Ad

திங்கள், 21 ஜூன், 2021

புதுக்கோட்டை: `கடைக்கோடியில் இருப்பதால், அதிகாரிகள் வருவதில்லை'- ஒரு கிராமத்தின் குரல்!

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியிலிருக்கிறது ஏம்பல் கிராமம். ஏம்பலுக்கு அருகருகே மதகம், குருங்களூர், இரும்பாநாடு, திருவாக்குடி ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம்,கோர்ட், பொதுப்பணித்துறை அலுவலகம் என எந்த அலுவலகத்திற்கு செல்லவேண்டுமென்றாலும் பல கீ.மீ தூரம் பயணிக்க வேண்டும். அதுவும் இந்த அலுவலகங்கள் ஒவ்வொன்றும் அறந்தாங்கி, அரிமளம் என வெவ்வேறு திசையில் நீண்ட தொலைவில் இருப்பதால் பல்வேறு பணிகளுக்காக மக்கள் தினமும் அலைந்து திரிந்து அல்லல்பட்டு வருகின்றனர். இதன் காரமணாக ஒரு நாளில் முடிய வேண்டிய பணி பல நாட்களுக்கு இழுக்கிறது. பொதுமக்களின் இந்த அலைச்சல்களைப் போக்க அரிமளம், ஆவுடையார்கோயில், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 16 ஊராட்சிகளைப் பிரித்து ஏம்பலைத் தலைமையிடமாகக் கொண்டு தாலுகா மற்றும் ஒன்றியம் ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அரசிடம் இந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கோரிக்கை மனு

இதுபற்றி பேசிய ஏம்பலைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் பெரியதம்பி, " எங்கள் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலத்தில் கல்வி, சுகாதாரம், நீர் நிலைகள் மேம்பாடு, மக்களின் வாழ்வாதாரம் என எதுவுமே உயரவில்லை. அதை உயர்த்தும் அளவிலான எந்தத் திட்டங்களையும் எந்த அரசும் செயல்படுத்தவில்லை. கடைக்கோடியில் இருப்பதாலோ என்னவோ மாவட்ட அதிகாரிகள் யாரும் எங்கள் கிராமத்திற்கு வந்து செல்வதுகூட இல்லை. சாலை வசதிக்காகக்கூட கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. ஒவ்வொன்றையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு அலுவலகமும் வெவ்வேறு திசையில இருக்கு. தாலுகா அலுவலகத்துக்கு 16கி.மீ தொலைவுல இருக்க ஆவுடையார்கோயிலுக்குப் போகணும். அதுவே ஒன்றிய அலுவலகத்துக்கு 32கி.மீ தூரம் இருக்க அரிமளத்துக்குப் போகணும்.

புதுப்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் 20 கி.மீ, நீதிமன்றம், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு 37 கி.மீ அப்படின்னு தினமும் பல கி.மீ தூரம் மக்கள் அலையணும். அப்படியே அலைந்தாலும் உடனே கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறதில்லை. வீண் அலைச்சலும், பண விரயமும் தான் ஏற்படுகிறது. போக்குவரத்து வசதியும் ரொம்பவே குறைவு. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரொம்பவே கஷ்டப்படுறாங்க. வளர்ச்சித் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், அரசு நிர்வாகத்தை ஒருங்கிணைக்கவும் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், அறந்தாங்கி ஒன்றியங்களில் 16 ஊராட்சிகளைப் பிரித்து ஏம்பலைத் தலைமையிடமாகக் கொண்டு தாலுகா மற்றும் ஒன்றியம் ஏற்படுத்தித் தரவேண்டும்" என்கிறார்.

கார்த்திக் சிதம்பரத்தின் கோரிக்கை

ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த பேரின்பநாதன், "முன்னாள் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசாபாபதி எங்களின் கோரிக்கையை ஏற்றுக் கடந்த 2020 மார்ச்சில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஏம்பலை மையமாகக் கொண்டு தாலுகா அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து கோரிக்கை எழுப்பினார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்திடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கை மனுவைப் படித்துப் பார்த்தவர், உங்களின் கோரிக்கை நியாயமானது என்று கூறி உடனே தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்குக் கடிதம் அளித்துள்ளார். மாவட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளித்திருக்கிறோம். எங்களின் கோரிக்கையை மாவட்ட அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை அமைச்சர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் பார்வைக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியிருக்கின்றனர். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏம்பல் தாலுகா, ஒன்றியமாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதே மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/people-of-yembal-village-says-that-they-need-a-goverment-office-nearby-their-village

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக