Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

`` `காதல்’ படத்தின் முதல் ஹீரோயின் நான்... ஆனால்?!” - சரண்யா

’காதல்’ படத்தோட வாய்ப்பு எப்படி கிடைத்தது?

” ‘நீ வருவாய் என’, ’திருநெல்வேலி’னு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிச்சிட்டு இருந்தேன். அதுக்கப்பறம் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாகவும் சில படங்களில் நடிச்சேன். அப்படி ஸ்ரீகாந்த் நடிச்ச ’போஸ்’ படத்தில் நான் நடிச்சிட்டு இருந்த சமயத்தில், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் சார் என்னை பார்த்துட்டு ’ஷங்கர் சாரோட தயாரிப்பில் ஒரு படம் பண்றோம். அதில் நீ நடிக்கிறீயா’னு கேட்டார். அப்போ நான் ஸ்கூல் லீவ்ல மட்டும்தான் சினிமாவில் நடிச்சிட்டு இருந்ததனால, முதலில் தயங்கினேன். விஜய் மில்டன் சார் என்னோட போன் நம்பரை வாங்கிட்டு, ’நானே போன் பண்றேன்’னு சொன்னார். அதே மாதிரி லீவ் முடிஞ்சு, ஸ்கூல் திறந்து கரெக்டா ஒரு வாரம் இருக்கும்போது ஷங்கர் சார் ஆபீஸ்ல இருந்து கால் வந்தது. நானும் போய் ஆடிஷனில் கலந்துகிட்டேன். டெஸ்ட் ஷூட் எல்லாம் எடுத்திட்டு, ’நீங்கதான் இந்தப் படத்தோட ஹீரோயின்’னு சொன்னாங்க. ஆனால் ஒரு வாரம் கழிச்சு மறுபடியும் போன் பண்ணி, ’நீங்க ரொம்ப குட்டி பொண்ணா இருக்கிறதுனால, இந்தப் படத்துல ஹீரோயினா நடிக்க வைக்க முடியாது. ஆனால், ஹீரோயினோட ஃப்ரெண்ட் கேரக்டர் ஒண்ணு இருக்கு. அதில் நடிக்கிறீங்களா’னு கேட்டாங்க. ’முதலில் ஹீரோயின்னு சொல்லிட்டு, இப்போ ஃப்ரெண்ட் கேரக்டர்னு சொல்றீங்களே’னு கோபத்துல நான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.

kadhal

இருந்தாலும் அந்த வாய்ப்பு என்னை விடலை. மறுபடியும் என்னை நடிக்கிறதுக்காக கேட்டுக்கிட்டே இருந்தாங்க. நாளைக்கு ஷூட்டிங்னா, இன்னைக்கு ஓகே சொல்லி, மதுரைக்குக் கிளம்பி போனேன். முதல் நாள் ஷூட்டிங்கில் விஜய் மில்டன் சாரை பார்க்கும் போது, ’என்ன... வரமாட்டேன்னு சொன்ன, இப்போ வந்துட்டியே’னு கேட்டார். நானும் அவர்கிட்ட, ‘முதலில் ஹீரோயின்னு சொல்லிட்டு அப்புறம் கேரக்டர் மாத்திட்டீங்க’னு சொன்னதுக்கு, ’இந்த கேரக்டர் உண்மையிலேயே ரொம்ப நல்ல கேரக்டரா இருக்கும். இது உனக்கு இப்ப தெரியாது. படம் ரிலீஸ் ஆகி 10 வருஷம் கழிச்சும் இந்த கேரக்டர் பேசப்படும்’னு சொன்னார். அதே மாதிரி இப்போ 16 வருஷம் கழிச்சு இந்த கேரக்டரும் இந்தப் படமும் பேசப்படுது.”

’காதல்’ படத்தோட ஷூட்டிங் ஸ்பாட் நினைவில் இருக்கா?

”படத்தோட ஷூட்டிங் முழுக்கவே குழந்தைத்தனமா தான் இருந்தோம். ஏன்னா நானும் ஸ்கூல் ஸ்டூடண்ட்; படத்தோட ஹீரோயின் சந்தியாவும் ஸ்கூல் ஸ்டூடண்ட். ரெண்டு பேருமே ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுதுட்டே இருப்போம். ரீடேக் வாங்கிட்டே இருப்போம். ஆனால் பரத் மட்டும் சின்சியரா டயலாக்கை மனப்பாடம் பண்ணி படிச்சு படிச்சு பார்த்துட்டு இருப்பார். விஜய் மில்டன் சார், ’என்னைக்காவது ஒரு நாள் ஆச்சும், நீங்க இப்படி வசனத்தை மனப்பாடம் பண்ணி இருக்கீங்களா’னு திட்டுவார். ஒவ்வொரு சீனும் அதிக டேக் எடுத்து, திட்டு வாங்கித்தான் நடித்தோம். அதை எல்லாமே இப்போ நினைச்சு பார்க்கும்போது ரொம்ப நல்ல அனுபவமாக இருக்கு. அந்த படம் நடிக்கும்போது 14 வயசுதான். அதனால, அந்தக் கதையோட கருத்து என்ன, படம் ஏன் இவ்வளவு பெரிய தாக்கத்தை கொடுத்து இருக்குனு எதுவுமே எனக்கு புரியலை. அந்த படம் ரிலீசாகி ஹிட்டானப்பிறகும் என்னால அதை உணர முடியல. நான் டெய்லி ஸ்கூலுக்கு போகும் போது நிறைய பேர் ரோட்டில் பார்த்து, அந்த கேரக்டர் பற்றி பேசுவாங்க; நிறைய பேர் பாராட்டுவாங்க. அதே மாதிரி, ஹீரோ - ஹீரோயின் எந்த ஊருக்கு போய் இருக்காங்கனு நான்தான் அவங்க சித்தப்பாகிட்ட சொல்லுவேன். அதனால நிறைய பேர் என்னை திட்டவும் செஞ்சாங்க. ‘நீதானே ஹீரோ - ஹீரோயின் எங்க இருக்காங்கனு மாட்டிவிட்டது’னு சொல்லுவாங்க.

kadhal

அதுமட்டுமல்லாமல், ஸ்கூலில் ஷூட்டிங் போறதுக்கு டைபாய்டு காய்ச்சல்னு பொய் சொல்லிட்டுத்தான் போனேன். என் டீச்சர்ஸ் படத்தைப் பார்த்துட்டு, ‘இதுக்குத்தான் நீ லீவ் போட்டு போனீயா’னு திட்டுனாங்க. ஏண்டா இந்தப் படத்தில் நடிச்சோம்கிற அளவுக்கு அந்த சமயத்தில் நினைச்சேன். ’காதல்’ படம் முடிஞ்சதுக்கு அப்புறம் ஹீரோயின் ஃப்ரெண்ட் கேரக்டராகவே 2, 3 பட வாய்ப்புகள் வந்துச்சு. அப்போ நான் ஸ்கூல் முடிக்கணும், பத்தாம் க்ளாஸ் வரைக்கும் எந்த பிரேக்கும் இல்லாமல் படிக்கணும்னு படிப்பில கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். கரெக்ட்டா பத்தாம் க்ளாஸ் முடிச்சதுக்கு அப்புறம் தெலுங்குல ஹீரோயினா நடிக்கிறதுக்கு சான்ஸ் வந்தது. அந்த படம் ’காதல்’ படத்தின் தெலுங்கு ரீமேக்தான். தமிழ்ல எனக்கு கிடைக்காத அந்த ஹீரோயின் கேரக்டர் தெலுங்கில் ரீமேக் பண்ணும் போது கிடைச்சது. தெலுங்கிலும் அந்த படம் செம ஹிட். அது ரிலீஸானதுக்கு அப்புறம் தெலுங்கில் 2 படம் தொடர்ச்சியா ஹீரோயினா பண்ணிட்டு இருந்தேன். அதேசமயம் தமிழ்லயும் ரெண்டு, மூணு படம் ஹீரோயினா நடிச்சேன். அந்த படங்கள் எல்லாமே ரிலீஸ் ஆச்சு. ஆனால் சரியான வரவேற்பு கிடைக்கலை. அதுக்கப்புறம் எனக்கு நல்ல பேர் கிடைச்சதுனா, அது ‘பேராண்மை’ படம் மூலமாகத்தான்.”

சினிமாதான் உங்க கரியர்னு எப்போ முடிவு எடுத்தீங்க..?

'காதல்' சரண்யா

”பத்தாம் க்ளாஸ் முடிச்சதுக்கப்புறம் நடிக்க வந்தேன். ப்ளஸ் 2, அதாவது ஸ்கூல் முடிக்கிற வரைக்கும் ஹீரோயினாவே நடிச்சுட்டு இருந்ததுனால, அப்புறம் சினிமாவில் தொடர்ந்து நடிக்கிறது மட்டும்தான் ஒரே வழியா இருந்தது. அதனால தொடர்ந்து நடிக்கலாம்னு முடிவு பண்ணி நிறைய படங்களில் நடிச்சேன். அப்படி ஹீரோயினாக நடிச்சிட்டு இருந்த சமயத்தில்தான் ’பேராண்மை’ படத்தோட ஆடிஷன் இருக்குனு கேள்விப்பட்டு அதில் கலந்துக்கிட்டேன். கிட்டத்தட்ட 2, 3 ஆடிஷன் நடந்துச்சு. அதுக்கப்புறம்தான் அந்த ஐந்து பெண்களில் ஒரு கேரக்டருக்கு நான் செலக்ட் ஆனேன். ’பேராண்மை’ படம் ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு மூணு மாசத்துக்கு முன்னாடியே என்சிசி கேம்ப்ல நடக்கிற எல்லாத்தையும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. அதெல்லாம் கத்துக்கிட்டுதான் படத்தோட ஷூட்டிங் போனோம். குற்றாலத்தில் ஷூட்டிங் ஆரம்பிச்சு மூன்று நாள் முடிஞ்சிருந்த நிலையில், என்னால அந்த படத்தில் இனிமேல் நடிக்க முடியுமானு ஒரு கேள்வி எழுந்தது. அப்போ நான் ஜனநாதன் சார்கிட்ட உதவி இயக்குநராக இருந்த ’பூலோகம்’ படத்தோட டைரக்டர் கல்யாண் சார்கிட்ட என் நிலைமையை எடுத்துச் சொன்னேன். அதுக்கப்புறம் அவர் டைரக்டர் ஜனநாதன் சார்கிட்ட பேசிட்டு என் கேரக்டரை கொஞ்சம் மாத்திக் கொடுத்தாங்க. அந்த ஐந்து பெண்களில் ஒரு பெண் கேரக்டர் ஹீரோயினாக இருந்தது. ஆனால், அது என்னோட கேரக்டர் கிடையாது. நான் அவர்கிட்ட ’நடிக்க மாட்டேன்’னு சொல்லி அழுததை, கேரக்டரில் வெயிட்டேஜ் இல்லாததுனாலதான்னு நினைச்சுக்கிட்டு, என் கேரக்டரை மாத்தி படத்தில் நடிக்க வெச்சாங்க.”

‘போராண்மை’ ஷூட்டிங்கில் நடந்த மறக்கமுடியாத சம்பவம்?

saranya

” ‘பேராண்மை’ படத்தோட ஷூட்டிங் முழுக்கவே மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஏன்னா, படத்தோட ஷூட்டிங் முழுக்கவே காட்டில்தான் நடந்தது. நகரத்தில் இருக்கிறமாதிரி எந்த வசதியும் அங்கே இருக்காது. குறிப்பா பெண்களுக்கு ஏற்றமாதிரி அந்த சூழல் இருக்காது. அப்படி இருந்தாலும் அதை எல்லாம் சமாளிச்சிட்டு, நடிச்சது ரொம்பவே நல்ல அனுபவமா இருந்தது. ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் வரமாதிரி கொசு, நத்தை எல்லாம் அங்க அதிகமா இருக்கும். அதுங்ககிட்ட இருந்து கடி வாங்காம எங்களை பாதுகாத்துக்கிறதே பெரிய வேலையா இருந்துச்சு. நகரத்திலிருந்து கொஞ்ச நாள் வெளியே போய், புது சூழல்ல நடிச்சிட்டு வந்தது ரொம்பவே நல்ல அனுபவமாவும், அதை இப்போ நினைச்சாலும் ரொம்ப நல்ல நினைவாவும் இருக்கு.”

‘பேராண்மை’ படத்துக்கு அப்பறம் எங்க போனீங்க..?

” ‘பேராண்மை’ படத்துக்கு அப்புறம் அதிக படங்கள் பண்ணனும்னு நினைச்சேன். அந்த படத்தோட ரிசல்ட் ரொம்ப பாசிட்டிவா இருந்ததால நிறைய வாய்ப்புகள் வரும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா நான் எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கல. அதுக்கு காரணம் என்னோட ஃபேமிலி சைடுல இருந்து எனக்கு எந்த சப்போர்ட்டும் கிடைக்காததுதான். சினிமாவுல ஒரு பெண் முன்னுக்கு வரணும்னா, நிச்சயம் அவங்க குடும்பத்தோட சப்போர்ட் தேவைப்படும்; அது எனக்கு கிடைக்கல. பெரிய, பெரிய வாய்ப்புகள் வரும்னு நினைச்சு, எதுவுமே வராத நிலையில் பொருளாதாரத்துக்காக சின்ன, சின்ன கேரக்டரில் நடிக்க ஆரம்பிச்சு, அந்தப் படங்களும் சரியா போகல. என்னைச் சுற்றி இருந்த நண்பர்களும் ஒரு கட்டத்தில் எனக்கு இல்லாமல் போயிட்டாங்க. அதனால ஏற்பட்ட மன அழுத்தத்தினால், என் உடல் நிலையிலும் நிறைய மாற்றங்கள். தைராய்டு வந்தது; மாதவிடாய் பிரச்னை வந்தது. அதனால உடல் எடை அதிகமாகி, வீட்டுக்குள்ளேயே முடங்கிட்டேன். கிட்டத்தட்ட நாலு வருஷம் வெளியில் வராமல், புதிய மனிதர்களை சந்திக்காமல், சினிமா நண்பர்களை சந்திக்காமல், ஒரு தனி உலகத்தில் வாழ்ந்தேன்னு சொல்லலாம். அந்த சமயத்தில் எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சாரும், சிலம்பம் பாண்டியன் மாஸ்டரும்தான். அவங்கதான் எனக்கு நிறைய அறிவுரை சொல்லி, ஒரு எனர்ஜியை கொடுத்தாங்க. பணப் பிரச்னைகளை சமாளிக்க, ஜனநாதன் சார் அவருடைய அலுவலகத்தில் என்னை வேலைக்கும் சேர்த்துக்கிட்டார். இது மூலமா கிடைச்ச பாசிட்டிவிட்டியை வெச்சு, சமூக வலைதளங்களில் மறுபடியும் ஆக்டிவாக ஆரம்பிச்சேன். அதன் தொடர்ச்சியாக அவள் விகடன் இதழுக்கு நான் கொடுத்த ஒரு பேட்டி, என்னை பல பேருக்கு ஞாபகப்படுத்தியது.

அந்தப் பேட்டி மூலமா எனக்கு இன்னும் பாசிட்டிவ் எனர்ஜி கிடைச்சது; சில வாய்ப்புகளும் வருது. அதுக்கு முன்னாடி உடல் எடையை குறைச்சிட்டு படங்களில் நடிக்கலாம்னு நினைக்கிறேன். இப்போது அதற்கான உடற்பயிற்சியில்தான் கவனம் செலுத்திட்டு இருக்கேன். சீக்கிரமாகவே உடல் எடையை குறைச்சிட்டு, மறுபடியும் சினிமாவில் நல்ல, நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கணும்னு ஆசைப்படுறேன்; நிச்சயமா அது நடக்கும்னு நம்புறேன்.”



source https://cinema.vikatan.com/tamil-cinema/actress-saranya-shares-his-experience-about-kaadhal-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக