234 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் பதவியேற்ற புதிய அரசு கொரோனா தடுப்புப் பணிகளை முடுக்கிவிட்டிருப்பதுடன், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தயாராகிவருகிறது. ஆனால், 30 தொகுதிகளைக் கொண்டிருக்கும் புதுச்சேரியில், முதல்வராக ரங்கசாமி பதவியேற்று ஒரு மாதத்தைக் கடந்துவிட்ட நிலையில், அமைச்சரவை இன்னும் பதவியேற்கவில்லை. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்படவில்லை.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க ஆறு இடங்களிலும் வெற்றிபெற்றது. அதையடுத்து, தங்கள் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவியையும், இரண்டு அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியையும் கேட்டு ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. ஆனால், அவர்களின் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி அந்தக் கோரிக்கையை நிராகரித்தார் ரங்கசாமி. கொரோனா தொற்றால் மருத்துவமனையில் ரங்கசாமி அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தங்கள் கட்சியைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாக பா.ஜ.க நியமித்ததுடன், மூன்று சுயேச்சைகளையும் வளைத்து தன் எம்.எல்.ஏ-க்கள் பலத்தை 12 ஆக உயர்த்தியது. பா.ஜ.க-வின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களிடம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
‘தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பதவிக்காக பா.ஜ.க முடக்கி வைத்திருக்கிறது’ என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்ததால் பதற்றமடைந்த அக்கட்சி எம்.எல்.ஏ-க்கள், ‘‘எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. அமைச்சரவை பங்கீடும் முடிந்துவிட்டது. கூட்டணிக்காகப் பதவிகளை விட்டுக்கொடுத்துவிட்டோம்’’ என்று செய்தியாளர்களிடம் சொன்னார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் வழக்கம்போல மௌன சாமியாகவே இருந்து வருகிறார் ரங்கசாமி.
தேர்தலுக்கு முன்பே எதிரணிகளில் இருந்து வேட்பாளர்களை ‘பர்சேஸ்’ செய்த பா.ஜ.க., தேர்தலுக்குப் பின்பும் எதிரணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டுவருகிறது. துணை முதல்வர் பதவியில் ஏமாற்றமடைந்த பா.ஜ.க., பொதுப்பணித்துறை, கலால் துறை, உள்துறை உள்ளிட்டவற்றை ரங்கசாமியிடம் கேட்டுவருகிறது. ஆனால், அதற்கும் அவரிடமிருந்து எந்த சிக்னலும் வராததால் கடுப்பான பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸை உடைத்து ஆட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், ‘‘ரங்கசாமியிடம் பணிந்து செல்வதைப்போல பா.ஜ.க காட்டிக்கொள்வது புலி பதுங்குவதுபோலத்தான். நியமன எம்.எல்.ஏ-க்கள் மூவரும் தங்கள் கட்சிக்கு ஆதரவு தருவதாக ஆளுநருக்குக் கடிதம் கொடுத்து வைத்திருக்கிறது பா.ஜ.க. நாங்கள் தி.மு.க பக்கம் சென்றால், சட்டப்பேரவை விதிகளின்படி மெஜாரிட்டியை நிரூபிக்கும் வாய்ப்பு இரண்டாமிடத்தில் இருக்கும் கட்சிக்குத்தான் செல்லும். அதன்படி, அந்த வாய்ப்பை பா.ஜ.க-வுக்குத்தான் ஆளுநர் வழங்குவார். அப்போது, எங்கள் கட்சியிலிருந்து ஐந்து எம்.எல்.ஏ-க்களைத் தூக்கினால் கட்சித் தாவல் தடைச்சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது.
காரணம், மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ-க்கள் சேர்ந்து வேறு கட்சிக்குத் தாவினால், அவர்களின் பதவி பறிபோகாது. மெஜாரிட்டியையும் நிரூபித்து ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பதுதான் அவர்களின் திட்டம். அதற்காகத்தான் தேர்தலுக்குச் செலவு செய்த தொகையுடன் அடுத்த இரண்டு தேர்தலுக்குத் தேவையான தொகை மற்றும் அமைச்சர் பதவி என்று எங்கள் எம்.எல்.ஏ-க்களுக்கு வலை வீசி வருகிறார்கள். அதில் மூன்று எம்.எல்.ஏ-க்கள் கணிசமான தொகை வந்தால் தாவுவதற்கும் தயாராக இருக்கிறார்கள். ஒருவேளை கொடுப்பதை வாங்கிக்கொண்டு அமைச்சரவையில் பா.ஜ.க-வினர் தற்போது இடம்பெற்றாலும், அவர்களின் எதிர்காலத் திட்டம் இதுதான். அதனால்தான், சபாநாயகர் பதவியைப் பெறுவதில் அடம்பிடிக்கிறார்கள்’’ என்றார்கள்.
தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்து வெற்றிபெற்ற எம்.எல்.ஏ ஒருவரையும் இதே வாக்குறுதிகளுடன் சுற்றிச் சுற்றி வருகிறதாம் பா.ஜ.க தரப்பு. இது ஒருபுறமிருக்க ரங்கசாமியின் மௌனத்துக்கு மற்றொரு காரணத்தையும் கூறுகிறார்கள். ஏனாமில் ரங்கசாமியைத் தோற்கடித்த ஶ்ரீநிவாஸ் அசோக், ரெட்டியார்பளையத்திலும் திருபுவனையிலும் அவரின் வேட்பாளர்களைத் தோற்கடித்த சிவசங்கரன் மற்றும் அங்காளன் ஆகிய மூன்று பேரையும் பா.ஜ.க இழுத்துக்கொண்டதால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் ரங்கசாமி.
Also Read: புதுச்சேரி: `நியமன எம்.எல்.ஏ-க்களைத் தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி?!’ -பா.ஜ.க-வின் அடுத்த அதிரடி
‘பா.ஜ.க தனது வழிக்கு வராத பட்சத்தில், தி.மு.க-வின் ஆதரவுடன் பா.ஜ.க-வை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைப்பதுதான் ரங்கசாமியின் அடுத்தகட்ட திட்டமாக இருக்கும்’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!
source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-politics-bjp-trying-to-pull-nr-congress-mlas
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக