Ad

சனி, 9 ஜனவரி, 2021

வாட்ஸ்அப் வெளியேற்றம்... 'சிக்னல்' ஆப்பைத் தேடும் மக்கள்... ஏன்?

பேஸ்புக்கிற்கு சொந்தமான பிரபல மெசேஜிங் தளம் வாட்ஸ்அப். பலராலும் பயன்படுத்தப்படும் சேவையாக இருக்கும் இது சமீபத்தில் அதன் ப்ரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது. ஒரு முறை மட்டும் இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது எனப் பயனர்களுக்கு பாப்-அப் மெசேஜ் தட்டிவிட்டது வாட்ஸ்அப். இதனால் கடந்த சில நாட்களாகவே மக்கள் மத்தியில் பல குழப்பங்களை எழுப்பியுள்ளது இந்த ப்ரைவசி பாலிசி அப்டேட்.

இதில் என்ன ஹைலைட் என்றால் இந்த கொள்கைகளுக்கு ஓகே சொல்லவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் உங்களால் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது. இத்தனை தகவல்கள் நம்மிடமிருந்து பெறப்படுகிறதா என இதைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர், வாட்ஸ்அப்பிற்கு மாற்றுகள் என்ன இருக்கின்றன எனத் தேட ஆரம்பித்திருக்கின்றனர். இப்போதும் மெசேஜ்களுக்கு End To End என்கிரிப்ஷன் தொடரும் என்றாலும், மற்ற தகவல்களை பேஸ்புக் எப்படிக் கையாளும் என்பதுதான் மக்களின் இந்த அச்சத்திற்கு மிக முக்கிய காரணம். எனென்றால் மார்க் ஸுக்கர்பெர்கின் ட்ராக் ரெகார்ட் அப்படி!

Also Read: `Agree' கொடுக்கவில்லை என்றால் `Access' கட்... வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி பாலிசி சொல்வது என்ன?

வாட்ஸ்அப்

மக்கள் பலரும் மற்றுமொரு பிரபல மெசஜிங் தளமான டெலிகிராம் பக்கம் ஒதுங்கலாம் என முடிவெடுக்க டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் CEO-வும் சமீபத்தில் உலகின் டாப் பணக்காரருமாக உயர்ந்த எலான் மஸ்க் மற்றொரு மாற்றை முன்வைத்துள்ளார். அதுதான் 'சிக்னல்' என்னும் சேவை. தொடர்ந்து பேஸ்புக் சேவைகளின் தனியுரிமை மற்றும் பிற கொள்கைகளைப் பற்றி கேள்வி எழுப்பிவரும் அவரும் 'Use Signal' என ட்வீட் செய்ய 'Signal Private Messenger' ஆப்பின் டவுன்லோடுகள் எகிறியிருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் போன் நம்பர் வெரிஃபிகேஷன் ஸ்லோவாகும் அளவுக்கு புதிய வாடிக்கையாளர்கள் சிக்னலில் இணைந்துவருகின்றனர். ஏன், ஒரே பெயர் என்பதால் Signal Advance Inc என்ற பங்கின் விலை கூட பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. "அட அது நாங்க இல்ல மக்களே'' என விளக்கம் கொடுத்திருக்கிறது சிக்னல்.

ப்ரைவசியை முன்னிலைப்படுத்தும் இந்த சேவையை எலான் மஸ்க் மட்டுமல்ல எட்வர்டு ஸ்னோடனும் பரிந்துரைத்துள்ளார். அமெரிக்கா அரசின் தேசியப் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் CIA-வில் எந்த அளவு ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகின்றனர் என்ற தகவல்களை வெளி உலகத்திற்குக் கொண்டுவந்தவர் இவர். தற்போது ரஷ்யாவில் தஞ்சம் புகுந்திருக்கும் இவர் "நான் சிக்னல்தான் பயன்படுத்துகிறேன். இன்னும் நான் சாகவில்லை" என ட்வீட் செய்திருக்கிறார்.

உலகளவில் மட்டுமல்ல இந்தியாவிலும் சிக்னலுக்கு மாறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. ஆப் ஸ்டோரில் வாட்ஸ்அப்பை பின்னுக்குத் தள்ளி அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்படும் இலவச ஆப்பாக உயர்ந்திருக்கிறது சிக்னல்.

சிக்னலா, டெலிகிராமா, வாட்ஸ்அப்பா... எந்த சேவைக்கு உங்கள் ஆதரவு?


source https://www.vikatan.com/technology/tech-news/whatsapp-new-privacy-policy-why-people-are-downloading-signal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக