சிவபெருமான் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் காரைக்காலில் ஐந்து நாள்கள் காரைக்கால் அம்மையாரின் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் பக்தர்கள் இல்லாமலேயே விழா முழுவதும் கோயில் வளாகத்துக்குள்ளேயே நடந்து முடிந்தது. இந்தாண்டும் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவுவதால் கடந்த ஆண்டைப் போலவே பக்தர்கள் இன்றி விழா முழுவதும் கோயிலுக்குள்ளேயே நடத்த முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் அரசியல் தலைவர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் பக்தர்கள் என அனைவரும் தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று, "சமூக இடைவெளி, முக கவசம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நெறிமுறைகளுடன் விழாவில் பக்தர்களை அனுமதிக்க உள்ளோம்" என்ற என்று காரை மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா அறிவித்துள்ளார். இது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் சிறப்புறத் திகழ்கிறார். அனைத்து நாயன்மார்களும் நின்ற திருக்கோலத்தில் காட்சி தர, காரைக்கால் அம்மையார் மட்டும் அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அருள்வது சிறப்புக்குரியதாகும். அத்தகைய அம்மையார் பிறந்து வளர்ந்த காரைக்கால் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் மாங்கனித் திருவிழாவைக் காணப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மாங்கனியை மையப்படுத்தி இவ்விழா நடைபெறுவதாலும், காரைக்கால் அம்மையார் மீது வீசப்படும் மாங்கனிகளைச் சாப்பிடுவதால் குழந்தைப்பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை ஐதிகமாக இருப்பதாலும், புத்திர பாக்கியம் பெற விரும்பும் தம்பதிகளும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வர்.
மாங்கனி திருவிழாவின் தொடக்கமாக கடந்த 21-ம் தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்று மாலை 7 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பரமதத்தன் மாப்பிள்ளை அலங்காரத்தில் எழுந்தருளினார். இவ்விழாவில் கோயில் நிர்வாக அதிகாரி காசிநாதன், அறங்காவலர் குழுத் தலைவர் கேசவன் மற்றும் உறுப்பினர்களும் உபயதாரர்களும் கலந்து கொண்டனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நிகழ்ச்சி முடிந்தவுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் 23-ம் தேதி புதன்கிழமையான இன்று மாலை பிச்சாண்டவர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. 24-ம் தேதி காலை பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடும், மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சியும், 25-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்விழா நாள்களில் நாமும் அம்மையாரை வணங்கி அருளைப் பெறுவோமாக!
source https://www.vikatan.com/spiritual/news/karaikal-mangani-festival-devotees-happy-as-they-are-allowed-for-darshan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக