கன்னியாகுமரி மாவட்டம் மல்லன்கோடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் நடந்த திருவிளக்கு பூஜையில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ``அமெரிக்கா கிறிஸ்தவ பாரம்பரிய நாடு. நம் நாடு இந்து பாரம்பர்யம் மிக்க நாடு. ஐயர்கள் பூஜை ஆரம்பிக்கும் முன்பு பரத வருஷே, பரத கண்டே என்று கூறுகிறார்கள். 2,000 வருடங்களாக காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து, கேதர்நாத் பத்திரிநாத்தில் இருந்து நமது அம்மன் கோயில்வரை எல்லா கோயில்களிலும் இதை சொல்கிறோம். இதுதான் இந்த நாடு, இந்து நாடு என்பதற்கு இதுதான் உண்மையான சாட்சி. சிலர் இதை செக்கியூலர் நாடு என்கிறார்கள். நம் சம்பிரதாயம் என்பது இந்து சம்பிராதயம்தான். நம் நாடு பாரதநாடுதான்.
ராகுல்காந்தி மூன்று நாட்கள் தமிழ்நாட்டில் டூர் வந்தார். இதற்கு முன்னாடி தி.மு.க தலைவர் ஸ்டாலின் டூர்வந்தார். இவங்க எல்லாரும் இந்துக்களுக்கு எதிராக மட்டுமே பேசினார்கள். இந்துக்களிடம் ஒற்றுமை கிடையாது என்பதுதான் இதற்கு காரணம். தேர்தல் வரப்போகிறது என்பதற்காக கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியாக இந்துக்களுக்கு எதிராக அவர்கள் பேசுகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பற்றி பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம் ராகுல் காந்தி கேட்க வேண்டும். 1962-ல் இந்தியா சீனா போரின்போது, எல்லைக்குச் சென்று நம் படை வீரர்களுக்கு சேவை செய்த ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். சீனாவின் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் இறந்துவிட்டார்கள். அதனால்தான் 1963-ம் ஆண்டு நடந்த குடியரசுதின விழாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு என பிரத்யேகமாக ஒரு பரைடு கொடுக்கப்பட்டது. 3,000 ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள். ஆனால் இது புரியாத ராகுல்காந்தி, தமிழ் மண்ணில் வந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் இந்து சமயத்தையும் தவறாக பேசுகிறார்.
பெரியார் எப்ப பிறந்தாரோ அப்போதுதான் தமிழ்நாடு எனும் சரித்திரம் உருவானது என நினைக்கிறார்கல். நம் நாயன்மார்களை பற்றியும், சிறந்த கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனைப் பற்றியும், பாண்டியர்களைப் பற்றியும் அவர்கள் பேசுவது இல்லை. பெரியார் பிறந்தபிறகு தமிழ்நாட்டில் என்ன ஆச்சு என்பதுபற்றிதான் பாடப்புத்தகத்தில் இருக்கிறது. இப்ப இருக்ககூடிய குழந்தைகள் அந்த பாடப்புத்தகத்தை படித்துவிட்டு அதுதான் தமிழ்நாடு, அதுதான் இந்து தர்மம், அதுதான் தமிழ் எழுச்சி என தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
2004 முதல் 2014-வரை காங்கிரஸ் ஆட்சியில் அதிகமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்தது. மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் மட்டும் 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் 2009-ல் மட்டும் 1,060 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். இந்தியாவில் விவசாயம் தோற்றுப்போய்விட்டது என்ற நிலை வந்த போது நரேந்திர மோடி விவசாயிகளை தலைநிமிர வைத்திருக்கிறார். அற்புதமான ஒரு விவசாய சட்டம் வரும்போது இந்த திருடர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு இனி விவசாயிகள் பிழைக்கமாட்டார்கள், இது தவறான சட்டம் என்கிறார்கள்.
2009-ல் இலங்கை போர் நடந்தபோது தி.மு.க கூட்டணி ஆட்சி, அந்த நாட்டுக்கு தேவையான உதவி செய்து 90 ஆயிரம் சகோதர சகோதரிகளை படுகொலை செய்ய காரணமாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழ் மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் சுட்டு கொல்லப்பட்டார்கள். கடந்த ஒருவாரத்திற்கு முன்பு நான்கு மீனவர்கள் கொலை செய்யப்பட்டபோது இலங்கை தூதரை நமது அரசு டெல்லிக்கு வரவழைத்து மிக கடுமையான எச்சரிக்கையை கொடுத்து, அச்சுறுத்தி அனுப்பியிருக்கிறோம்.
இலங்கையில் தமிழர்களுக்கு 47 ஆயிரம் வீடு கட்டிகொடுத்துள்ளோம். மேலும் 13 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. ஐ.நா சபைக்கு போகும்போது சரி, சீனா எல்லைக்கும் போகும்போதும் திருக்குறள், கம்பராமாயணம், கணியன் பூங்குன்றனார் பற்றி பிரதமர் பேசுகிறார். இதற்கு முன்பு வெளிநாட்டு பிரதமர்கள் வரும்போது எப்பவோ இறந்த அவுரங்கசீப், எப்பவோ கட்டின தாஜ்மஹாலுக்கும் அழைத்துச் சென்று காட்டினார்கள். ஆனால் முதன் முறையாக 3,000 ஆண்டுக்கு மேல் கலாசாரம் இருக்கும் மாமல்லபுரத்துக்கு அழைத்துச் சென்ற மோடி தமிழர்களுக்கு எதிரானவரா? தமிழகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 2021-ல் அதிகமான பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சட்டசபைக்கு செல்வார்கள். 2026-ல் பா.ஜ.க முதல்வர் கோட்டையில் அமருவார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/annamalai-speech-in-kumari-temple-event
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக