தி.மு.க அரசு பதவியேற்றது முதல் நிர்வாகத்திலும் அவற்றை நிர்வகிக்கும் அதிகாரிகள் நியமனத்திலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தலைமைச் செயலாளராக இறையன்பு, முதல்வர் ஆலோசனைக் குழுவில் உதயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளை நியமித்தது தொடங்கி மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் பேராசிரியர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோரை நியமித்த வரை தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் எழுந்துள்ளன. இவற்றைப் போல நீதித்துறையிலும் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர் நியமனத்திலும் மிகுந்த கவனமுடனே செயல்பட்டு வருகிறது என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஹசன் முகமது ஜின்னா நியமனத்தையும் பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.
நீதித்துறையின் மற்ற பிரிவுகளைத் தமிழக அரசே நியமனம் செய்துகொள்ளலாம் என்றாலும், குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நியமனத்தில் அவர் மீது எந்த குற்றங்களும் வழக்குகளும் இல்லை எனவும் அவரது நடத்தைகள் குறித்தும் நீதிபதிகளின் ஒப்புதல் பெற வேண்டும். அதன்பின்னரே தலைமை குற்றவியல் வழக்கறிஞரை அரசு நியமித்துக்கொள்ள முடியும்.
Also Read: வெ.இறையன்பு: தமிழ் உணர்வாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் - தலைமைச் செயலர் கடந்து வந்த பாதை!
தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஹசன் முகமது ஜின்னா 1977- ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அத்திக்கடை கிராமத்தில் பிறந்தவர். 1996- ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலை அகற்றப்பட்ட போது அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் கண்ணகி சிலையை அமைக்கக் காரணமாக இருந்தவர். மேலும், எத்திராஜ் கல்லூரி மாணவி ஷரிகா ஷா ஈவ் டீவ்சிங் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்ததோடு ஈவ் டீவ்சிங் தொடர்பாக முறையான சட்டம் உருவாகவும் காரணமாக இருந்தவர் வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னா.
யுனெஸ்கோவின் ஆசிய - பசிபிக் மண்டல மையம் உட்பட பல்வேறு முக்கிய குழுக்களில் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். மற்ற துறைகளைப் போலவும் குற்றவியல் துறையிலும் அரசின் நியமனத்திற்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு எந்தளவிற்கு ஹசன் முகம்மது ஜின்னா நியாயமாக நடந்துகொள்கிறார் என்பது அவரது செயல்பாடுகள் மூலமே அறிய வரும். மக்கள் பக்கம் நின்று சரியான தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே தற்போது வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னாவிடம் அனைவரும் எதிர்பார்ப்பது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/who-is-tn-government-criminal-lawyers-head-hassan-mohmed-jinnah
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக