Ad

புதன், 27 ஜனவரி, 2021

புண்ணியம் தரும் பூசம்... அறிந்துகொள்ள வேண்டிய தைப்பூசத் திருவிழாவின் மகத்துவங்கள்!

முருகன் வழிபாடு தமிழ்ச்சமூகத்தின் தொன்மையானவழிபாடு. சங்க இலக்கியத்திலேயெ முருகன் வழிபாடு பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. தொன்றுதொட்டு பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கம் இருந்து வந்துள்ளது. பூச நாளில் 'வேலன் வெறியாட்டு' என்ற முருக வழிபாடு, ஆண், பெண் என்ற இருபாலரும் வேல் பிடித்து ஆடிய செய்திகளை சங்கத் தமிழ் தகவல்கள் கூறுகின்றன. அத்தகைய பழந்தமிழ்த் திருவிழாவான தைப்பூசத்தின் மகத்துவங்கள் குறித்த இங்கு தியானிப்போம்.

முன்னூர் முருகன்

தைப்பூசம் மிகவும் சுபிட்சமான நாள் என்பது நம்பிக்கை. எனவே அன்று தொடங்கும் நல்ல காரியங்கள் எதுவானாலும் சிறந்த பலனைக் கொடுக்கும் என்பது தொன்றுதொட்ட நம்பிக்கை.

பூச நன்னாளில் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே உபவாசம் இருந்து முருகப்பெருமானை வழிபடலாம். முருகனின் புகழ் பாடும் பாடல்களை அன்று முழுவதும் பாடுவது சிறந்த பலன்களை அளிக்கும்.

தைப்பூச நன்னாளில் வேல் வழிபாடு செய்வது மிகுந்த நன்மைகளை அளிக்கும் என்பார்கள். வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்பவர்கள் பூச நாளில் மகா ருத்ர அபிஷேகம் செய்வது சிறந்தது.

தைப்பூச நன்னாளில் திருப்புகழ் மகா மந்திர பூஜை, மகா ஸ்கந்த ஹோமம் போன்றவற்றை செய்வதும் கலந்து கொள்வதும் மன விருப்பங்களை நிறைவேற்ற உதவும் மகா மருந்துகள் ஆகும் என்பது ஆன்றோர் வாக்கு.

இந்தியா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், சுமத்திரா போன்ற தென் கிழக்கு ஆசியப் பகுதிகள், ஆஸ்திரேலியா, பிஜி, தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் முக்கிய விழா இந்த தைப்பூசம்.

இரணியவர்மன் என்ற மன்னன் தில்லையம்பதியில் பல்வேறு திருத்தொண்டுகள் செய்து ஒரு தைப்பூச நாளில்தான் ஈசனை நேருக்கு நேர் சந்தித்துப் பெரும்பேறு கொண்டான் என்கிறது தில்லை புராணம்.

புகழ் பெற்ற காவடிச் சிந்து பாடல்கள், நடைபயணமாக பழநிக்குக் காவடி சுமந்து வந்த பக்தர்களால் பாடப்பட்டுப் பிரபலமானது என்பர்.

தைப்பூச நாளில் சென்னை கபாலீஸ்வரருக்குத் தேனால் அபிஷேகம் நடைபெறும் என்பதும் விசேஷம். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்குப் பிறவிப்பிணி அகலும் என்பது நம்பிக்கை.

கொங்கு மண்டலத்தில் உள்ள முருக பக்தர்கள் அனைவரும் கொடுமுடியில் பாயும் காவிரி தீர்த்தத்தை எடுத்துத் தீர்த்தக்காவடியாக அவரவர் ஊர் முருக ஆலயங்களுக்கு கொண்டு போவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஊதிமலை உத்தண்ட முருகப்பெருமான் ஆலயத்தில் உள்ள கொங்கணச் சித்தருக்குச் செய்யப்படும் 108 மூலிகை அபிஷேகம் வெகு விசேஷமானது. காரணம் இது பல வியாதிகளை தீர்க்கவல்லது என்பது நம்பிக்கை.

ஞானமலை முருகன்

தைப்பூச நாளில்தான் சப்த கன்னியருக்கு ஈசன் காட்சி அளித்து வரங்கள் அளித்தார் எனக் குளித்தலை கடம்பவன நாதர் தலவரலாறு கூறுகிறது.

சோழர்கள் காலத்தில் தைப்பூச விழா, கூத்துகள் நடைபெற்ற ஒரு கேளிக்கை விழாவாக இருந்துள்ளது. இதை திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன.

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒளி ரூபமாக இறைவனோடு கலந்த வடலூர் மேட்டுக்குப்பத்தில், தைப்பூச நாளில் லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

முருகப்பெருமானுக்கு 16 விதமான காவடிகள் எடுப்பது இந்நாளைய விசேஷம். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, சர்க்கரை காவடி, தீர்த்தக் காவடி, பறவைக் காவடி, மச்சக்காவடி, மயில் காவடி என ஒவ்வொரு காவடிக்கும் தனித்தனியே பலன்கள் உண்டு என்பர்.

முருகப்பெருமான் வள்ளியை மணந்ததால் தெய்வயானை அம்மை ஊடல் கொள்ள, அதை முருகப்பெருமான் தீர்த்த நன்னாள் இது என்பதால், திருவூடல் விழா இந்நாளில் முருகப்பெருமான் ஆலயங்களில் நடைபெறும்.

மயிலம், விராலி மலை ஆலயங்களில் இந்நாளில் தோன்றும் முருகப்பெருமானின் மயில் வாகன சேவையைக் காண்பது பிறவிப் பிணியைத் தீர்க்கும் என்பார்கள்.

முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப் பூச திருநாளில் முருகன் குடியிருக்கும் கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வதும், காவடி சுமப்பது, வேல்குத்துதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களையும் செய்வது பக்தர்களின் வழக்கம். இந்நாளில் வேண்டி வழிபடும் அன்பர்கள் கல்வி, செல்வம், ஞானம் மூன்றிலும் சிறந்து விளங்குவர் என்பது ஐதிகம்.

திருஞான ஞானசம்பந்தர் அங்கம் பூம்பாவையைத் திருப்பதிகம் பாடி உயிரோடு எழுப்பிய அற்புதம் நடைபெற்றது தைப்பூச நன்னாளில்தான்.

பூச நாளில் புனித நீராடி ஈசனைப் பணிவது தென்னக மக்களின் வழக்கம் என்பதை 'பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே' என்று பெருமையோடு கூறுகிறார் திருநாவுக்கரச பெருமான். திருவிடைமருதூரில் தைப்பூச நாளில் புனித நீராடுவதன் பெருமையை சம்பந்தரும் பாடியுள்ளார்.

பூச நட்சத்திரம் குரு பகவானுக்கு உரியது என்பர். ஆலமர் செல்வனாம் தென்முகக் கடவுள் ஈசனுக்கே குருவாக அருளியவன் முருகப்பெருமான். எனவே இந்நாளில் முருகனை வழிபடுவது குருவின் அருளைப் பெற்றுத்தரும்.

ஓதி மலை முருகன்

தைப்பூச நட்சத்திரத்தன்றுதான் முருகப் பெருமான் வள்ளிப் பெருமாட்டியை மணந்து கொண்டார் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன.

படைப்பில் நீரும், நீரிலிருந்து முதல் உயிரினமும் தோன்றிய நாள் தை மாத பூச நாளில்தான் என்கின்றன புனித நூல்கள். அதனாலேயே இந்நாளில் ஆலயம்தோறும் தெப்போற்சவம் நடைபெறுகின்றன.

வேல் வேறு, வேலவன் வேறு அல்ல. பிரம்ம வித்யா என்று போற்றப்படும் ஞான வேலை குமரன் சக்தியிடம் பெற்ற நாள் இந்நாள்.

நெல்லையம்பதியில் அன்னை காந்திமதி நெல்லையப்பரை வணங்கித் தாமிரபரணியில் நீராடி தவமிருந்து ஒரு தைப்பூசத் திருநாளில்தான் அருள் பெற்றாள் என்கிறது தல புராணம்.

திருவரங்கத்து நம்பெருமாள் தன் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு காவிரிக் கரையில் சீர் கொடுக்கும் விழா நடப்பதும் இந்நாளில்தான்.

தில்லையில் தை மாத பௌர்ணமி கூடிய பூசத் திருநாளில் வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமினி ஆகிய மூவருடன் மால், அயன், முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் மற்றும் சக்தி கண்டு மகிழ ஆனந்த தாண்டவம் ஆடியதும் இந்நாளில்தான்.

வரகுண பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தை திருவிடைமருதூர் ஈசன் போக்கிய நன்னாள் இது. எனவே இந்நாளில் ஈசனை வணங்க சகல தோஷங்களும் நீங்கும்.

திருவிடைமருதூர் காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை, கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசதில் ஈசனும், சக்தியும் ரிஷப வாகனத்தில் இந்தப் படித்துறைக்கு வந்து, தீர்த்தவாரி செய்து வீதி வழி உலா வந்து ஆலயம் செல்வார்கள். இந்தக் காட்சியை காண்பவர்க்கு கல்யாண வரம் உடனே கிட்டும் என்பார்கள்.

குரு பகவானுக்கு உரிய வியாழன் அன்றே இந்த முறை தைப்பூச நாள் வருவதால் (வியாழன் அன்று பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் குரு புஷ்ய யோக நாளாகும்) இதனால் இந்த நாளில் லட்சுமி குபேர பூஜை செய்தால் சகல செல்வ வளமும் பெருகும் என்பது நம்பிக்கை.

மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோயிலில் உள்ள பிரமாண்ட முருகப்பெருமான் சிலைக்கு வான் வழியே ஹெலிகாப்டர் மூலமாக செய்யப்படும் புஷ்ப அபிஷேகம் கண்கொள்ளா காட்சி எனப்படுகிறது. இது தைப்பூச நாளில் நடைபெறும் என்பதும் விசேஷம்.

தோரணமலை தைப்பூசம்

சிறப்பு சங்கல்ப்பம்

தோரணமலை திருத்தலத்தில் வாசகர்களின் நல்வாழ்வை எண்ணி உங்கள் சக்தி விகடன் குழுமம் சிறப்பு தைப்பூச சங்கல்ப பூஜையை நடத்தவுள்ளது. அதன்படி 28.1.2021 அன்று விசேஷ பூஜைகளும் அபிஷேகமும் நடைபெறவுள்ளது. தைப்பூச நாளில் காலை 5 மணிக்கே தொடங்கும் சிறப்பு வைபவங்களில் நீங்களும் வீட்டில் இருந்தே கலந்து கொள்ளலாம். கோயிலின் நிர்வாகம் அன்று முழுக்க பல விசேஷ பூஜைகளை நடத்தவுள்ளது. அதிகாலை நடைபெறும் கணபதி ஹோமம், 8 மணிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பிறகு உச்சி கால பூஜை, அன்னதானம், மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கும் சரவண ஜோதி விளக்கு பூஜை போன்றவற்றை முடிந்தவர்கள் நேரில் சென்று தரிசிக்கலாம். இயலாதவர்கள் சக்தி விகடன் வழியே சிறப்பு சங்கல்பத்தில் கலந்து கொள்ளலாம்.

சிறப்பு சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/gods/some-important-facts-about-thaipusam-festival

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக