கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்ட பின்பு எத்தனை நாள்கள் கழித்து தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்?
- சரவணன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
``கொரோனா தடுப்பூசிக்கும் இல்லற வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு உறவில் ஈடுபட இத்தனை நாள் இடைவெளி விட வேண்டும் என்கிற மாதிரி எந்தக் கணக்கும் இல்லை. ஆனால் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டதிலிருந்து ஒரு மாதம்வரை தாம்பத்திய உறவின் போது கருத்தடை முறைகளைப் பின்பற்றுவதும் பாதுகாப்பான உறவில் ஈடுபடுவதும் சிறந்தது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு கருத்தரிப்பவர்களுக்கு அந்தக் கருவில் பிரச்னைகள் வந்ததாக இதுவரை எந்தத் தகவலையும் நாம் கேள்விப்படவில்லை.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி அறிவுறுத்தப்படுவதில்லை. எனவே இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்ட பிறகு ஒரு மாதம் கழித்து கர்ப்பத்துக்குத் திட்டமிடலாம். ஒருவேளை முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் கர்ப்பம் தரித்துவிட்டாலும் கவலை வேண்டாம். அது குழந்தைப் பிறப்பில் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை".
Also Read: Covid Questions: குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் தம்பதியினர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
தாம்பத்திய உறவின் மூலம் கொரோனா தொற்று பரவ வாய்ப்பிருக்கிறதா?
- ரகுவரன் (விகடன் இணையத்திலிருந்து)
``தாம்பத்திய உறவின் மூலம் கொரோனா தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம். செக்ஸ் உறவின் மூலம் அது பரவுவதில்லை என்றாலும் உறவின் போதான அந்த நெருக்கம் தொற்றுப் பரவலுக்கு வழிவகுக்கலாம். எனவே இருவரில் யாருக்காவது அறிகுறிகள் இருந்தால் அந்த நேரத்தில் உறவைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/when-can-one-have-sex-after-taking-covid-vaccines
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக