தமிழக காவல்துறையில் 450-க்கும் மேற்பட்ட உதவி காவல் ஆய்வாளர்களுக்கு 13 ஆண்டுகளை கடந்தும் பதவி உயர்வு வழங்காமால் புறக்கணிக்கப்படுவதாகவும், இதற்காக உயர் அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்னையில் தங்களுக்கு நியாயம் நியாயம் வழங்குவார் என்றும் நம்பிக்கையுடன் உதவி ஆய்வாளர்கள் காத்திருக்கிறார்கள்.
இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசிய ஓய்வு பெற்ற காவல் துறையினரும், உதவி ஆய்வாளர்களின் உறவினர்கள் சிலரும், "தமிழ்நாட்டில் கடந்த 2008-ம் ஆண்டு, திமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்ட 745 உதவி காவல் ஆய்வாளர்களில் கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்டோருக்கு 13 ஆண்டுகள் ஆகியும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
2011-ம் ஆண்டு ஆயுதப்படை உள்ளிட்ட வேறு வேறு பிரிவுகளில் உதவி ஆய்வாளர்களாக சேர்ந்த பலர், ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுவிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு முன்னதாக பணியில் சேர்ந்த 2008-ம் ஆண்டு பேட்ச் உதவி ஆய்வாளர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்காமல் அவர்களை சோர்வு அடைய வைத்துள்ளனர்.
இதுபற்றி கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த அதிமுக அரசின் கவனத்திற்கு கொண்டுச்சென்றபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு காரணம் திமுக ஆட்சியில் சேர்ந்தவர்கள் என்பதால் அப்படி புறக்கணித்தார்களா என்று தெரியவில்லை. எந்த ஆட்சியில் பணியில் சேர்ந்தாலும் காவல்துறையினர் எப்போதும் நடுநிலையாகத்தான் இருப்பார்கள்.
நேரடி தேர்வின் மூலம் நியமிக்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர்களுக்கு 10 வருடத்திற்கு ஒரு முறை பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதியை கடந்த ஆட்சியாளர்கள் மதிக்கவில்லை. 13 ஆண்டுகளை கடக்கும் நிலையில் உள்ள இவர்களுக்கு இன்னும் பதவி உயர்வு வழங்கப்படாததால், அடுத்தடுத்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வும் தடைபடும்.
இரவு பகலாக மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் உடல் நலமும் மன நலமும் இந்த கொரோனா காலக்கட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
அப்படிப்பட்ட நிலையில், அர்ப்பணிப்புடன் பணி செய்யும் இவர்களுக்கு சரியான நேரத்தில் பதவி உயர்வு வழங்குவதுதான் நியாயமான நடவடிக்கையாக இருக்கும். 2008-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கினால்தான், 2011-ல் சேர்ந்து 10 ஆண்டுகளை கடந்துவிட்ட உதவி ஆய்வாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க முடியும். கடந்த ஆட்சியில் இதைப்பற்றி கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டார்கள்.
ஆனால், பதவி ஏற்றது முதல் பல்வேறு நியாயமான நடவடிக்கைகளையும், காவல்துறையினருக்கான சலுகைகளையும் அறிவித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடைய நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றனர்.
துறை ரீதியாக சந்திக்கும் பிரச்னைகளை வெளிப்படையாக சொல்ல முடியாத நிலையிருப்பதால், தங்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் தீர்த்து வைக்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட காவல்துறையினர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/police-sub-inspector-promotion-problem-seeks-cm-stalins-help
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக