Ad

திங்கள், 7 ஜூன், 2021

`ரயில்வே தொழிலாளர்களையும் முன்களப் பணியாளராக அறிவியுங்கள்!’ -பிரதமருக்கு கோரிக்கை

கொரோனா இரண்டாம் அலை நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினருடன், பத்திரிகையாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ளது அரசு. இந்நிலையில் தங்களையும் முன்களப் பணையாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று ரயில்வே தொழிலாளர்கள் பிரதமருக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்திய ரயில்வே

இது பற்றி நம்மிடம் பேசிய எஸ்.ஆர்.எம்.யூ மதுரை உதவி கோட்ட செயலாளர், வெ. ராம்குமார், "கொரோனாவால் இன்று நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்துள்ளது. மேற்கண்ட பணியில் உள்ளோர் கொரோனா தொற்றினால் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

வெ.ராம்குமார்

பேருந்து போக்குவரத்து, சரக்கு வாகன போக்குவரத்து இல்லாத நிலையில் ரயில்வே தொழிலாளர்கள்தான் ஊரடங்கு காலத்தில் சரக்கு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்கி கொண்டிருக்கின்றனர். மேலும் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற உயிர்காக்கும் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் உயிரை பணயம் வைத்து இயக்கிக் கொண்டிருக்கின்றனர்.

13 லட்சம் ரயில்வே தொழிலாளர்களில், ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கும் அதிகமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரை இழந்துள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் ரயில் ஓட்டுநர்கள் ஆவார்கள்.

எனவே ரயில்வே தொழிலாளர்களையும் முன்கள பணியாளர்களாக மத்திய அரசு அறிவிக்க எஸ்.ஆர்.எம்.யூ- ஏ.ஐ.ஆர்.எப் (SRMU/AIRF) சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

ட்வீட்டர் போராட்டம்

கொரோனா காலத்தில் களத்தில் இறங்கி போராட முடியாது என்பதால் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம் முடிவின்படி நாடு முழுவதும் 17 ரயில்வேக்கள் மற்றும் 8 உற்பத்தி நிலையங்களில் பணிபுரியும் ரயில்வே தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அரசு அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர், ரயில்வே அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு ட்விட்டர் மூலம் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.

கொரோனா காலத்திலும் அயராது பணியாற்றி வரும் ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானதுதான்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/railway-employees-movement-for-announcing-them-as-front-line-workers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக