Ad

புதன், 6 ஜனவரி, 2021

`இது ஏற்க முடியாத காரணம்!' - பரோல் வழக்கில் ரவிச்சந்திரன் தரப்பு வாதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்துவரும் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு கோரிய வழக்கில் தமிழக உள்துறை செயலர், சிறைத்துறைத் தலைவர் உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது.

``கடந்த 27 வருடங்களுக்கு மேலாக சிறையிலிருக்கும் எனக்கு மன உளைச்சல் ஏற்படுவதோடு, அது உடல்நலத்தையும் பாதிக்கிறது. ஏழு வருடங்கள், 10 வருடங்கள், 14, 20 வருடங்கள் என சிறையில் இருந்தவர்கள் பலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட நிலையில், நான் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை’ என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்துவரும் ரவிச்சந்திரன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்நிலையில் அவருடைய தாயார் ராஜேஸ்வரி தற்போது அளித்த மனுவில்,``’ஏழு நபர்களையும் விடுதலை செய்யலாம்' என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது. கொரோனா காலத்தில் எனது மகனுக்கு 3 மாத கால விடுப்பு வழங்கக் கோரி மனு அனுப்பினேன்.

அதற்கு மத்திய அரசின் சட்டப்பிரிவின் கீழ் எனது மகன் தண்டனை பெற்றுள்ளதால் அவருக்கு சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய இயலாது என தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டு அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. எனவே, இவற்றைக் காரணம் காட்டி ஏற்கெனவே தமிழக அரசு விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது. ஆகவே இதைக் கருத்தில் கொண்டு 27 ஆண்டுகளாக நன்னடத்தையுடன் சிறையில் இருக்கும் எனது மகன் ரவிச்சந்திரனுக்கும் இரண்டு மாதகால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ரவிச்சந்திரன்

அப்போது மனுதாரர் தரப்பில், `உயர்நீதிமன்றம் ரத்து செய்த காரணத்தையே மீண்டும் குறிப்பிட்டு ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்க தமிழக அரசு மறுத்துள்ளது. இதை ஏற்க இயலாது. ஆகவே 27 ஆண்டுகளாக நடத்தையுடன் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 மாதகால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர், சிறைத்துறைத் தலைவர், மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 27.01.2021 தேதிக்கு ஒத்திவைத்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/rajiv-gandhi-murder-case-ravichandrans-parole-case-update

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக