சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா விடுதலையானதும் அவரை வரவேற்க வழியெங்கும் உற்சாகத்துடன் தொண்டர்கள் திரண்டனர். அதனால் அவர் அ.தி.மு.க-வுக்கு மீண்டும் தலைமையேற்க வருவார் எனத் தொண்டர்கள் நம்பியிருந்தார்கள்.
Also Read: ஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ!’ - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?
ஆனால், தேர்தலுக்கு முன்பாக சசிகலா வெளியிட்ட அறிக்கையில், அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக அதிரடியாக அறிவித்தார். ஜெயலலிதா மறைவால் சோகத்தில் இருந்த சசிகலாவின் ஆதரவாளர்கள், சசிகலா வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் அவரது அறிவிப்பு கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியது.
தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்து தி.மு.க ஆட்சிக்கு வந்த நிலையில், கட்சித் தொண்டர்களிடம் சசிகலா தொலைப்பேசி வாயிலாக உரையாடி வருகிறார். தொண்டர்களிடம் அவர் பேசும் ஆடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில், நெல்லை தச்சநல்லூர் பகுதி மாணவரணி இணைச் செயலாளரான சுந்தர்ராஜ் என்பவரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
அதில், சுந்தர்ராஜையும் அவரது குடும்பத்தினரையும் நலம் விசாரிக்கும் சசிகலா,``நிச்சயமாக நான் வந்துருவேன். என்னைக்கும் நான் அப்படியே விட்டுவிடமாட்டேன். நிச்சயமாக வந்து, தலைவர், அம்மா எப்படி கட்சியை வச்சிருந்தாங்களோ அது மாதிரி கொண்டுவந்துருவேன். கவலைப்படாதீங்க. இந்த கொரோனா தாக்கம் முடிஞ்சதும் நான் வருவேன். கொரோனா லாக்டௌன் முடிஞ்சதும் எல்லோரையும் நான் பார்க்கிறேன்” என்று பேசுகிறார்.
சசிகலா ஆடியோ குறித்து அ.தி.மு.க தச்சநல்லூர் பகுதி மாணவரணி இனைச் செயலாளரான சுந்தர்ராஜிடம் கேட்டதற்கு, “கட்சியின் கடைக்கோடித் தொண்டனான என்னிடம் சின்னம்மா பேசியது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. அம்மா இல்லாத சூழலில் கட்சித் தலைமை பொறுப்பை சின்னம்மா ஏற்றுக் கொண்டால் மட்டுமே ராணுவக் கட்டுப்பாட்டுடன் கட்சியையும் ஒன்றரை கோடி தொண்டர்களையும் பாதுகாக்க முடியும்.
சின்னம்மா இல்லாவிட்டால் கடந்த அ.தி.மு.க ஆட்சியே இருந்திருக்காது. அதைப் புரிந்து கொள்ளாமல் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தங்களின் சுயநலத்துக்காக சின்னம்மாவைத் தூக்கி எறிஞ்சுட்டாங்க. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏற்றி விட்ட ஏணி சின்னம்மா சசிகலா. கட்சிக்கு அவர் தலைமையேற்க வேண்டும் என்பதே என்னைப் போன்ற எல்லாத் தொண்டர்களின் எதிர்பார்ப்பு.
நான் இதுவரை சின்னம்மாவிடம் பேசியதில்லை. ஆனால், முகநூலில் அம்மாவை புகழ்ந்து தொடர்ந்து பதிவிட்டு வந்தேன். முன்பு ஒருமுறை, சி.வி.சண்முகம், சின்னம்மாவை தவறாகப் பேசியபோது கடுமையாகக் கண்டித்துப் பதிவிட்டேன்.
சமீபத்தில் கே.பி.முனுசாமி தவறான கருத்துகளைத் தெரிவித்ததைக் கண்டித்தும் முகநூலில் பதிவிட்டிருந்தேன். அதை எல்லாம் பார்த்து சின்னம்மா என்னைக் கூப்பிட்டுப் பேசியிருக்கலாம். நான் அ.தி.மு.க தொண்டனே தவிர, எடப்பாடி பழனிசாமி சொல்வது போல அ.ம.மு.க காரன் கிடையாது. என்னைப் போன்ற அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் சின்னம்மா சசிகலா மட்டுமே” என்று படபடத்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/sasikala-spoke-to-admk-cadre-about-her-future-plans
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக