Ad

சனி, 5 ஜூன், 2021

கொரோனாவேக் தடுப்பூசி... கொரோனாவைக் கட்டுப்படுத்திய பிரேசில் நகரம்!

பிரேசிலில் பரிசோதனை முயற்சியாக ஒரு முழு நகரத்துக்கும் சீனாவின் கொரோனாவேக் (CoronaVac) தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது கோவிட்-19 மரணங்களை 95 சதவிகிதம் வரை குறைத்திருக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு அறிகுறிகள் கொண்ட தொற்றுகளின் எண்ணிக்கை 80 சதவிகிதம் வரையிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் 86 சதவிகிதம் வரையிலும் குறைந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

‘பிராஜெக்ட் எஸ்’ என்ற பரிசோதனையின் கீழ், தென்கிழக்கு பிரேசிலில் செரானா என்ற நகரத்தில் வாழும் 45 ஆயிரம் பேருக்குப் பிப்ரவரி முதல் ஏப்ரலுக்கு இடைப்பட்ட மாதங்களில் கொரோனாவேக் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நகரில் வாழும் வயதுவந்தோர்களில் 95 சதவிகிதம் பேர் இந்தப் பரிசோதனை தடுப்பூசி செலுத்துதலுக்குச் சம்மதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Brazil President Jair Bolsonaro

இதனைத் தொடர்ந்து தொற்று எண்ணிக்கையும், மரணமும் மிகப் பெரிய அளவில் குறைந்திருக்கிறது என சினோவாக் என்ற சீன நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டிருக்கும் சாவோ பாலோவில் அமைந்துள்ள தி புடான்டன் இன்ஸ்டிட்யூட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி செலுத்தப்படாத செரானாவுக்கு அருகிலுள்ள நகரங்களில் தொற்று எண்ணிக்கையும், மரணங்களும் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பிரேசில், அமெரிக்கா, பிரான்ஸ்... கொரோனாவால் மீண்டும் தவிக்கும் உலக நாடுகளின் நிலை என்ன?

புடான்டனின் ஆய்வின் இறுதி முடிவுகளின் படி, செரானாவில் பிப்ரவரி தொடங்கி மே மாதத்தின் மத்தி வரை கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் 95 சதவிகிதம் வரை குறைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அறிகுறிகள் கொண்ட தொற்றுகளின் எண்ணிக்கை 80 சதவிகிதம் வரையிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் 86 சதவிகிதம் வரையிலும் குறைந்திருக்கிறது என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசி செலுத்தத் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகிவிட்ட பிறகு, நாட்டு மக்கள்தொகையில் வெறும் 10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை 4.6 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கும் நிலையில், கோவிட்-19 பெருந்தொற்றை அதிபர் போல்சனாரோ கையாண்ட விதத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான பிரேசிலியர்கள் தெருக்களில் இறங்கிப் போராடிவருகின்றனர்.



source https://www.vikatan.com/health/healthy/study-in-brazilian-town-shows-95-efficacy-of-sinovacs-coronavac

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக