Ad

வியாழன், 3 டிசம்பர், 2020

'ரஜினி வருகை...மாறும் தமிழக அரசியல் சூழல்'- அலசும் விமர்சகர்கள்!

''ஆட்சி மாற்றம் நடக்கும்; அரசியல் மாற்றம் நடக்கும்'' என்று அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த். அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் கோட்டையாக இருந்துவரும் தமிழகத்தில், ரஜினிகாந்தின் புதிய கட்சி அறிவிப்பு வருகிற 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறவைக்கிறது.

ரஜினிகாந்த்

இதுகுறித்து, அரசியல் விமர்சகர் கோலாகல ஶ்ரீனிவாசனிடம் பேசியபோது, ``இந்தத் தேர்தல் மட்டுமல்ல... கடந்த 50 ஆண்டுகால அரசியலின் போக்கையே மாற்றியமைத்துவிடும் ரஜினியின் வருகை. 2021 சட்டமன்றத் தேர்தலில், ரஜினி ஆரம்பிக்கக்கூடிய கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம் அமையும்.

1972-ல் எம்.ஜி.ஆர் புதிதாக கட்சி ஆரம்பித்தபோது, அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதே பிரச்னை இப்போது ரஜினி ரசிகர்களுக்கும் ஏற்படும். அதாவது, தற்போது மற்ற கட்சிகளில் இருந்துவரக்கூடிய ரஜினி ரசிகர்கள், 'இனி, தான் சார்ந்துள்ள கட்சிகளுக்கு விசுவாசமாக இருப்பதா அல்லது தன் தலைவருக்கு விசுவாசமாக இருப்பதா’ என்று.

72-ல் 'கட்சியா, எம்.ஜி.ஆரா...' என்ற கேள்வி எழுந்தபோது தி.மு.க-வில் இருந்துவந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனைவரும், 'எம்.ஜி.ஆர்-தான் முக்கியம்' என்று சொல்லி, அ.தி.மு.க-வுக்கு வந்துவிட்டார்கள். எனவே, தற்போது மற்ற கட்சிகளில் இருந்துவரக்கூடிய ரஜினி ரசிகர்களின் தேர்வும்கூட, ரஜினி பக்கமாகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு. எனவே, ஆங்காங்கே பரவிக்கிடக்கும் ரஜினிக்கான வாக்குகள் ஒரே இடத்தில் குவியும் வாய்ப்பு ஏற்படும். இது முதல் மாற்றம்.

அடுத்து, பொதுமக்கள் மத்தியில், தி.மு.க-வைப் பிடிக்காதவர்கள் அ.தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வைப் பிடிக்காதவர்கள் தி.மு.க-வுக்கும் வாக்களிப்பது என்ற நிலைதான் நீண்டகாலமாக இங்கே இருந்துவருகிறது. இனி, இந்த நிலை மாறி கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் என 3 முக்கியக் கட்சிகள் இருந்துவருவதைப்போல, தமிழ்நாட்டின் அரசியல் களமும் மும்முனைகளாக மாறும். கடந்த காலங்களில் தேர்தல் சமயத்தில், மூன்றாவது அணி, ஐந்து முனை போட்டிகளெல்லாம்கூட தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றன. நான் அதைச் சொல்லவில்லை. 3-வது பெரிய அரசியல் சக்தியாக ரஜினிகாந்த் இருப்பார் என்று சொல்ல வருகிறேன்.

மு.க.ஸ்டாலின்

கடந்த 10 ஆண்டுகாலமாக அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்துவரக்கூடிய சூழலில், ஆளும்கட்சி மீதான வெறுப்பு வாக்குகள் இயல்பாகவே தி.மு.க-வுக்குத்தான் போகும். ஆனால், தற்போது அந்த வாக்குகள் ரஜினிகாந்த் பக்கம் திரும்பவே அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல், தி.மு.க-வைப் பிடிக்காமல் அ.தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வைப் பிடிக்காமல் தி.மு.க-வுக்கும் வாக்களித்துக்கொண்டிருந்த பொதுமக்களின் வாக்குகளும் ரஜினிக்குக் கிடைக்கலாம். அதாவது, தமிழக அரசியல் தளத்தில், ரஜினியின் அரசியல் வருகையால் நடைபெறும் இரண்டாவது மாற்றம் இது.

அடுத்து 3-வது மாற்றமாக தி.மு.க, அ.தி.மு.க என்ற இருபெரும் கட்சிகளின் கூட்டணியிடையேயும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதாவது இந்த 2 கட்சிகளின் கூட்டணியிலும் அதிருப்தி மனநிலையோடு தொடர்ந்துவரக்கூடிய கட்சிகளுக்கு ரஜினிகாந்த் கட்சி மிகப்பெரிய மாற்றாக அமையக்கூடும். உதாரணமாக, அ.தி.மு.க கூட்டணியில் தற்போது இருந்துவரக்கூடிய பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க போன்ற கட்சிகளும்கூட ரஜினி பக்கமாக நகரலாம்.

Also Read: ரஜினி: `அரசியலுக்கு வந்தா நிம்மதி போயிடும்' டு `உயிரே போனாலும்...' - 1990 முதல் 2020 வரை!

ம.நீ.ம-வைப் பொறுத்தவரை,`கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்' என்று அறிவித்துவிட்டனர். எனவே, அவர்கள் ரஜினிகாந்த் தலைமையிலான கூட்டணிக்குள் வரமுடியாது.

ஆக, ரஜினியின் அரசியல் வருகையால், அவரது ரசிகர்கள், பொதுமக்கள், கூட்டணிக் கட்சிகள் என 3 தளங்களிலும் மாற்றங்கள் நிகழும். இறுதியாக தேர்தலில், ரஜினிகாந்த் மட்டுமே 15%-க்குக் குறையாத எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறுவார். கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளோடு சேர்த்து மொத்தம் 28% என்ற அளவுக்குப் போனால், மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். அதாவது, தமிழக சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், 15%-க்கும் அதிகமான வாக்குகள் பிரிந்துவிட்டாலே, தி.மு.க., அ.தி.மு.க என 2 கட்சிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்காது.

ரஜினிகாந்த்

நாடாளுமன்றத் தேர்தலில், மிகப்பெரிய எண்ணிக்கையில் வாக்குகள் பிரிந்தாலும்கூட, அதனால் ஏற்படுகிற தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆனால், சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகள் பிரிந்தாலும்கூட அதனுடைய தாக்கம் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும்.

உதாரணமாக கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ம.தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு, 19.5% வாக்குகளைப் பெற்றது. ஆனாலும்கூட களத்தில் அது பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை எளிதாகக் கைப்பற்றி வெற்றி கண்டது அ.தி.மு.க.

அதேசமயம், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, 6 கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டு வெறும் 6% வாக்குகளை மட்டுமே பிரித்தனர். இதனால், தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வரமுடியாமல் போய்விட்டது. இப்போது மட்டுமல்ல.... கடந்த 2005-ம் ஆண்டு விஜயகாந்த் புதிதாக கட்சி ஆரம்பித்து, 2006-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 8.45 சதவிகித வாக்குகளைப் பிரித்தார்.

கமல்ஹாசன் - விஜயகாந்த்

இதன் விளைவு... சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில், பெரும்பான்மை இல்லாமலேயே ஒரு கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வர நேரிட்டது. அதாவது, வெறும் 96 தொகுதிகளில் மட்டுமே வென்ற தி.மு.க, கூட்டணிக் கட்சிகள் தயவில் மைனாரிட்டி அரசுதான் அமைத்தது. ஆக, விஜயகாந்த், தனது சக்திக்கு 8.45% வாக்குகளைப் பிரித்ததே இவ்வளவு சேதாரத்தை ஏற்படுத்தினால், ரஜினிகாந்த் எவ்வளவு வாக்குகளைப் பிரிப்பார், அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

எனவே, 'தனித்து ஆட்சி அமைப்போம்' என்ற கனவே 2 திராவிடக் கட்சிகளுக்கும் சிதறிப்போகும்... குறிப்பாக தி.மு.க-வின் கனவு சிதறும். இதன் தொடர்ச்சியாக, இந்த 2 கட்சிகளுடனும் கூட்டணியில் இருந்துவரக்கூடிய சிறிய கட்சிகளின் கைகள் ஓங்கும். இந்தச் சூழ்நிலையில், தனது கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைக்கின்ற கட்டாயம் தி.மு.க-வுக்கு ஏற்படும்'' என்கிறார் அவர்.

கோலாகல ஶ்ரீனிவாஸ் - கணபதி

அரசியல் விமர்சகர் கணபதி, இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ``ரஜினிகாந்த் கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறார். அதாவது, 80-களில், 'அரசியல் ஒரு குப்பை; அதில் நான் வரவேமாட்டேன்' என்றார். அதற்கடுத்து, 'எப்போ வருவேன், எப்படி வருவேன் என்றெல்லாம் தெரியாது' என சொல்லிக்கொண்டு வந்தார். கடைசியாக 2017-ல், 'நான் அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்' என்றார். இதைச் சொல்லி 3 வருடங்கள் கழித்து இப்போது, '2020 டிசம்பர் 31-ம் தேதி புதிய கட்சிக்கான தேதியை அறிவிப்பேன்' என்று கூறியிருக்கிறார்.

அதாவது 'புதிய கட்சியை அறிவிப்பேன்' என்று சொல்லவில்லை. புதிய கட்சிக்கான தேதியை அறிவிப்பதாகவும் கட்சியை ஜனவரியில்தான் தொடங்குவதாகவும் கூறியிருக்கிறார். ஆக, இப்போது வரையிலுமே அவரிடம் ஒருவித தயக்கம்-இழுபறி இருப்பதைத்தான் இது காட்டுகிறது. இது முதல் கட்டம்.

அடுத்து, அவர் சொன்னடியே தனிக்கட்சி ஆரம்பித்தால், தனித்து நின்று போட்டியிடுவாரா அல்லது கூட்டணி சேர்வாரா என்ற கேள்வி எழுகிறது. 'ரஜினி கட்சி தொடங்கவேண்டும்; எங்களுடன் கூட்டணி சேரவேண்டும்' என்று அவரை தொடர்ச்சியாக அழைத்துக்கொண்டிருப்பவர்கள் அமித் ஷா, பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட பா.ஜ.க-வினர் மட்டும்தான். ஆக, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணியில் ரஜினியை சேர்ப்பார்களா அல்லது பா.ம.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் ரஜினி தலைமையை ஏற்றுக்கொள்வார்களா என்பதும் நிச்சயம் இல்லை.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

ரஜினிகாந்த், கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி தனித்து தேர்தலை சந்தித்தார் என்றால், '15% வாக்குகளைத்தான் என்னால் பெறமுடியும்' என்று அவரே கடந்த மார்ச் மாத செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். ஆக, அவரது கணிப்புப்படி தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்து 3-வது இடத்தைத்தான் அவர் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

அதேசமயம், ரஜினிகாந்த் கூட்டணி சேர்ந்து போட்டியிட முடிவெடுத்தார் என்றால், நிச்சயம் அவரோடு பா.ஜ.க-தான் கூட்டணி சேரும். அப்படியொரு கூட்டணி அமைந்தால், பா.ஜ.க-வின் வலதுசாரி சிந்தனைகளுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள், திராவிடம் - தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் ரஜினிகாந்த் கூட்டணிக்கு எதிராகத்தான் திரும்புவார்கள். அது அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

Also Read: ரஜினியின் புதிய கட்சி: `அரசியலில் எதுவும் நிகழலாம்; வாய்ப்பிருந்தால் கூட்டணி!’ - ஓ.பி.எஸ்

தி.மு.க கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரையில், 'மதச்சார்பற்றக் கூட்டணி' என்ற வகையில், இடதுசாரி சிந்தனையாளர்களாக இருக்கின்றனர். எனவே, அவர்கள் ரஜினிகாந்த் பக்கம் போவதற்கான வாய்ப்புகள் என்பது மிகமிகக் குறைவு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, 'சமூக விரோதிகள்' என போராட்டக்காரர்களை ரஜினிகாந்த் சாடியபோது, தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அவரை மிகக் கடுமையான விமர்சித்தன. எனவே, தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் ரஜினியின் பக்கம் போய் சேருகிற வாய்ப்புகள் மிகக் குறைவு.

அ.தி.மு.க., தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளிலேயே ஊழல் வழக்கு உள்ளிட்ட நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் கட்சிகள் வேண்டுமானால், ரஜினிகாந்த்தோடு போய் சேருகிற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அது இந்தத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது என் கணிப்பு.

ரஜினிகாந்த்

அரசியல் ரீதியாக தி.மு.க கூட்டணியை உடைக்க எவ்வளவு முயற்சிகள் நடைபெற்ற போதிலும்கூட, காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் என்று கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் வெளிப்படையாகவே சலசலப்புகள் தெரிகின்றன. அண்மையில், 'பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி' குறித்து எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் வெளிப்படையாக அறிவித்த பிறகும்கூட, 'அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்' என்று அமித் ஷா அறிவிக்கவே இல்லை. ஆக, அ.தி.மு.க-வுடனான கூட்டணியை கைவிட்டுவிட்டு, ரஜினிகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, ரஜினி தலைமையிலான ஒரு கூட்டணியை பா.ஜ.க உருவாக்கினால், அது 'அ.தி.மு.க - தி.மு.க' என்ற நிலையிலிருந்து மாறி 'தி.மு.க - ரஜினி' என்ற நிலைக்கு இட்டுச்செல்லுமா என்பதெல்லாம் தேர்தல் நெருக்கத்தில்தான் தெரியவரும்'' என்றார் தெளிவாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/can-rajinis-political-entry-change-tn-political-scenario

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக