Ad

புதன், 9 ஜூன், 2021

`மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு அருண் மிஷ்ரா தகுதியற்றவர்!' - விளாசும் செயற்பாட்டாளர்

சமீபத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தைக் கண்டித்து, மக்கள் சிவில் உரிமை கழகம் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், முன்னாள் நீதிபதி அருண் மிஷ்ரா இந்தப் பதவிக்கு தகுதியானவர் இல்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து, மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர்.வி.சுரேஷ் நம்மிடம் விரிவாகப் பேசியிருந்தார். அவருடனான நேர்காணல் இனி...

Dr.V.Suresh, General Secretary, PUCL

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஒருவர் நியமிக்கப்படுவதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?

சட்டப்படி தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியோ, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவரோதான் அமர்த்தப்பட வேண்டும். அதுமட்டுமன்றி, தன்னிச்சையாகச் செயல்படக்கூடிய ஓர் அமைப்பாக இது இருப்பதால், அதில் தலைமைப் பதவி ஏற்பவருக்கு மூன்று தகுதிகள் இருக்க வேண்டும்.

1. தன்னுடைய எண்ணத்திலும் உள்ளத்திலும் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும்.

2. அவர், எந்தக் கட்சிக்கோ, அமைச்சருக்கோ, அரசுக்கோ சார்புடையவராக இல்லாமல், தன்னிச்சையாகச் செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும்.

3. மனித உரிமை ஆணையம் என்ற காரணத்தினாலும் நீதிபதிகள்தான் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்ற காரணத்தினாலும், அவர்களுடைய பணிக் காலத்தில் மனித உரிமை மீறல் தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்க வேண்டும். அரசுக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்காதவராக இருக்க வேண்டும்.

மக்கள் சிவில் உரிமை கழகம், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக அருண் மிஸ்ராவின் நியமனத்தை எதிர்ப்பது ஏன்? அவருக்கு அதற்கான தகுதிகள் இல்லையா?

ஆம், அவர் பல வழிகளில் இந்த ஆணையத்தின் தலைவராக அமர்த்தப்படுவதற்குத் தகுதியில்லாதவர். இதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம். 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றார். இறுதியில், அந்தப் பதவியிலிருந்து வெளியேறும்போது `சர்ச்சைக்குரிய நீதிபதி' என்ற பெயரோடு தான் வந்தார். தனிநபர்களுடைய உரிமைகள் பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்குப் போகும்போது, பெரும்பாலான வழக்குகளில் அரசுக்குச் சாதகமான தீர்ப்பையே வழங்கியுள்ளார். முக்கியமாக, சஞ்சீவ் பட் வழக்கு, ஹரன் பாண்டியா வழக்கு, பீமா கொரேகான் வழக்கு போன்றவற்றில் அவருடைய தீர்ப்புகள் கேள்விக்குறியாக இருந்தன.

உச்சநீதிமன்றம்

இது தனிநபர் உரிமைகள் சார்ந்த வழக்குகளில் நிகழ்ந்தது. அதுவே சமூக உரிமைகள் குறித்து அவருடைய அணுகுமுறையைப் பார்க்கையில், இந்திய வன உரிமைச் சட்டம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் குறித்த வழக்கில் லட்சக்கணக்கான பழங்குடிகளை அவர்களுடைய நிலங்களை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தார். நாடு முழுக்க வெடித்த போராட்டங்களுக்குப் பின்னர், ஒன்றிய அரசாங்கமே முன் வந்து அந்தத் தீர்ப்பை ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டது.

அவர் தொடர்ச்சியாக இப்படி அரசின் தரப்பிலேயே நிற்பதால், மனித உரிமை ஆணையத்தில் மக்கள் தரப்பில் நிற்க மாட்டார் என்று சொல்கிறீர்களா?

ஆம், இப்படி நீதிமன்றத்தில் அவரிடம் வரும் வழக்குகளில் மட்டுமில்லை. சென்ற ஆண்டு, ஒரு சர்வதேச மாநாடு நடந்தது. அதில், 24 நாடுகளைச் சேர்ந்த தலைமை நீதிபதிகள் பங்கேற்ற அந்த மாநாட்டில், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் அருண் மிஷ்ரா, பிரதமர் நரேந்திர மோடியை உலகத்திலேயே மிகப்பெரிய தலைவர் என்று பாராட்டுகிறார். இது நீதித்துறையின்படி, கேள்விக்குறியான ஒரு நடவடிக்கை. அரசு நிர்வாகத்தின் தலைவராக இருக்கும் பிரதமரை இப்படிப் பகிரங்கமாகப் போற்றிப் பேசுவது முறையல்ல.

Law (Representational Image)

நீதித்துறையைச் சார்ந்தவர்களிடம் அரசுக்கு எதிரான வழக்குகள் கூட வரும், அரசுக்கு எதிரான தீர்ப்புகளையும் வழங்க வேண்டியிருக்கும். ஆக, தனிப்பட்ட முறையில் ஈர்ப்பு இருந்தாலும்கூட, வெளிப்படையாகப் பொதுவெளியில் இப்படிப் போற்றி, ஆதரித்துப் பேசாமல் இருப்பதை நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் பின்பற்ற வேண்டும். இதை நீதிமன்ற தன்னடக்கம் என்று சொல்வார்கள். அந்தத் தன்னடகம் இல்லாமல் இவர் செயல்பட்டுள்ளார்.

மத்திய அரசாங்கம் தனக்கு நெருக்கமான ஒருவரை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிப்பதாகச் சொல்கிறீர்கள்... அரசின் நோக்கம், இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

இன்றைய சூழலில் இவரை ஏன் கொண்டுவருகிறார்கள் என்று பார்க்க வேண்டும். சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில், அரசு மக்கள் மீது வழக்குகளைப் போட்டு, வன்முறையைக் கையாண்டு பல அடக்குமுறைகளை மேற்கொண்டது. ஐ.நா-வின் மனித உரிமை கமிட்டியே இதை விமர்சிக்கும் அளவுக்கு இந்திய அரசு மீது விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், விவசாயிகள் போராட்டமும் பெரியளவில் வெடித்துக் கொண்டிருக்கிறது. இதுபோல் இன்னும் பல மனித உரிமை மீறல்கள் உலகளவில் இந்திய அரசின் பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன.

Protest site at Shaheen Bagh, in New Delhi

பேச்சுரிமை, மக்கள் சேர்ந்து வெளிப்படையாக அவர்களுடைய எதிர்ப்பைத் தெரிவிப்பது அவர்களுடைய அடிப்படை உரிமை. ஆனால், இவற்றை முற்றிலுமாக முடக்கும் விதத்தில் அரசு வன்முறை நிகழ்ந்துள்ளது. நரேந்திர மோடி ஆட்சி, உலகளவில் வன்முறையைத் தூண்டக்கூடிய, அரசு வன்முறையை மறைக்கக்கூடிய ஆட்சியாகத்தான் வெளியே தெரிகிறது. இதைத் தணிப்பதற்கு அரசுக்குச் சாதமாக இருக்கும் ஒருவரை தலைவராகப் போடும்போது, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியே நாங்கள் நல்லாட்சி நடத்துவதாக சான்றிதழ் வழங்கிவிட்டார், இதற்கு மேல் என்ன வேண்டும் என்று பேச முடியும்.

அப்படியென்றால், சிறுபான்மையின மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அரசு நடத்தும் வன்முறையை மறைக்கவே இந்த நியமனம் என்று சொல்கிறீர்களா?

கண்டிப்பாக, அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கக்கூடிய ஒருவராகத்தான் நீதிபதி அருண் மிஷ்ரா இருப்பார். அரசு வன்முறைகளுக்கு எதிராகப் பேசாதது மட்டுமல்ல, அதற்கு ஆதரவாகவே நிற்கக்கூடியவர். அரசு வன்முறையை மறைப்பதற்கு மட்டுமல்ல, திசை மாற்றுவதற்கு, வேறு பல வகைகளில் அவர்களை நியாயப்படுத்துவதற்கும்தான் அருண் மிஷ்ராவை இந்த அரசு நியமித்திருக்கிறது..

டெல்லி விவசாயிகள் போராட்டம்

தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களாக அரசு அதிகாரிகள் மட்டுமே, குறிப்பாக, காவல்துறை அதிகாரிகளே நியமிக்கப்படுகிறார்கள். இன்னொரு பக்கம், தலித், ஆதிவாசி, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் பிறதுறை ஆளுமைகள்வரை இதுவரை யாரும் ஆணையத்தின் தலைவர் பொறுப்புக்கு நியமிக்கப்படவே இல்லையே?

பாதிக்கப்பட்ட இனத்திலிருந்து வருபவர்கள், அந்த மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்பது மாயை. உதாரணத்துக்கு, மகளிர் காவல் நிலையங்களில்தான் மற்ற காவல் அதிகாரிகளைவிட மோசமாக, பெண் காவல்துறை அதிகாரிகள் நடந்துகொள்வதாக பல பேர் வழக்கறிஞரான என்னிடம் நேரடியாகவே அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.

ஆனாலும், அந்த இனத்திலிருந்து வருபவர்கள் அந்த முக்கியமான பதவிகளில் இருக்கும்போது, அவர்களுடைய அனுபவத்தோடு அந்த மக்களின் பிரச்னையைப் பார்ப்பதால், அவர்களின் அணுகுமுறை சற்று வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆனால், பாதிக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்களை நியமிக்கலாம், ஆனால், செய்வதில்லை. அதேநேரம், காவல்துறையைச் சேர்ந்தவர்களையே ஏன் அமர்த்துகிறார்கள் என்றால், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இப்போது பதவியிலிருக்கும் காவல்துறையைப் பெரியளவில் தட்டிக் கேட்கமாட்டார்கள். அதுவோர் உள்ளார்ந்த காரணம். இதை விமர்சித்து, தொடர்ந்து மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அப்போதுதான் இந்த நிலை மாறும்.

அமித்ஷா - நரேந்திர மோடி

ஒன்றிய அரசு, வரலாற்றிலேயே முதல்முறையாக லட்சத்தீவு நிர்வாகியாக, அரசு அதிகாரிக்குப் பதிலாக ஓர் அரசியல்வாதியை நியமித்தது. இப்போது, தேசிய மனித உரிமை ஆணையத்தில் அருண் மிஷ்ரா நியமனம். இதுபோன்ற செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கடந்த ஏழு ஆண்டுகளாகப் பார்த்தால், நரேந்திர மோடியின் ஆட்சி வந்ததிலிருந்து அவர்கள் தெளிவாக இருந்தார்கள். சுதந்திரமாக உருவாக்கப்பட்ட அமைப்புகள், தேர்தல் கமிஷன், சி.பி.ஐ, இப்போது மனித உரிமை ஆணையம் என்று தன்னிச்சையாகச் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளில் உள்ளே புகுந்து, அதன் தன்மையையே மாற்றியமைத்துவிட்டார்கள். இதுபோன்ற அமைப்புகளின் தலைமைகளை நிர்ணயிக்கும்போது, தங்களுக்குச் சாதகமான நபர்களை மட்டுமல்ல, சுதந்திரமாகச் செயல்படாமல் இருப்பவர்களையே நியமிக்கிறார்கள்.

ஒரு சுவரை ஒவ்வொரு செங்கல்லாகப் பிரிக்கும் முயற்சியில் பா.ஜ.க ஆட்சி ஈடுபட்டிருந்தது. கிட்டத்தட்ட அனைத்து அமைப்புகளிலும் கை வைத்துவிட்டார்கள்.

லட்சத்தீவில் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த ஓர் அரசியல்வாதியைப் போடுவதற்கு உள்நோக்கம் உள்ளது. பெரும்பான்மையாக இஸ்லாமிய சமூக மக்கள் வாழும் இடத்தில், முற்றிலும் கலாசாரமே வேறாக இருக்கும் நிலத்தில், இன்று அதை இந்துத்துவ அடிப்படையில் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய உரிமைகள் பறிக்கப்படும் நிலையில் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இதுவொரு திட்டமிட்ட நடவடிக்கை.

லட்சத்தீவு

தன்னிச்சையான அமைப்புகளின் சுதந்திரமாகச் செயல்படும் இயல்பை முடக்குவதன் மூலம் அதைச் சாத்தியமாக்குகிறார்கள்.

மக்கள் இவை குறித்து முன்வந்து கேள்வியெழுப்ப வேண்டும். இல்லையெனில், கூடிய விரைவில் ஜனநாயகமும் இருக்காது, அரசியலமைப்பும் இருக்காது என்ற நிலை ஏற்பட்டுவிடும். இது நிகழாமல் இருக்க, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொரு தனிநபருக்குமே இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/pucl-suresh-speaks-about-appointment-of-arun-mishra-as-nhrc-chief

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக