Ad

செவ்வாய், 1 டிசம்பர், 2020

அரசியல் கட்சி... ஜனவரியில் விவரங்கள் அறிவிப்பா? - எதிர்பார்ப்பில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியலின் ஒவ்வொரு நிகழ்வையும் ரஜினி உன்னிப்பாக கவனித்துவருகிறார். அந்த வகையில், பி.ஜே.பி-யுடன் தேர்தல் கூட்டணிவைக்க அ.தி.மு.க முடிவு செய்திருக்கும் நிலையில், ரஜினி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார். தி.மு.க கூட்டணி பற்றி ரஜினி கவலைப்படவில்லை. அ.தி.மு.க கூட்டணி பற்றித்தான் எதிர்பார்த்து காத்திருந்தார். அது முடிவான நிலையில், தனது அரசியல் நிலைப்பாட்டை உடனே அறிவிக்கத் தயாராகிவிட்டார் என்கிறார்கள்.

ரஜினி

நவம்பர் 30-ம் தேதியன்று, சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்துக்கு மாவட்டச் செயலாளர்கள் 37 பேரை அழைத்திருக்கிறார். அவர்களிடம் கருத்து கேட்டுவிட்டு, உடனே தனது அறிக்கையை வெளியிடவிருக்கிறார். திங்களன்று காலை 7:30 - 9:00 ராகுகாலம். எமகண்டம்...10:30 - 12:00. இதையெல்லாம் கணக்கு போட்ட ரஜினி, காலை 9:30 மணியளவில் ஆலோசனை கூட்டத்துக்கான நேரம் குறித்திருக்கிறார். அதோடு, ரஜினி வழிபடும் மஹா பாபாஜியின் பிறந்தநாளும் நவம்பர் 30. அதனால்தான், இந்தத் தேதியையும் தேர்தெடுத்திருக்கிறார்.

Also Read: தீபாவளியன்று போலீஸ் இன்ஸ்பெக்டரால் கொதித்த ரஜினி..! - என்ன நடந்தது?

ரஜினி என்ன சொல்வார்?

புதிய அரசியல் கட்சி உதயம் என்கிற தகவலை முதன்முறையாக அறிவிக்க முடிவு செய்திருக்கிறாராம் ரஜினி. அதன் பெயர், கொடி, மாநாடு போன்ற விவரங்களை ஜனவரியில்தான் வெளியிடவிருக்கிறாராம். டிசம்பர் மாதம் முழுக்க `அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

ரஜினி மன்ற மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம். ``ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் என்று சொல்லி கிண்டலடித்தவர்களுக்கு இனிதான் அவரின் அரசியல் வியூகம் பற்றித் தெரியப்போகிறது'' என்றார்.

கொரானா காலத்தில் அவர் சும்மா இருக்கவில்லை. தமிழகத்திலுள்ள அனைத்து வாக்குசாவடிகளுக்கும் தேர்தல் வேலை செய்ய ரஜினி மக்கள் மன்றத்தினரை நியமித்திருக்கிறார். இவர்கள்தான், தனது புதிய கட்சியின் அஸ்திவாரம் என்று நினைக்கிறாராம். அவர்களில் போலியோ, தவறானவர்களோ சேர்ந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறாராம். மாவட்டரீதியாக ஃபைலை வாங்கி, கடந்த ஒரு மாதமாகப் படித்தாராம். அவருக்கு எழுந்த கேள்விகளை நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார். அவர்கள் சொன்ன பதிலில் திருப்தி ஏற்படும் வகையில் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டாராம்.

`அண்ணாத்த’ படக்குழுவுடன் ரஜினி

சினிமாவுக்கு தனி டீம்... அரசியலுக்கு தனி டீம்

ரஜினியின் உள்வட்டத்தில் 11 பேர் இருக்கிறார்கள். அவர்களில், இரண்டு கோஷ்டிகள் உண்டு. சினிமாவைவிட்டு அரசியலுக்குச் சென்றால், தங்களது செல்வாக்கு போய்விடும் என்று நினைப்பவர்கள் ஒரு கோஷ்டி. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்னொரு கோஷ்டி. இரண்டு கோஷ்டியினருமே, ரஜினியின் தீவிர விசுவாசிகள்தான். என்றாலும், அரசியலில் ரஜினி நுழைவதை சினிமா கோஷ்டியினர் விரும்பவில்லை. கடந்த ஆறு மாத காலத்தில் இரண்டாவது கோஷ்டிதான் ரஜினியின் மனநிலையை மாற்றியவர்கள். அவ்வப்போது சினிமா கோஷ்டியினர், மன்றத்தினரிடம் குழப்பமான தகவல்களைச் சொல்லி அவர்களை திசைதிருப்பிவந்தனர்.

சமீபத்தில், ரஜினி வெளியிட்ட செய்தியில், தனது உடல்நிலையை மேற்கோள்காட்டி அரசியலுக்கு வருவது பற்றி விரைவில் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என்றார். அதைப் பார்த்த மக்கள் மன்ற நிர்வாகிகள் ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி போஸ்டர் ஒட்டினர். பொதுமக்கள் தரப்பில் 18,000 போஸ்ட் கார்டுகள் ரஜினி வீட்டுக்கு அனுப்பப்பட்டன.

இதையெல்லாம் விரும்பாத சினிமா கோஷ்டியினர், போஸ்டர்கள் ஒட்டுவதை ரஜினி விரும்பவில்லை என்று நிர்வாகிகள் சிலரை போனில் அழைத்து எச்சரித்தனர். ஆனால், தமிழகம் முழுக்க பரவலாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவிட்ட நிலையில், இவர்களின் மறைமுக எச்சரிக்கையை மன்ற நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை. அரசியல் கோஷ்டியினர்தான் ரசிகர்களையும், ரஜினியையும் பேலன்ஸ் செய்து எதிர்க்கோஷ்டியினரின் திட்டத்தைத் தகர்த்தாகச் சொல்கிறார்கள்.

ரஜினி

கொரோனா நேரத்தில் ரஜினி எப்படி அறிவித்தார்?

அண்மைக்காலத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் பெருமளவில் குறைந்துவருவதைச் சுட்டிக்காட்டி, இதுதான் நல்ல தருணம் என்று ரஜினி முடிவுக்கு வந்திருக்கிறார் என்கிறார்கள். மதுரையில் மாநாடு நடத்த ஏற்பாடு நடக்கிறது. அங்கே வைத்துத்தான் கட்சியின் பெயர், கொடியை வெளியிடவிருக்கிறாராம்.

Also Read: `நோ வீடியோ கான்ஃபரன்ஸ்; சென்னை வரட்டும்!’ - நிர்வாகிகளுக்கு ரஜினி திடீர் அழைப்பு

மன்ற முக்கிய நிர்வாகி ஒருவரிடம், புதிய கட்சி எப்போது பதிவு செய்யப்போகிறார் ரஜினி என்று நாம் கேட்டபோது, அவர், சிரித்தார். ``கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே கட்சியை ரஜினி பதிவு செய்துவிட்டார். அதன் அன்றாட நிர்வாகப் பணி நடந்துவருகிறது. அது என்ன பெயர் என்று யாருக்கும் தெரியாது. ரகசியமாக வைத்திருக்கிறார். உலகத்திலுள்ள அனைத்து அரசியல் கொடி மாடல்களையும் பார்த்து சில மாற்றங்களைச் செய்து கொடியையும் செலக்ட் செய்துவிட்டார். அதுமட்டுமா... 234 தொகுதிகளிலும் ரஜினியின் கொடி பறக்கும். அவருடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்திருக்கும் சில கட்சியினரை அவரது கட்சி சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டார். அவர்களும் ஓகே சொல்லிவிட்டனர். வேட்பாளர் தேர்வுக்கு தொகுதிக்கு மூன்று பேரின் பெயர்களைக் கேட்டு வாங்கி வைத்திருக்கிறார். அடுத்தகட்ட பரிசீலனையில் ஈடுபட்டுவருகிறார். போதுமா... இன்னும் பல நிகழ்வுகளை திரைமறைவில் ரஜினி செய்துவைத்திருக்கிறார். அவையெல்லாம் விரைவில் தெரியவரும்'' என்றார் சூசகமாக.



source https://www.vikatan.com/news/politics/rajini-may-announce-new-political-outfit-soon-says-sources

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக