Ad

சனி, 5 ஜூன், 2021

மகாராஷ்டிரா: 'வடிவேலு பாணியில் வங்கியில் ரூ.55 லட்சம் கேட்ட வாலிபர்; மடக்கிப் பிடித்த போலீஸார்!'

நடிகர் வடிவேலு எலி படத்தில் ஒரு பேப்பர் துண்டை வங்கியில் கொண்டு வந்து கொடுத்து பணத்தை எடுத்துக் கொடு என்று சொல்வது போன்ற ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு நகரத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டம் சேவாகிராம் என்ற இடத்தில் போலீஸ் நிலையத்திற்கு எதிரில் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் வந்த ஒருவர் தன்னிடம் இருந்த ஒரு பேப்பரை வங்கியின் கேஷியரிடம் கொடுத்து தனது உடலில் வெடிகுண்டு கட்டி இருப்பதாகவும், உடனே 55 லட்சம் ரூபாயை எடுத்துக் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார். தனக்கு உடலில் பல வியாதிகள் இருப்பதாகவும், அதற்கு சிகிச்சையளிக்க அதிகப்படியான பணம் தேவைப்படுவதாகவும், இன்னும் 15 நிமிடத்தில் பணத்தை கொடுக்கவில்லையெனில் வெடிகுண்டை வெடிக்க செய்துவிடுவேன் என்று மிரட்டினார்.

Theft

இதனால் வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது. உடலில் இருந்த வெடிகுண்டு போன்ற ஒன்றையும் காட்டினார். அந்த நபர் வங்கி ஊழியர்களை மிரட்டிக்கொண்டிருக்கும் போதே எதிரில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீஸார் விரைந்து வந்து அந்த நபரை கைது செய்தனர். அவரைக் கைது செய்து விசாரித்த போது அவரது பெயர் யோகேஷ் என்றும், இண்டர்நெட்சென்டர் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். அளவுக்கு அதிகமான கடன் வாங்கிவிட்டதால் அதனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டதாகவும் எனவே இந்த காரியத்தில் ஈடுபட்டதாகவும் போலீஸில் தெரிவித்தார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் வங்கியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட யோகேஷிடமிருந்து டிஜிட்டல் வாட்ச், 5 பைப் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. பைப்பில் பிளாஸ்டர் ஆப் பேரீஸ் நிரப்பப்பட்டு இருந்தது. இது தவிர கத்தி மற்றும் பொம்மை துப்பாக்கி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். போலி வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து யோகேஷ் வாங்கியதாக இன்ஸ்பெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்



source https://www.vikatan.com/news/crime/a-man-has-been-arrested-in-maharashtra-for-allegedly-handing-over-a-paper-to-a-bank-and-asking-for-rs-55-lakh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக