்லா ஊடகத்திலும் வந்து சொல்லியும் அது என்ன தடுப்பூசி, யார் தயாரிப்பு, என்ன வேதிப்பொருள் உள்ளது, சோதனைகளின் முடிவென்ன, பலன்களது சதமானமென்ன என்று தேடித்தேடி படிக்கிறோம்.

எப்படியோ என்னுடைய அலுவலக உதவியால் எனக்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டேன். பின்விளைவுகள் என்ற எந்த ஒரு வலியும் வராததால், தைரியமாக அம்மா அப்பாவிடம் சொல்லி தடுப்பூசி போட்டுக் கொள்ள வைப்பதற்குள் வந்த ஸ்ரீராமநவமி.....அமாவாசை.... பௌர்ணமி ... சித்திரை விசு.... என இரண்டு மூன்று வாரங்கள் கடந்திருந்தன...

இப்போது என் நண்பனுக்கான நேரம்... என்னப்பா உசேன் போல்ட்டு... இப்போ நாற்பது ஆயிடுச்சு அதனால் அவ்வளவு வேகமாக ஓடமாட்டாய்ல என்ற கிண்டலுடன் அவனையும் ஊசி போட்டுக் கொள்வதில் நன்மை பற்றி அரைமணி நேரம் மொக்கை போட்டுவிட்டு.... அப்ப நாளைக்கு போய் போட்டுட்டு வந்து சொல்லச்சொல்லி முடித்தேன்...

நான்கைந்து நாட்களாகவே மொபைலை எடுப்பதேயில்லை ... ஒருவேளை காய்ச்சல் வந்து விட்டதோ என்ற பயத்தில் அவன் மனைவிக்கு பேசினேன்...

Representational image

அவளும் அவளது பெற்றோரும் என அனைவரும் போட்டுக் கொண்டதாகவும் என் உசேன் போல்ட் .... மீண்டும் பயப்படுவதுபோல் காட்டிக் கொள்ளாமல் ஏதேதோ வேளை இருப்பதாகவும் எனக்கான உதவிக்காகவே செல்வதாகவும் கூறி இத்தனை நாட்களாக அந்தப்பக்கம் கூட வரவில்லை என்றாள்.

ஆதார் கார்டு மறந்துவிட்டேன்.... பிரசர் கொஞ்சம் அதிகமாருக்கே... காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கனும்... பக்கத்து தெருவுல நாய்க்கு நாலு குட்டி பிறந்திருக்காம்... நீ ஏன்டா போனே எடுக்கல... காலைல மறந்துபோய் இட்லிக்கு கறிக்கொழம்பு ஊத்தி சாப்டேன்டா... பெட்ரோல்விலை நூறுவாயாமே... என தினம்தினம் புதிது புதிதாக காரணங்கள்...

இன்று அவனை விடுவதாயில்லை நானே அவனுக்காக கோவின் ஆப்பில் பதிவுசெய்து அவனை கூட்டிச் சென்றேன். அவனது ஆதார் கார்டிலிருந்து ஏடிஎம் கார்டு வரை என்னிடமிருந்தது. போனையும் நானே வாங்கி வைத்துக்கொண்டேன்... எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்தது.... திடீரென மருந்து தீர்ந்து விட்டது... மதியம் இரண்டு மணிக்கு மேல் வாருங்கள் என்றனர்.... நண்பனின் முகத்தில் வெற்றி புன்னகை...

என்ன ஆனாலும் இன்று இவனை விடுவதாயில்லை... காத்திருந்து ஊசி போடும் அறையினுள்ளும் நுழைந்து விட்டோம்...

பிரசர் பாருங்க அதிகமாயிருக்கும்னு நினைக்கிறேன் என்றான்... அவர்களுக்கு பழக்கம்தான் போலிக்கிறது.... பரவாயில்லை சார் என்றனர்...

அச்சச்சோ முழுக்கை சட்டைல போட்டுக்கேன்... கலட்டுங்க சார்...

வலதுகைதான் எனக்கு ஸ்ட்ராங்க் ... பரவாயில்லை சார்... லெப்ட்லயே போட்டுக்கோங்க...

சார்... கொஞ்சம் கையை லூசா விடுங்க... நானும் எவ்வளவோ சொல்றேன் வெளில இருக்க லூசு எங்கங்க கேக்குது...

சார்... அசையாதீங்க... நான் எங்கங்க அசையறேன்... இதுலாம் டிசைனே அப்படிதான்...அந்த ஊசியை பார்த்ததுமே உடம்பு தானாவே ஆடுதுங்க... ஆக்ட்சுவலா என் பாடி ஸ்ட்ராங்தான் ஆனா கொஞ்சம் பேஸ்மெண்ட்தான்ங்க வீக்...

இது வலிதெரியாம இருக்கதான பஞ்சுல தேய்க்கிறீங்க..... இது வலிக்கல்லாம் செய்யாது சார்...

இந்த உரையாடல்களால ஆன டென்ஷன்ல உள்ளே நுழையும் போதே ....

சார்... போட்டாச்சு கெளம்புங்க... என்னது ஊசி போட்டுட்டீங்களா.....

..... இதைக்கேட்டது நானில்லை .....


- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/man-shares-about-his-friend-fear

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக