Ad

சனி, 5 ஜூன், 2021

சசிகலா ஆடியோ விவகாரம்: வைத்திலிங்கம் முகாமில் ஆதரவு திரட்டும் எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரிடம் சசிகலா போனில் பேசிய ஆடியோ வெளியாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டத்தில் தனக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலர் மூலமாக, `யாரும் சசிகலா பக்கம் செல்ல வேண்டாம்’ என ஆதரவு திரட்ட தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த சசிகலா, தேர்தல் முடிவுக்கு பிறகும் மெளனமாகவே இருந்தார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் பிரச்னை எழுந்தது. இதனை சசிகலா உன்னிப்பாக கவனித்து வந்தார். இதையடுத்து பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு எடப்பாடி பழனிசானிக்கு இருக்கவே அவர் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் கட்சியில் வளர்வதை விரும்பாத ஓ.பி.எஸ் சசிகலாவுக்கு ஆதரவாக மறைமுகமாக செயல்படத் தொடங்கியதாக தகவல் வெளியானது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்த சசிகலா, அதற்கான காய் நகர்த்தல்களில் இறங்கத் தொடங்கினார். இதன் ஒருபகுதியாக சசிகலா தனக்கு ஆதரவாக இருந்த அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரை போனில் தொடர்பு கொண்டு, `கொரோனா வேகமாக பரவிக்கிட்டு இருக்கு.. எல்லோரும் பத்திரமா இருங்க. கட்சியில் அவங்க அடிச்சுக்குறத பார்க்கும் போது கஷ்டமா இருக்கு. சீக்கிரமே வந்துடுவேன். கட்சியை சரிபண்ணிடலாம்’ என பேசினார். கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வெளியான அந்த ஆடியோ அ.தி.மு.கவில் மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தின.

சசிகலா - பன்னீர்செல்வம்

இந்நிலையில் சசிகலாவின் சொந்த மாவட்டமான ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமான சில நிர்வாகிகள் மூலம் கட்சியில் தனக்கான ஆதரவை திரட்டத் தொடங்கியுள்ளார். நகரச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் சசிகலா பக்கமோ அல்லது ஓபிஎஸ் பக்கமோ போய் விட வேண்டாம் என அவர்கள் மூலமாக பேச வைக்க தொடங்கியுள்ளார். இது தான் தற்போது தஞ்சை அ.தி.மு.க வட்டத்தில் ஹாட்டாபிக்காக இருந்து வருகிறது.

இது குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம், ``சட்டமன்ற தேர்தலில் வழக்கம் போல் கொங்கு மண்டலம் தான் அ.தி.முகவுக்கு சாதகமாக கைகொடுத்தது. மற்ற பகுதிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் பலரும் தோல்வியை தழுவினர். தேர்தல் முடிவுக்குப் பிறகு முன்னாள் முதலமைச்சர், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் டெல்டாவில் கவனம் செலுத்த முடிவெடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

வைத்திலிங்கம்

முன்னாள் உணவுத்துறை அமைச்சரான ஆர்.காமராஜ் எடப்பாடி பழனிசாமி அணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் தனக்கு பக்கபலமாக இருப்பார் எனவும் எடப்பாடி நம்புகிறார். ஆனால் அ.தி.மு.கவின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் ஓ.பன்னீர்செல்வத்துடன் கரம் கோர்த்து செயல்பட்டு வருகிறார். அதனால் ஓபிஎஸ் தலைமையில் வைத்திலிங்கம் சசிகலா பக்கம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறார். வைத்தி அந்த பக்கம் செல்லும் போது அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றால் அவர் பகுதியில் தனக்கான செல்வாக்கையும், ஆதரவாளர்களையும் உருவாக்க வேண்டும் என என்ணிய எடப்பாடி பழனிசாமி, அதற்கான காய் நகர்த்தல்களை சத்தமில்லாமல் செய்யத் தொடங்கினார்.

உடனடியாக வைத்திலிங்கம் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் குறித்து பட்டியலையும் பெற்றார். வைத்திலிங்கம் தனது மண்டலத்தில் தன் தலைமையில் 14 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டார். ஆனால் அவர் போட்டியிட்ட ஒரத்தநாடு தொகுதியை தவிர மீதமுள்ள 13 தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். யார் தோற்றாலும் பரவாயில்லை, நான் ஜெயித்தால் போதும் என்கிற ரீதியில் தான் வைத்தியின் செயல்பாடு இருந்தது.

வைத்திலிங்கம்

அவரால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களையும் வைத்திலிங்கம் கண்டு கொள்ளவில்லை. கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதை விட தான் வெற்றி பெற வேண்டும் என்பதிலேயே ஆர்வம் காட்டினார். இதற்காக ரூ. 90 கோடி வரை செலவு செய்து வெற்றி பெற்றார் என அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் தற்போதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தோல்வியடைந்த வேட்பாளர்கள் பலர் வைத்திலிங்கம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

வெற்றி பெற்ற பிறகு சென்னை சென்றவர் தற்போது வரை ஊர் திரும்பவில்லை. தோற்றவர்களிடம் போன் போட்டு ஆறுதல் வார்த்தை கூட சொல்லவில்லை. இதுவும் தோற்றவர்களுக்கு அதிருப்தியை தந்தது. பல நிர்வாகிகள் வைத்திக்கு எதிரான மன நிலையில் தான் உள்ளதாக தெரிகிறது. இதனையறிந்த எடப்பாடி பழனிசாமி இந்த தருணத்தை தனக்கானதாக பயன்படுத்தி கொள்ள நினைத்தார். வைத்திலிங்கத்திற்கு எதிரான நிலையில் உள்ளவர்களை தன் பக்கம் இழுப்பதற்கான வேலையை தொடங்கிவிட்டார். அதற்காக தனக்கு நெருக்கமான, வைத்திலிங்கத்தின் ஆதரவாளராக இருந்த முன்னாL எம்.எல்.ஏ ஒருவரை பயன்படுத்தி வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

அந்த முன்னாள் எம்.எல்.ஏ, முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, `எடப்பாடி பழனிசாமி பக்கம் நில்லுங்க.. அவருக்கு ஆதரவாக இருந்து செயல்படுங்க.. உங்களுக்கும், கட்சிக்கும் நல்லது நடக்கும். சசிகலா பக்கமோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் பக்கமோ போகாதீங்க. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் தான் இருக்காங்க. கட்சியையும் அவர் தான் நல்ல முறையில் வழி நடத்துவார்’ என பேசி எடப்பாடிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இதே போல் முன்னாள் அமைச்சர் வேலுமணியும் டெல்டாவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்த தகவல் வைத்திலிங்கத்திற்கும் சென்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் தங்கியுள்ள அவர் விரைவில் தஞ்சாவூர் செல்ல இருப்பதாகவும் அதன் பின் தன் ஆதரவாளர்களை சந்திக்க முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது” என்றனர்.

Also Read: “இந்த ஜிகினா வேலையெல்லாம் நமக்கும் தெரியும்...” - சசிகலா ஆடியோ; கமென்ட் அடித்த எடப்பாடி

வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம், ``எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த முறை அ.தி.மு.க ஆட்சி ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வைத்திலிங்கம். கடைசி வரை தன்னிடம் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவர் கூட தினகரன் பக்கம் செல்லாமல் பார்த்து கொண்டார். எல்லோரையும் அரவணைத்து சென்றதால் தான் இது சாத்தியமானது. வைத்திலிங்கத்தை பொறுத்தவரை கட்சி தான் அவருக்கு உயிர்.. கட்சியே முக்கியம் என நெனச்சு செயல்பட்டு வருபவர். ஒரு சிலர் மட்டும் சுய நலத்திற்காக அவருக்கு எதிராக செயல்படுகின்றனர். பெரும்பாலானவர்களுக்கு வைத்திலிங்கமே சோழமண்டல தளபதியாக இருக்கிறார். எனவே அவர் சொல்வததைத்தான் பலரும் பின்பற்றுவார்கள்” என தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/politics/edappadi-palanisamy-plans-to-get-support-in-delta-district

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக