Ad

செவ்வாய், 26 ஜனவரி, 2021

நெல்லை: புற்றுநோய் பாதித்த இளைஞர் - மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக உதவிய மாவட்ட ஆட்சியர்!

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்துவரும் அவருக்கு இரு மகன்கள் உள்ளனர். அவரது மூத்த மகன் விஷால் சந்தோஷ்குமார் என்ற 18 வயது இளைஞர், தொழில் பயிற்சிப் பள்ளியில் படித்துவந்தார்.

Also Read: `ஊரடங்கால் உணவின்றித் தவித்த முதியவர்; போலீஸாரின் மனிதாபிமானம்!’- நெகிழ்ந்த யுவராஜ் சிங்

கடந்த 2019-ம் ஆண்டு அவர் கடுமையான முட்டுவலியால் அவதிப்பட்டுள்ளார். உடனடியாக மகனை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற முருகன், அங்கு மூட்டு வலிக்கு சிகிச்சை எடுத்துள்ளார். தொடர்ந்து வலி நீடித்ததால், விஷால் சந்தோஷ்குமாருக்கு புற்றுநோய் அறிகுறியாக இருக்குமோ என மருத்துவர்கள் சந்தேகித்துள்ளனர்.

அதனால், விஷால் சந்தோஷ்குமாரை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், மூட்டுப் பகுதியில் புற்றுநோய் ஆரம்பக் கட்டத்தில் பாதித்திருந்தது தெரியவந்துள்ளது. அதனால் அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் விஷால்

மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததுடன், அதற்காக அரசு காப்பீட்டுத் திட்டத்தின் அனைத்து நடைமுறைகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆனாலும், அறுவைச் சிகிச்சை செய்யாமல் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில், விஷால் சந்தோஷ்குமாருக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளமுடியாத நிலை உருவாகியுள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றபோது புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட இளைஞர்

காலின் மூட்டுப் பகுதியில் இருந்த கேன்சர் செல்கள் மேலும் பரவியதால் இடுப்பு வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் சந்தோஷ்குமார் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இடுப்பு வரை காலை அகற்றுவதுதான் ஒரே வழி என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதால் குடும்பத்தினர் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

அறுவைச் சிகிச்சை மூலம் இடுப்பு வரை அகற்றினாலும் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. இளைஞர் விஷால் சந்தோஷ்குமார் வலியால் அவதிப்பட்டு வருகிறார். அதற்காக தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றாலும் சிகிச்சைக்காகச் செலவு செய்ய முடியாத நிலையில் குடும்பத்தினர் உள்ளனர்.

ஆட்டோவில் இளைஞர் விஷால் சந்தோஷ்குமார்

கடுமையான புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளைஞருக்கு உரிய சிகிச்சை கிடைக்க உதவி செய்ய வேண்டும் என விஷாலுடன் வந்த அவரது தந்தை முருகன், நெல்லை ஆட்சியர் விஷ்ணுவிடம் மனு அளித்தார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்சியர், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து இளைஞரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவரை உள்நோயாளியாக அனுமதித்து உரிய சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனிடையே, இளைஞர் விஷால் சந்தோஷ்குமார் வீட்டில் இருந்து ஆட்டோவில் வந்திருந்தார். அவரை அங்கிருந்தே அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் வந்த ஆட்டோவுக்கு ஆட்சியர் அலுவலக வாயிலில் பாதுகாப்புக்காக நின்ற பெண் தலைமைக் காவலர் வள்ளி என்பவர் பணம் கொடுத்தார். இத்தகைய சிறிய உதவிகளே, சமூகத்தில் மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன.



source https://www.vikatan.com/news/tamilnadu/tirunelveli-collector-helped-cancer-affected-youth-to-get-treatment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக