`பெண் மனது ஆழமானது’ என்று ஆணுக்கு சொல்லியிருக்கிற இந்த சமூகம், ஆண் மனது எப்படிப்பட்டது என்று பெண்ணுக்குச் சொன்னதாகவே தெரியவில்லை. தான் நேசிக்கிற ஒரு காரணத்துக்காகவே, `அவர் ரொம்ப நல்லவர்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுப்பதற்கும், பொள்ளாச்சி சம்பவம் போல ஆபத்தில் மாட்டிக் கொள்வதற்கும், ஆண்களைப்பற்றிய சரியான புரிந்துணர்வு பெண்களுக்கு இல்லாததுதான் காரணம். அந்த வகையில் ஆண்களைப் பற்றி பெண்களுக்கு முழுமையாகப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதற்காக அவள் விகடனில் `ஆண்களைப் புரிந்துகொள்வோம்' என்கிற தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறோம்.
Also Read: ஆண்களைப் புரிந்துகொள்வோம்! : 4 - கணவரின் நண்பர்களை மனைவிக்குப் பிடிப்பதில்லையே... ஏன்?
இந்தத் தொடர் ஆண்களின் தவறுகளை மட்டுமல்ல; அவர்கள் உலகத்து அவஸ்தைகளையும் பேசும். கடந்த இதழ்களில், பிளேபாய் மற்றும் சாக்லெட் பாய் இயல்புகளையும், பெண்களின் மார்பகத்தை உற்றுப்பார்க்கிற ஆண்களைப்பற்றியும், குடும்ப வன்முறை குறித்தும் பேசியிருந்தோம். இந்த இதழில் `மனைவி கணவனின் நண்பர்களை ஏன் வெறுகிறாள்?' என்பது பற்றிப் பேசியிருக்கிறோம்.
சினிமாக்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் பெரும்பாலான மனைவிகளுக்குக் கணவர்களின் நண்பர்களைப் பிடிப்பதில்லை. வீட்டு வேலைகள், குழந்தைகள் என்று வீட்டில் தன்னந்தனியாக மனைவி போராடிக்கொண்டிருக்க, கணவனோ நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு வீட்டுக்குத் தாமதமாக வருவது, குழந்தை வளர்ப்பில் உதவி செய்யாதது, நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது, போதை காரணமாகக் கணவருக்கு விபத்து நடந்துவிடுமோ என்று மனைவி பயப்படுவது என்று நியாயமான பல காரணங்கள் இருக்கின்றன.
இதழில் வெளியாகும் தொடரின் நீட்சியாக விகடன் இணையதளத்திலும் இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளும் சூத்திரத்தை பலதுறை நிபுணர்களின் கருத்துகள் வாயிலாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். அப்படி கணவனின் நண்பர்களை மனைவி வெறுப்பது தொடர்பாக தன் படங்களில் நகைச்சுவையுடன் சேர்த்து நட்புக்கு அதிக முக்கியத்துவம் தருகிற இயக்குநர் எம்.ராஜேஷிடம் பேசினோம்.
``காதலுக்குப்பிறகோ, கல்யாணத்துக்கப் பிறகோதான் ஆண்களோட வாழ்க்கையில பொண்ணுங்க வர்றாங்க. ஆனா, சாக்லேட்டை காக்கா கடி கடிச்சு ஷேர் பண்ணிக்கிற காலத்துலேயே ஆணோட வாழ்க்கையில நண்பர்கள் வந்துடுறாங்க. மனைவியைவிட ஃபிரெண்ட்ஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறான்னு ஆண் மேல புகார் சொல்ல முடியாது. ஏன்னா, கல்யாணத்துக்கு முன்னாடியும் தன் குடும்பத்தைவிட நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துட்டு திட்டு வாங்கினவன்தான் அவன். ஃபிரெண்ட்ஸோட ஊர் சுத்துறதும் அதுக்காக வீட்ல திட்டு வாங்குறதும் ஆணுக்குப் பழகின விஷயம்தான்.
திருமண வாழ்க்கையில, `மனைவியை நல்லா பார்த்துக்கணும், அவ மனசு கஷ்டப்படாம வெச்சுக்கணும், கோபப்படுற மனைவியை கூல் பண்ணணும்' என்றெல்லாம் ஆணுக்கு பிரஷர் இருக்கும். இந்த மாதிரியான எந்த டென்ஷனும் ஆணுக்கு நண்பர்கள்கிட்ட ஏற்படுறதில்லை. `ஒரேயொரு ஃபிரெண்ட் வெச்சிருக்கிற எனக்கு மட்டும் ஏன் இப்படி'னு சந்தானம் மாதிரி அப்பப்போ புலம்பினாலும், ஆண்கள் தங்களோட நண்பர்களை விட்டுக் கொடுக்காததுக்கு இதுதான் காரணம்.
Also Read: ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 2
இன்னொரு முக்கியமான விஷயம், எவ்வளவு வேகமாக கோபப்பட்டு நண்பர்களோட சண்டை போடுறானோ அதே வேகத்துல எந்த ஈகோவும் இல்லாம உடனே ஒண்ணு சேர்ந்துடுவான் ஆண். பொண்ணுங்க இப்படிக் கிடையாதுன்னு நான் சொல்ல வரலை. ஆணோட இயல்பு அது. கல்யாணமாகி பல வருஷம் கழிச்சு கணவனுக்கும் மனைவிக்கும் நடுவுல சின்னதா நட்பு வந்த பிறகு, மேரேஜ் லைஃப் ஈகோ இல்லாம ஸ்மூத்தா இருக்கிறதைக் கவனிச்சிருக்கீங்களா? வீட்டுக்குள்ளேயும் சரி, வெளியேயும் சரி வாழ்க்கைக்கு நட்பு அவசியம்ங்க.
கணவர்களோட நண்பர்களை மனைவிகள் எதிரி மாதிரி பார்க்கிறதுக்கு கணவர் மேல இருக்கிற லவ்வும் ஒரு காரணம். நம்ப முடியலையா? மனைவிகளைப் பொறுத்தவரைக்கும் `என் புருஷன் நல்லவர். ஃபிரெண்ட்ஸோட சேர்ந்தாதான் தண்ணியடிப்பார், தம்மடிப்பார். இதே உளவியல் அம்மாக்களிடமும் இருக்கும். `என் புள்ள ரொம்ப நல்லவன். பக்கத்து வீட்டுப் பையன் கூட சேர்ந்துதான் கெட்டுப் போயிட்டான்' என்பார்கள்.
Also Read: ஆண்களைப் புரிந்துகொள்வோம் - 3: அணைத்தாலும் வேண்டாம், அடிக்கிற கை!
நண்பர்கள் விஷயத்துல ஆண்கள் ரொம்ப தெளிவு. `அவனைப் பார்த்தே பல நாள் ஆச்சும்மா'ன்னு மனைவிக்கு வாலையும் `ஆன் தி வே மாப்புள'ன்னு நண்பர்களுக்கு தலையையும் காட்டிடுவாங்க. நண்பர்களோட நான் மட்டும் ஹாலிடே போறேன்னா `இவன் அங்க போய் என்னவெல்லாம் சேட்டை செய்வானோ'ங்கிற சந்தேகத்துல மனைவிக்கு கோபம் வரத்தான் செய்யும். இதையே, ஃபிரெண்ட் குடும்பத்தோட நாமளும் குடும்பமா வெளியே போகலாம்னு கணவர்கள் சொல்லிப் பார்க்கட்டும்... எந்த மனைவியும் கோபப்பட மாட்டாங்க.''
கணவரின் நண்பர்களை மனைவிகளுக்குப் பிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்து உளவியல் ஆலோசகரின் கருத்துகளை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
source https://www.vikatan.com/lifestyle/relationship/director-m-rajesh-speaks-about-issues-happening-in-the-family-due-to-husband-friends
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக