Ad

சனி, 5 ஜூன், 2021

177 பந்துகளில் வெறும் 48 ரன்கள்... ரோரி பர்ன்ஸின் இந்த 'புஜாரா இன்னிங்ஸை' ஏன் கொண்டாட வேண்டும்?

கடந்த ஆஸ்திரேலியா சீரிஸில் ஒரு இன்னிங்ஸில் புஜாரா 174 பந்துகளில் ஜென் நிலையில் ஒரு அரைசதம் அடித்திருந்தார். சமீபகால கிரிக்கெட்டில் மிக நிதானமாக அடிக்கப்பட்ட அரைசதம் அதுதான். இப்போது புஜாராவின் அந்த ரெக்கார்டை முறியடிக்கும் வகையில் இங்கிலாந்தின் ரோரி பர்ன்ஸ் 177 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கிறார். இந்த முரட்டு உருட்டலுக்கு காரணம் என்ன? ரோரி பர்ன்ஸின் ஜென் நிலை இங்கிலாந்து அணியை காப்பாற்றியிருக்கிறதா?

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெவன் கான்வேயின் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை வலுவான நிலையில் முடித்திருந்தது. 375 என்ற ஸ்கோரை கடக்க வேண்டும் என்ற நிலையில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

ஒரு கட்டத்தில் ஃபாலோ ஆன் கூட ஆகலாம் என்ற பரிதாபமான நிலையில் இங்கிலாந்து அணி திணறிக் கொண்டிருந்தது. ஆனால், ஓப்பனராக களமிறங்கிய ரோரி பர்ன்ஸ் மட்டும் கடைசி வரை களத்தில் நின்று போராடி சதம் அடித்து அணியை மீட்டிருக்கிறார். இந்த இன்னிங்ஸ் மூலம் ஃபாலோ ஆனை தவிர்த்ததோடு நியூசிலாந்து அணியின் முன்னிலையையும் பெரிதாக குறைத்திருக்கிறார்.

இந்த டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லார்டஸில் நடைபெற்றாலும், மைதானத்தின் பிட்ச் வழக்கத்தைவிட வித்தியாசமான தன்மையுடனே இருந்தது. எப்போதும் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் நல்ல புற்கள் நிறைந்து ஸ்விங்குக்கு ஒத்துழைக்கும் வகையிலேயே இங்கிலாந்து பிட்ச்கள் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த போட்டியின் பிட்ச் இப்படி புற்கள் நிறைந்து காணப்படவில்லை.

ரோரி பர்ன்ஸ்

கொஞ்சம் வறண்ட தன்மையோடு ஃப்ளாட் ட்ராக்காகவே இருந்தது. காரணம், இந்த ஆண்டு வரவிருக்கும் ஆஷஸ் தொடர். ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்தை போன்ற புற்கள் நிறைந்த பிட்சுகளை எதிர்பார்க்க முடியாது. அதனாலயே இங்கிலாந்து வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் விதத்தில் லார்ட்ஸில் ஆஸ்திரேலிய தன்மையுடைய விக்கெட் உருவாக்கப்பட்டிருந்தது. இதை புரிந்துக்கொண்டால்தான் பர்ன்ஸின் இன்னிங்ஸ் எவ்வளவு முக்கியமானது என்பது தெரியவரும்.


நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துவிட்டார். பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமானதாக இருந்தாலும் நியூசிலாந்து வீரர்கள் கடுமையாக தடுமாறி இருந்தனர். டெவன் கான்வே மட்டுமே சிறப்பாக ஆடியிருந்தார். ஸ்விங் செய்ய முடியவில்லை என்றாலும், இங்கிலாந்து பௌலர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை சில வேரியேஷன்களைப் பயன்படுத்தி செட் செய்து வீழ்த்தி இருந்தனர்.

கான்வேயின் பொறுப்பான இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 375 ரன்களை எடுத்தது. இரண்டாம் நாளின் கடைசி செஷனில்தான் இங்கிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. டாம் சிப்லே டக் அவுட் ஆக, க்ராலி 2 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார்.

இந்நிலையில்தான் பர்ன்ஸும் கேப்டன் ஜோ ரூட்டும் கூட்டணி போட்டனர். இந்த கூட்டணி இரண்டாம் நாளை மேலும் விக்கெட் விழாமல் முடித்துவிட்டது. இங்கிலாந்து அணி 111-2 என்ற நிலையில் இருந்தது. பர்ன்ஸும் ரூட்டும் சிறப்பாக ஆடியதால் இங்கிலாந்தை மீட்டு விடுவார்கள் என்றே தோன்றியது.இதற்கு பிறகுதான் ட்விஸ்ட்டே நடந்தது. லார்ட்ஸில் அடைமழை வெளுத்து வாங்கியதால் மூன்றாம் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முடித்து வைக்கப்பட்டது.

ஒரு நாள் முழுக்க மழை வெளுத்து வாங்கிய பிறகு பிட்ச் எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ட்ரை விக்கெட்டாக பெளலர்களை சோதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிட்ச் மழையால் இயற்கையாகவே பௌலர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாறுயது. மழையோடு கழிந்த மூன்றாம் நாளுக்கு பிறகு நேற்று நான்காவது நாளில் பர்ன்ஸும் ஜோ ரூட்டும் பேட்டிங் ஆட வந்தனர். ஜேமிசன் வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் ஜோ ரூட் எட்ஜ் ஆகி ஸ்லிப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரோரி பர்ன்ஸ்

இரண்டாம் நாளில் ஸ்விங் செய்ய முடியாமல் ஷார்ட் பிட்ச் டெலிவரிகளாக வீச முயன்ற நியூசிலாந்து பௌலர்களுக்கு நான்காவது நாளில் பந்து கச்சிதமாக ஸ்விங் ஆனது. மிடில் & லெக் ஸ்டம்ப் லைனிலிருந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அழகாக பந்து மூவ் ஆனது. குஷியான டிம் சவுதி தனது அனுபவத்தை பயன்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். 140-6 என்ற நிலையில் 200 ரன்னுக்குள் ஆல் அவுட் ஆகிவிடும் சூழலில் இங்கிலாந்து அணி சிக்கியது.

ஆனால், ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியையும் திணறவைத்த கிவி பௌலர்களால் ரோரி பர்ன்ஸை மட்டும் சாய்க்க முடியவில்லை. இரண்டாம் நாளின் கடைசி செஷனில் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்திருந்தாலும், நியூசிலாந்தின் அட்டாக்குக்கு கவுண்டர் அட்டாக்கே கொடுத்துக் கொண்டிருந்தார் பர்ன்ஸ். சீராக தொடர்ந்து பவுண்டரிக்களை அடித்து ரன்சேகரிப்பில் ஈடுபட்ட பர்ன்ஸ் 90 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.

நான்காவது நாளில் நியூசிலாந்து பௌலர்களுக்கு மழையின் புண்ணியத்தால் பந்து நன்கு ஸ்விங் ஆக, தனது ஆட்ட அணுகுமுறையை மொத்தமாக மாற்றினார் பர்ன்ஸ். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான அடிப்படையே இதுதான். இங்கே பந்துகளை எப்படி அடிக்கிறோம் என்பதை விட எப்படி அடிக்காமல் விடுகிறோம் என்பதே முக்கியம். ரோரி பர்ன்ஸ் இந்த விஷயத்தில் நேற்று பயங்கர தெளிவோடு இருந்தார்.

சவுதி உள்ளே வெளியே என மாற்றி மாற்றி ஸ்விங் செய்து மிரட்டினார். அவருக்கு ஒத்துழைப்பாக ஜேமிசனும் வேக்னரும் காற்றிலேயே மேஜிக் செய்தனர். ஆனால், ரோரி பர்ன்ஸ் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. பாடி லைனில் வந்தால் மட்டுமே பந்தை தொட்டார். ஆஃப் ஸ்டம்புக்கு ஒரு இன்ச் வெளியே சென்றாலும் லீவ் மட்டுமே அதற்கான பதில். இப்படி ஆடுவதற்கு மனதளவில் பெரும் முதிர்ச்சியும் பொறுமையும் வேண்டும். அது பர்ன்ஸிடம் நிறையவே இருந்தது.

ரோரி பர்ன்ஸ்

ஒரு கட்டத்தில் ஜேமிசனின் ஓவரில் ஆறு பந்துகளையும் கூட லீவ் செய்தார். இப்படி நிலைத்து நின்று மெது மெதுவாக பர்ன்ஸ் ஒரு 80 ரன்களை தாண்டும் போது இங்கிலாந்து அணிக்கு 9 விக்கெட்டுகள் விழுந்துவிட்டது. இதன்பிறகுதான் கொஞ்சம் வேகமெடுத்து சதத்தை நெருங்கினார் பர்ன்ஸ். 90 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்திருந்த பர்ன்ஸ் 267 பந்துகளில் சதத்தை தொட்டார். 177 பந்துகளில் 48 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.

ஆஸ்திரேலிய சீரிஸில் புஜாரா 174 பந்துகளில் அரைசதம் கடந்திருப்பார். சமீபத்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் மெதுவாக அடிக்கப்பட்ட அரைசதம் அதுவாகத்தான் இருக்கும். ஆனால், ரோரி பர்ன்ஸ் நேற்று அதையும் தாண்டிவிட்டார். புஜாராவை தாண்டிய ஒரு பொறுமை...புஜாரவை தாண்டிய ஒரு நிதானம்!

100 ரன்களை கடந்த பிறகு டிவில்லியர்ஸ் போன்று சுற்றிமுற்றி வெறித்தனமாக ஷாட்களை ஆடினார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போனாலே பேட்டை தூக்கி சரண்டர் ஆன பர்ன்ஸ், ஜேமிசன் ஓவரில் ஒயிடு லைன் வரை நகர்ந்து வந்து ஸ்லாக் ஸ்வீப் ஆடி சிக்சர் அடித்தார். 297 பந்துகளில் 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி விக்கெட்டாக சவுத்தியின் பந்துவீச்சில் வீழ்ந்தார் பர்ன்ஸ்.

ஆரம்பத்தில் ஒரு இயல்பான ஆட்டம், பின்னர் ஒரு அசாத்தியமான நிதானத்தோடு பொறுப்பான ஆட்டம், கடைசியில் டி20 பாணியிலான ஃபினிஷ் என மிரட்டியிருந்தார் பர்ன்ஸ். 200 ரன்களுக்கும் மேல் லீட் கொடுத்து இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி நகர்ந்திருக்க வேண்டிய இங்கிலாந்து அணியை பொறுப்பான சதத்தின் மூலம் மீட்டெடுத்திருக்கிறார் பர்ன்ஸ். இப்போது ஆட்டம் ட்ரா ஆவதற்கான வாய்ப்பே அதிகம் இருக்கிறது. இந்த இன்னிங்ஸின் மூலம் லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டிலும் ரோரி பர்ன்ஸ் பெயரை பதித்துவிட்டார்.



source https://sports.vikatan.com/cricket/why-rory-burns-innings-should-be-celebrated

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக