2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் மின்வெட்டு அதிகாரப்பூர்வமாகவே அமலில் இருந்தது. சென்னையில் இரண்டு மணிநேரமும், பிற மாவட்டங்களில் பல மணி நேரங்களும் மின்வெட்டு இருந்தது. காலையில் மக்கள் வேலைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்லும் நேரம் பார்த்து மின் தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் கோபத்துக்குள்ளானார்கள். தி.மு.க படுதோல்வியைச் சந்திப்பதற்கு மின்வெட்டும் ஒரு காரணமாக அமைந்தது. அதன் பிறகான அ.தி.மு.க ஆட்சியிலும் சிறிது காலம் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்தது. எப்போது மின்வெட்டு நிகழும் என்று தெரியாமல் நடக்கும் மின்வெட்டால் மக்கள் தவித்தாலும், மின்வெட்டு என்றால் தி.மு.க என்பதைப் போன்ற சித்திரத்தை அ.தி.மு.க ஒவ்வொரு மேடையிலும் தொடர்ந்து பரப்பிவந்தது.
இந்த நிலையில், 10 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளது. ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று மேற்கொண்டு வரும் பணிகள் அனைத்தும் பாராட்டப்பட, கண் பட்டதுபோல மின்வெட்டு பிரச்னையும் தலைதூக்குகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வருகிறது. மின்சாரத்துறைக்கு புகார் செய்தால், உடனடியாக ஆட்கள் வந்து சரிசெய்கிறார்கள். ட்ரான்ஸ்ஃபார்மர் பழுதாகியிருக்கும், வெடித்திருக்கும் என்கிறார்கள். சரிசெய்துவிட்டுச் சென்ற மறுநாளே மீண்டும் அதுபோல மின் தடை ஏற்படுகிறது.
மின்வெட்டு குறித்து நாம் முழுமையாக அறிவதற்கு சற்று காலத்தை பின்னோக்கிப் பார்க்க வேண்டியது அவசியம். இதுகுறித்து நம்மிடம் பேசிய மின்சார வாரிய ஊழியர் சங்கத்தினர், “தெர்மல் எனர்ஜி எனப்படும் அனல் மின் நிலையம், கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் அணுமின் நிலையம், ஹைட்ரோ எனப்படும் அணைகளின் நீரிலிருந்து கிடைக்கப்பெறும் மின்சாரம், காற்றாலை, சூரிய மின்சக்தி, இயற்கை எரிவாயு மற்றும் குப்பைகளை மறுசுழற்சி செய்வது ஆகியவற்றிலிருந்துதான் தமிழகத்தின் மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
வடசென்னை உள்ளிட்ட மாநில அரசின் அனல் மின் நிலையங்களில் இருந்து 4,320 மெகாவாட், நெய்வேலி, வல்லூர் உள்ளிட்ட மத்திய அரசின் அனல் மின் நிலையங்கள், கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணு மின் நிலையங்கள் என மத்திய தொகுப்பில் இருந்து சுமார் 6,166 மெகாவாட், குறுகிய கால ஒப்பந்தமாக எலெக்ட்ரிசிட்டி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்சில் 746 மெகாவாட், தனியாரிடமிருந்து விலைகொடுத்து நீண்டகால ஒப்பந்தத்தின் மூலம் 2,830 மெகாவாட் என மொத்தமாக 16,034 மெகாவாட் மின்சாரம் கிடைக்கக்கூடிய திறன் நம்மிடம் உள்ளது.
இதுமட்டுமின்றி, நீர் மூலம் நமக்கு 2,321 மெகாவாட் மின்சாரமும், காற்றாலை மூலமாக 8,522 மெகாவாட் மின்சாரமும், சூரிய சக்தி மூலம் 4,049 மெகாவாட் மின்சாரமும், இயற்கை எரிவாயும் மற்றும் குப்பை மறுசுழற்சி மூலம் 970 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யுமளவுக்கு திறன் இருக்கிறது. மேற்கண்ட இரு முறைகளையும் மொத்தமாகக் கூட்டினால் 31,905 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் அளவுக்கான திறன் தமிழகத்திடம் உள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால், திறன் மட்டும் இருந்தால் போதுமா? அதிலிருந்து எவ்வளவு மின்சாரம் கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். அப்படிப்பார்த்தால், மொத்தமாகவே 15,000 மெகாவாட் மின்சாரம்தான் தமிழகத்துக்குக் கிடைக்கிறது.
தமிழகத்தின் மின் தேவை என்பது சாதாரண நாட்களில் 16,500 மெகாவாட்டும், கோடைக் காலங்களில் 17,500 முதல் 18,000 மெகாவாட்டுமாக இருக்கிறது. நிதர்சனத்தைச் சொல்ல வேண்டுமென்றால், சொந்த மின் உற்பத்தி, மத்திய தொகுப்பிலிருந்து கிடைப்பது போக சுமார் 1,500 முதல் 2,500 மெகாவாட் வரை நமக்கு கூடுதல் மின் தேவை இருக்கிறது. அதை நிவர்த்தி செய்யவே 11 தனியார் நிறுவனங்களிடம் இருந்து 3,230 மெகாவாட் மின்சாரத்தை மின்வாரியம் பணம் கொடுத்து வாங்குகிறது. இதன்மூலம் மின்மிகை மாநிலம் என்ற வார்த்தையே போலியானது எனத் தெரியவருகிறது.
சொந்தமாக தயாரிக்கப்படும் மின்சாரத்தில் நமக்கான தேவை போக மற்ற மாநிலங்களுக்கும் கொடுப்பதே உண்மையான மின் மிகை மாநிலத்துக்கான அர்த்தம். எனினும், கூடுதலாகத் தேவைப்படும் 1500 முதல் 2500 மெகாவாட் மின்சாரத்தை மின்வாரியம் விலைகொடுத்து வாங்குவதால் எந்தவித பிரச்னையும் இல்லாமல் செல்கிறது. ஆனால், மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதற்கு மூல காரணமே வெளியிலிருந்து மின்சாரத்தை வாங்குவதுதான். இதன்மூலமே 30 சதவிகித நஷ்டம் ஏற்படுகிறது.
சரி, தற்போதைய பிரச்னைக்கு வருவோம். மின்சாரத்துறையின் சொந்த மின்தயாரிப்பு மற்றும் விலைகொடுத்து வாங்குவது இரண்டிலும் சேர்த்து நமது தேவை பூர்த்தி செய்யப்படுவதால் கடந்த தி.மு.க ஆட்சி போல திட்டமிடப்பட்ட மின் தடை எதுவும் இப்போது அமலில் இல்லை. கடந்த காலத்தில் பற்றாக்குறையைச் சமாளிக்க மெயிண்டனென்ஸ் என்ற பெயரில் ஒவ்வொரு நாளும் ஒரு சப்-ஸ்டேஷனை ஷட்-டவுன் செய்வோம். அதுபோன்ற எந்த வித ஷட்-டவுனும் தற்போது அமலில் இல்லை.
எனினும் சமீப நாட்களாக மின்வெட்டு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் ட்ரான்ஸ்ஃபார்மர்கள்தான். ஏனெனில், ட்ரான்ஸ்ஃபார்மர்கள் எல்லாம் மிகவும் பழமையானவை. அதனைப் பராமரிக்க போதிய ஆட்களுமில்லை, மின் சாதனங்களும் இல்லை. அதுவும் கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதாலும், ட்ரான்ஸ்ஃபார்மரிலும் வெப்பம் அதிகரிப்பதாலும் பர்ஸ்ட் ஆகிவிடுகிறது. ஒரு இடத்தில் ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்தால், அதனருகில் இருக்கும் இன்னொரு ட்ரான்ஸ்ஃபார்மரில் இருந்து பேக் ஃபீடிங் அதாவது தற்காலிக லிங்க் கொடுத்து, அந்த நேரத்திற்குள் பிரச்னையை சரிசெய்துவிடுவோம். அதுவும் கூட வி.ஐ.பி-க்கள், மருத்துவமனை இருக்கும் ஏரியாக்களில் மட்டுமே செய்வோம்.
பொதுமக்கள் ஏரியாவில் அப்படி செய்தால் லோ வால்டேஜ் பிரச்னை வரும், அதற்கும் புகார் சொல்வார்கள் என்பதால், முழுமையாக கால் மணிநேரமோ, அரை மணிநேரமோ மின்சாரத்தை நிறுத்திவிட்டு ட்ரான்ஸ்ஃபார்மரை சரிசெய்து பின்னர் மின் இணைப்பு வழங்குவோம். இதுமட்டுமின்றி, கோடையில் மின் தேவை அதிகமாவதால், ட்ரான்ஸ்ஃபார்மருக்கு அதைத்தாங்கக் கூடிய திறன் இருக்காது. அந்த நேரத்தில் மின்தடை ஏற்படுத்தி நிலைமையை சீர்செய்வோம்” என்பதோடு முடித்துக்கொண்டனர்.
மின்சார வாரிய ஊழியர் ஒருவர் நம்மிடம், “நமது சொந்த மின் தயாரிப்பு என்பது குறைவுதான். விலை கொடுத்து வாங்குவதை வைத்தே சமாளித்து வருகிறோம். கொரோனா தொற்று லாக்டெளனால் கடந்தாண்டும், இந்தாண்டும் பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்காததால் மின் தேவையும் குறைந்துதான் உள்ளது. அப்படியிருக்க மின்வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. மின்வாரியம் ஒப்பந்தம் போட்ட நிறுவனங்கள் அனைத்தும் அ.தி.மு.க புள்ளிகளுக்கு நெருக்கமானவர்கள். அ.தி.மு.க ஆட்சியில் ஊர்ப்பெயரை பெயர் முன்னே கொண்டவர்தான், வேண்டுமென்றே மார்க்கெட் விலையை விட அதிகப்படியான விலையை நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டார். தமிழகத்துக்கு மின்சாரத்தை விற்பனை செய்தே அந்த நிறுவனங்கள் கோடிகளைச் சம்பாதித்துவிட்டன.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தனியார் நிறுவனங்களிடம் போட்ட ஒப்பந்தத்தில் அதிகப்படியான விலை கொடுத்திருப்பதை அறிந்த தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அந்த தனியார் நிறுவனங்களை நேரில் அழைத்துப் பேசி விலையைக் குறைத்து மறு ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். தி.மு.க அரசு அமைந்துவிட்டதால், ஆந்திரா மாடலில் அந்த ஒப்பந்தங்களை எல்லாம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்போவதாக சிலர் கிளப்பிவிட, அச்சம் கொண்ட தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு மின் சப்ளையைக் குறைத்துக்கொண்டதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மேலும், மின்வாரியத்தில் அத்தனை கட்சிக்காரர்களும் வேலை செய்வதால், தி.மு.க அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க ஆதரவு மின் ஊழியர்கள் செய்யும் வேலைதான் இது என்று சொல்பவர்களும் உண்டு” என்றார்.
தனியார் நிறுவனங்களுடன் தமிழக அரசு 2013-ல் போடப்பட்ட ஒப்பந்தம் வரும் 2028 வரை நடைமுறையில் இருக்கும். மின் கொள்முதலில் மூன்று வரை உண்டு, குறுகிய கால கொள்முதல், மத்திய கால கொள்முதல் மற்றும் நீண்ட கால (லாங் டேர்ம்) கொள்முதல். குறுகிய கால கொள்முதல் என்பது திடீர் தேவைக்கேற்ப மார்க்கெட் விலை கொடுத்து பர்சேஸ் செய்வது. உடனடித் தேவை என்பதால் இது கொஞ்சம் காஸ்ட்லிதான். அதாவது, ஒரு மெகாவாட் 4 ரூபாய் 40 பைசாவுக்கு வாங்கப்படுகிறது. மத்திய கால கொள்முதல் இங்கு நடைமுறையில் இல்லை. அதுவே, நீண்ட கால கொள்முதல் என்பது குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்வார்கள். இதற்கு குறுகிய கால கொள்முதலை விட விலை குறைவாகத்தான் நிர்ணயம் செய்வார்கள். ஆனால், அ.தி.மு.க ஆட்சியிலோ குறுகிய கால மின் கொள்முதலுக்கான விலையை விட அதிகமாக, ஒரு மெகாவாட் 4 ரூபாய் 91 பைசாவுக்கு நிர்ணயம் செய்தனர். சுமார் 3 ரூபாய் 50 பைசாவில் முடிக்க வேண்டியதை திட்டமிட்டே அதிகரித்து நிர்ணயித்துள்ளனர். இதன்மூலம், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுவருகிறது.
சட்டீஸ்கரைச் சேர்ந்த 4 நிறுவனங்கள், மராட்டியத்தைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த தலா ஒரு நிறுவனம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் ஆகியவைதான் தமிழக அரசுக்கு மின்சாரத்தை அதிக விலைக்கு விற்று வருகிறார்கள் என்கிறார்கள்.
source https://www.vikatan.com/news/politics/power-outage-again-was-that-was-accident-or-was-it-planned-whats-happening
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக