Ad

வியாழன், 10 ஜூன், 2021

Covid Questions: இரண்டு தடுப்பூசிகள் கலந்து போடும் `வாக்சின் காக்டெயில்' ஆராய்ச்சிகள் எதற்காக?

கடந்த சில நாள்களாக 'வாக்சின் காக்டெயில்' என்ற வார்த்தையை அதிகம் கேள்விப்படுகிறேன். அதாவது முதல் டோஸ் ஒரு தடுப்பூசியும் அடுத்த டோஸ் வேறொரு தடுப்பூசியும் போடுவது தொடர்பான பேச்சுகள் கிளம்பியுள்ளன. இப்படி தடுப்பூசிகளை மாற்றிப்போடுவது சரிதானா?

- மலர்விழி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் விஜயலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.

``பிரிட்டனில் 3-வது அலைக்கான அறிகுறிகள் ஆரம்பித்திருக்கின்றன. உலகம் முழுவதும் தடுப்பூசித் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள்தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கிறது. ரத்தம் உறைதல் பற்றிய பயம் சிலருக்கு இருக்கிறது. வெளிநாடுகளில் சிலருக்கு அஸ்ட்ராஜெனெகா, சிலருக்கு ஃபைஸர், சிலருக்கு மாடர்னா வாக்சின்கள் கொடுக்கப்பட்டன. இங்கிலாந்தில் B.1.617 வைரஸ் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதன் தீவிரம் எப்படியிருக்கும் என்று அவர்களுக்கே இப்போது தெரியவில்லை.

பரிசோதனைகளை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்தில் அங்கே 3-வது அலை வருமா என்பது தெரிந்துவிடும். அந்த ஒரு மாதத்துக்குள் தடுப்பூசிகளை அதிகப்படுத்துவதன் மூலமும், இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் கொடுப்பதன் மூலமும் 3-வது அலையைத் தடுக்க முடியுமா என்பதுதான் இப்போது அவர்களின் கேள்வி. அதன் காரணமாக முதலில் ஃபைஸர் அல்லது மாடர்னா இரண்டில் ஏதேனும் ஒன்றை பூஸ்டர் டோஸாக கொடுக்கலாமா என்று யோசித்தார்கள்.

பூஸ்டர் டோஸ் கொடுப்பதன் காரணமே தடுப்பூசியின் செயல்திறனை நீட்டிக்கச் செய்வதுதான். தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புத்திறன் வருகிறதா இல்லையா என்பது சாமானியர்களுக்கான விஷயம். மருத்துவர்களைப் பொறுத்தவரை அதை 'டைட்டர்ஸ்' என்று சொல்வார்கள். அதாவது தடுப்பூசியின் செயல்திறன் மேலே போய் பிறகு குறைய ஆரம்பிக்கும். ஆக மேலே செல்லும் தடுப்பூசியின் செயல்திறனை மேலும் அதிகரிப்பதற்காகவே பூஸ்டர் கொடுக்கப்படும்.

Vaccine

Also Read: Covid Questions: தற்போது போடப்படும் தடுப்பூசிகள் உருமாறும் வைரஸ்களுக்கு எதிராகவும் வேலை செய்யுமா?

இந்நிலையில் வேறொரு தடுப்பூசியின் பூஸ்டரை கொடுக்கும்போது அதே செயல்திறன் இருக்குமா என்று தெரியாது.வெளிநாடுகளில் ட்ரையல் அடிப்படையில் இதைப் பரிசோதித்துப் பார்த்ததில் உயிர்ச்சேதமில்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது ஆபத்துகள் இல்லை, அதே நேரம் அதன் பலன்கள் பற்றியும் எதுவும் சொல்வதற்கில்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். அதிகரித்திருக்கும் ஆன்டிபாடி, பூஸ்டரால் உருவானதா அல்லது இரண்டாவது டோஸ் தடுப்பூசியால் வந்ததா என்றெல்லாம் தெரியாது. எனவே ஆய்வுகளின் முடிவுகள் வரும்வரை வாக்சின் காக்டெயில் சரியானதா, இல்லையா என்பதைச் சொல்ல முடியாது".

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/what-is-vaccine-cocktail-and-how-it-works-covid-questions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக