பெருந்தொற்றுக்குப் பிறகும் தங்கள் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அலுவலகத்துக்கு வராமலேயே செய்து முடிக்கக் கூடிய பணிகள் அனைத்துக்கும் இது பொருந்தும்; ஆனால், அப்படிச் சாத்தியமுள்ள ஊழியர்கள் செலவு குறைவான பகுதிக்குத் தங்கள் இருப்பிடத்தை மாற்றினால், சம்பளம் குறைக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கலிஃபோர்னியாவின் மென்லோ பார்க்கில் அமைந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், ஜூன் 15-ம் தேதி தொடங்கி, ஃபேஸ்புக்கின் ஊழியர்கள் யார் வேண்டுமானாலும் work from home-க்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. ஒருவேளை அந்த ஊழியர்கள் செலவு குறைவான பகுதிக்குத் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டால், அதற்குத் தகுந்தவாறு அவர்கள் சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். மேலும், அவ்வப்போது அலுவலகத்துக்கு வந்து குழு மேம்பாட்டில் பங்கெடுக்க வேண்டும் என்றும் இப்புதிய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சம் 50 சதவிகித பணியாளர்களுடன் செப்டம்பர் முதல் வாரத்திலும், அக்டோபரில் முழுமையாகவும் ஃபேஸ்புக் தன்னுடைய அமெரிக்க அலுவலகங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது. 2021-ம் ஆண்டின் இறுதிவரை, தங்கள் வீடு அமைந்திருக்கும் பகுதியிலிருந்தும், வேறு பகுதிகளிலிருந்தும் பணியாற்றலாம் என்ற தளர்வை ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 31 நிலவரத்தின்படி ஏறத்தாழ 60 ஆயிரம் பேர் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். கடந்த ஆண்டு பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து அலுவலகங்கள் மூடியிருப்பதால் அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
Also Read: சரிகிறதா மார்க் சக்கர்பெர்க் சாம்ராஜ்யம்... இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் இல்லாமல் என்னவாகும் ஃபேஸ்புக்?
"அடுத்த ஐந்து முதல் பத்தாண்டுகளில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் பணியாளர்களில் 50 சதவிகிதம் பேர் தினமும் அலுவலகம் வராத பணியாளர்களாகவே இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் கடந்த ஆண்டு கூறியிருந்தார்.
வேறு நாடுகளுக்கு இடம்பெயரும் தங்கள் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையை ஃபேஸ்புக் அதிகரித்திருக்கிறது. இந்த மாத இறுதிக்குள், நிறுவனத்தின் எந்த நிலை ஊழியரும், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கோ, ஐரோப்பா, மத்திய கிழக்கு அல்லது ஆப்பிரிக்காவிலிருந்து பிரிட்டனின் எந்தப் பகுதிக்கும் இடம்பெயர்ந்து கொள்ளலாம் என்று ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, தொழில்நுட்பப் பிரிவு அல்லது பணியாளர் தேர்வு பிரிவிலுள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வசதி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2022-ல் ஃபேஸ்புக்கின் அனைத்து பணியாளர்களும், ஐரோப்பாவில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள், மத்திய கிழக்கு அல்லது ஆப்பிரிக்காவில் எங்கு வேண்டுமானாலும் நிரந்தமாக இடம் மாற அனுமதிக்கப்படுவார்கள்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றுவதில் வசதியைக் கண்டுவிட்ட பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதில், மற்ற முன்னணி டெக் நிறுவனங்கள் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்று அறிவித்தபோதிலும், சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறினால் சம்பளக் குறைப்புக்கு ஆளாக நேரிடும் என்று ஃபேஸ்புக்கைப் போலவே தெரிவித்துள்ளன.
source https://www.vikatan.com/business/tech-news/facebook-says-it-will-expand-remote-work-to-all-employees
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக