”என் தம்பிதான் ஓடி ஓடி உழைச்சு லட்சம் லட்சமா கொட்டறானே... அப்புறம் எதுக்கு நீ வேலைக்குப் போகணும்? அவ்வளவு ஆசை! ஊர்ல உம்முனு சொல்றதெல்லாம் கேட்டுட்டு இருந்தே. இங்கே கேட்க யாரும் இல்லைன்ன உடனே உன் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டே... எல்லாம் உன் குடும்பத்தைச் சொல்லணும். எப்படி வளர்த்து வச்சிருக்காங்க?” என்று சலங்கை கட்டிக்கொண்டு ஆட ஆரம்பிக்கிறார் கெளசல்யா.
“நிறுத்துங்க அண்ணி. இது என் குடும்பம். என் விருப்பப்படி ஒரு வேலையைச் செய்ய நான் யார்கிட்ட கேட்கணும்? இதுக்கு ஏன் குடும்பத்தை எல்லாம் இழுக்கிறீங்க?” என்று பொறுமையின் சிகரமாக இருந்த அபி, பூகம்பமாக வெடிக்க அதிர்ச்சியடைகிறார் கெளசல்யா. நல்லவேளையாக இது நினைத்து மட்டுமே பார்க்கும் காட்சி அல்ல!
ஓட ஓடத்தான் நாய் விரட்டிக்கொண்டு வரும். திரும்பி ஒரு கல்லை எடுத்தால் ஓடிவிடும். அதே போலதான் ஒருவர் எதிர்த்துப் பேசவில்லை என்றால், என்ன வேண்டுமானாலும் பேசிக்கொண்டே போவார்கள். ஆனால், ஒரே ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசிவிட்டாலோ, அதை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. இந்தச் சம்பவம் அதற்கு உதாரணம்.
பிறகு... கெளசல்யாவிடம் வந்து மன்னிப்பு கேட்கிறாள் அபி. “ஐயையோ... நீங்க படிச்சவங்க. உங்களுக்கு எல்லாம் தெரியும். என் தம்பி, கணவர், குழந்தைகள்னு சின்ன வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்துட்டேன். எனக்கு உங்களை மாதிரி எல்லாம் விஷயம் தெரியாது. ரெண்டு நாள் சாப்பிடலைன்னா நான் ஒண்ணும் செத்துப் போயிட மாட்டேன். எனக்குச் சாப்பாடு வேண்டாம்” என்கிறார் கெளசல்யா.
குழந்தைகளிடம் சொல்லி, கெளசல்யாவை சாப்பிட அழைக்கிறாள் அபி. சிறிது நேரம் வர மறுத்து, குழந்தைகளுக்காகச் சாப்பிட வருவதாகச் சொல்கிறார் கெளசல்யா. சாப்பிடும்போது ஆதிரா `ஒரு கதை சொல்லட்டுமா' என்று கேட்க, `சாப்பிடும்போது பேசக் கூடாது' என்கிறாள் அபி. உடனே, `உங்க அம்மாவிடம் கேட்டுவிட்டு என்னிடம் பேசு' என்று தொட்டதற்கெல்லாம் குத்திக்காட்டுகிறார் கெளசல்யா.
”என்னைத் தவிர, பூந்தோட்டத்தில் அத்தனை பேருக்கும் நீ வேலைக்குப் போற விஷயம் தெரிஞ்சிருக்கும். எனக்கு மட்டும்தான் தெரியலை” என்று அடுத்த குற்றச்சாட்டை வைக்கிறார் கெளசல்யா. அனுமதி கேட்டிருந்தால் மட்டும் கொடுத்திருப்பாரா, என்ன?
“என் வீட்லகூட யாருக்கும் சொல்லல. இது டெம்ப்ரவரி வேலைதான். ஸ்டெடி ஆனபிறகு சொல்லிக்கலாம்னு இருந்தேன்” என்று அபி சொல்லும் காரணத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை கெளசல்யா.
பத்து நிமிடங்களில் வருவதாக அபி சொல்லவும், `குழந்தைகளைத் தூங்க வைக்க வேண்டாமா' என்று கேட்கிறார் கெளசல்யா. ஹர்ஷிதாவிடம் பேசிவிட்டு வந்துவிடுவதாக, குழந்தைகளிடம் சொல்லிவிட்டுச் செல்கிறாள் அபி.
உடனே போனை எடுக்கிறார் கெளசல்யா.
அபி வருவதற்குள் ஒரு பூகம்பம் காத்திருக்குமே...
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா
source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-review-for-episode-36
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக