Ad

வெள்ளி, 4 ஜூன், 2021

பன்நோக்கு மருத்துவமனை முதல் கனவு இல்லம் வரை.! - கருணாநிதி பிறந்தநாளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்

இன்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு, பல்வேறு திட்டங்கள் தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். முன்னதாக அவர் காலையில் சென்னை மெரினாவில் இருக்கும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார். அவருடன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர் பாலு, அமைச்சர்கள் துரை முருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர். அதனை தொடர்ந்து கருணாநிதியின் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார். குறிப்பாக, கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியான ரூ.2,000, இரண்டாவது தவணை வழங்கலை தொடங்கி வைத்தார். மாவட்டத்துக்கு 1,000 மரக்கன்றுகள் என 38,000 மரங்கள் நடும் திட்டம், ரேஷன் கடைகளில் 14 மளிகை பொருள்கள் இலவசமாக வழங்கும் திட்டம் போன்றவற்றை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில் தற்போது புதிய அறிவிப்புகளை முதலவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

*கொரோனா காலத்தில் களப் பணியாற்றி வரும் 1,17,184 காவல்துறையினருக்கு ரூபாய் 5,000 ஊக்கத் தொகையாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

*தென்சென்னையில் ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுகிறது.

சென்னை பெரு நகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்.

*சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்

மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படுகிறது

*இலக்கிய மாமணி விருது துவக்கம்:

இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதே போல தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி என்னும் விருது உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இவ்விருது பாராட்டு பத்திரம் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்

*கனவு இல்லம்:

தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்களின் ஞானபீடம், சாகித்ய அகாடமி, போன்ற தேசிய விருதுகள் மாநில இலக்கிய விருதுகள் புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருது பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.

*திருவாரூர் மாவட்டத்தில் 30 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர் களங்கள் அமைக்கப்படும்.

*திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்தில் இலவச பயண சலுகை:

ஊரடங்கு காலம் விலக்கி கொள்ளப்பட்டவுடன் இந்த ஆணை நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-government-announcements-on-karunanidhi-birthday

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக