புதிதாக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க நினைப்பவர்களுக்கு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே பாலிசி கிடைக்கும் என மேக்ஸ் லைஃப் மற்றும் டாடா ஏ.ஐ.ஏ ஆகிய இரண்டு காப்பீட்டு நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் தேவை எனில், இரண்டு டோஸ் தடுப்பூசியைப் போட்டிருக்க வேண்டும் என மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா ஏ.ஐ.ஏ நிறுவனம், புதிதாக பாலிசி எடுப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறது. இது குறித்து நிதி ஆலோசகரும், வெல்த் லேடர் (Wealthladder.co.in) நிறுவனத்தின் நிறுவனருமான எஸ்.ஸ்ரீதரனிடம் பேசினோம்.
``கொரோனா நோய்த் தொற்று பரவலுக்குப் பிறகு, பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், `கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவரா நீங்கள், கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சைக்கு உள்ளானீர்களா' போன்ற கொரோனா நோய்த் தொடர்பான விவரங்களை பாலிசிதாரரிடமிருந்து தெரிந்துகொள்ள கே.ஒய்.சி படிவத்தில் எக்ஸ்ட்ரா கேள்விகள் சிலவற்றைக் கேட்டு வருகின்றன.
தற்போது கூடுதலாக, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கச் சொல்லி கேட்கிறார்கள். இந்த நடவடிக்கை ஏற்புடையதுதான். ஏனெனில், சூழ்நிலைக்கு தகுந்தவாறு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
தற்போதைய நிலையில், மேக்ஸ் லைஃப் மற்றும் டாடா ஏ.ஐ.ஏ ஆகிய இரண்டு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே, டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுப்பதற்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்பதை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கின்றன.
Also Read: PF இன்ஷூரன்ஸ்: பணியாளர் இறந்தால் ரூ.7 லட்சம் வரை இழப்பீடு; எப்படிப் பெறுவது?
டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது ஒருவரது இறப்புக்குப் பிறகு, வாழ்வாதாரத்துக்கு அவரை நம்பியிருந்த குடும்பத்தினருக்கு மிகவும் பயன்தரக் கூடியது. கொரோனா பேரிடர் காலத்தில் யாருக்கு வேண்டுமானால் மருத்துவ ரீதியில் ஆபத்து நேரலாம் என்பதால், மக்களிடம் டேர்ம் இன்ஷூரன்ஸின் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க விஷயம்.
அதே சமயம், கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்ததிலிருந்து, நாட்டின் மருத்துவத்துறைச் சார்ந்த செலவுகள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு வீட்டின் மருத்துவமனைச் செலவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. டேர்ம் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பவர்களுக்கு, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அதிக அளவில் க்ளெய்ம்கள் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
கொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டால், உயிர் இழப்பு விகிதம் குறைகிறது என்பதால், இதை அவசியம் என இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளன. இரு காப்பீட்டு நிறுவனங்கள் புதிய விதிமுறையைப் பின்பற்ற இருப்பதால், வரும் நாள்களிலும் மற்ற காப்பீட்டு நிறுவனங்களும் இதேபோல விதிமுறையைக் கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதிமுறை டேர்ம் இன்ஷூரன்ஸூக்கு மட்டும்தான் பொருந்தும். மற்ற லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்களுக்குப் பொருந்தாது" என்றார்.
ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால், இனிவரும் காலங்களில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியாத நிலை உருவாகிவிடுமே என்று அவரிடம் கேட்டபோது, ``டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள முடியாத நிலை உருவாக வாய்ப்பு இல்லை. மாறாக, டேர்ம் கவரேஜ் குறைக்கப்படலாம் அல்லது வழக்கமான டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகையை விட, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கான பிரீமியம் தொகை அதிகரிக்கலாம். ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்வது உயிரைக் காப்பாற்றும் என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்" என்றார் தெளிவாக.
Also Read: கறுப்பு பூஞ்சை சிகிச்சைக்கும் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்குமா? - பதில் அளிக்கும் வல்லுநர்
தற்போது தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடுவதற்கு 84 நாள்கள் கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஒருவர் காப்பீடு வேண்டும் என முடிவெடுத்தாலும் தடுப்பூசிக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனால், தடுப்பூசி கட்டாயம் எனச் சொல்லும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், தற்போதைய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையையும் கருத்தில் கொள்வது அவசியமாகும்.
source https://www.vikatan.com/business/insurance/is-it-true-that-person-who-took-term-insurance-should-submit-covid-vaccine-certificate
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக