"சமூக ஊடகங்களில் போலியான பெயர்களில் கணக்குகளை தொடங்கி, பல பெண்களை மிரட்டியும், வாழ்க்கையை சீரழித்தும் வருகிறார் என் கணவர். அவரை விசாரியுங்கள்" என்று போலிஸ்காரரின் மனைவியே கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர காவல்துறையின் டெல்டா அதிரடிப்படையில் பணியாற்றி வருகிறார் முத்துசங்கு. காவலர் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், இவர் மனைவி சுபாஷினி மதுரை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அதில், "எனக்கும் முத்துசங்குவுக்கும் கடந்த 2019-ல் திருமணம் நடந்தது. தான் எஸ்.ஐ.யாக இருப்பதாக பொய் சொல்லித்தான் திருமணம் செய்தார். அதற்காக 25 பவுன் நகையும், ரூ 1,30,000 ரொக்கம் வரதட்சணை கொடுக்கப்பட்டது. அவர் எஸ்.ஐ. இல்லையென்பது திருமணத்துக்கு பின்புதான் தெரிந்தது.
அதன்பின்பும் இன்னும் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்த ஆரம்பித்தார். இதனால் நான் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். `நான் அமைச்சருக்கு பாதுகாப்புக்கு செல்பவன்’ என்று சொன்னதால் மகளிர் காவல்துறையினர் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை.
அதன் பின்பு பெரியவர்கள் சமாதானப்படுத்தி சேர்ந்து வாழச்சொன்னார்கள். ஆனால், அதற்குப்பின்பு மிக மோசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். என் உடலில் சூடு வைத்தார்.
இந்நிலையில்தான் அவர் செல்போனை பார்த்ததில் அவருடைய உண்மையான முகம் தெரிந்தது. சமூக ஊடகங்களில் பல பெயர்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி வைத்து அதில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார்.
அதுமட்டுமில்லாமல் அந்த பெண்களுடன் நெருக்கமாக ஜோடியாக போட்டோ எடுத்து வைத்திருந்தார். அந்த படங்களை அவர்களிடம் காட்டி மிரட்டி பணம் பறித்தும் இருக்கிறார். அதனால் அவரை விசாரிக்க வேண்டும். அவருடைய செல்போனை ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிவரும்" என்று புகாரில் கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து கமிஷனரின் உத்தரவில் போலிஸ்காரர் முத்துசங்குவிடம் விசாரணை நடந்து வருகிறது. அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு உறுதியானல் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் கவால் அதிகாரிகள்!
source https://www.vikatan.com/social-affairs/crime/my-husband-was-spoiling-many-womens-life-complaint-by-policemens-wife
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக