Ad

சனி, 9 ஜனவரி, 2021

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி! தேவகோட்டை அருகே சோகம்

திண்டுக்கல் அடுத்த கோம்பை பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் மற்றும் பழனிச்சாமி. இவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று விறகு வெட்டும் தொழில் செய்து வருகின்றனர். அதிக விறகு வேலை இருக்கும் பகுதியில் குடும்பத்துடன் தங்கியும் வேலை செய்வார்களாம்.

கண்மாய்

கொரோனா காலகட்டத்தில் பள்ளி இல்லாததால் குடும்பத்தினரும், குழந்தைகளும் தாங்கள் வேலை செய்யும் பகுதியிலேயே தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் பெருமாள் மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவரின் குழந்தைகளான புனிதவதி (12), யோகேஸ்வரன் (8), இன்பத்தமிழன் (11)ஆகியோரை அழைத்துக்கொண்டு தேவகோட்டை அருகே பூங்குடி கிராமத்தில் கண்மாயைச் சுற்றியுள்ள கருவேல மரங்களை வெட்டும் வேலைக்காக வந்துள்ளனர்.

Also Read: சென்னை: நீரில் மூழ்கி அடுத்தடுத்து உயிரிழந்த சகோதரிகள் - பெற்றோர்கள் கண்முன் நடந்த சோகம்!

இந்நிலையில் நேற்று மாலை பணிமுடிந்து பெற்றோர்கள் வீட்டில் இருந்த நிலையில், குழந்தைகள் மூவரும் அருகிலுள்ள கண்மாய்க்குக் குளிக்கச் சென்றுள்ளனர். மழைக்காலம் என்பதால் கண்மாயில் நீர் நிரம்பி இருந்துள்ளது. விளையாட்டு ஆர்வத்தில் குழந்தைகள் கண்மாயில் ஆழம் அதிகமாக இருந்த பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சிறுவர்கள் பலி

நீச்சல் தெரியாததால் குழந்தைகள் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குளிக்கச் சென்ற குழந்தைகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், தேடிச்சென்ற பெற்றோர்களுக்கு குழந்தைகள் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் உடலை மீட்டு, தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தேவகோட்டை காவல்துறையினர் குழந்தைகள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/accident/3-drowned-near-devakottai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக