Ad

செவ்வாய், 1 டிசம்பர், 2020

குடியாத்தம்: வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்ட 2 குழந்தைகள்! - தாயின் கடைசி நிமிட துயரம்

வேலூர் மாவட்டத்தில், கொட்டித் தீர்த்த கனமழைக்குப் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியாத்தம் அருகேயுள்ள மோர்தானா அணையும் நிரம்பியதால், அதிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கௌண்டன்ய மகாநதி ஆற்றில் கரைபுரண்டுப் பாய்கிறது. குடியாத்தம் நகரின் மையப்பகுதியின் வழியாக கௌண்டன்ய ஆறு செல்வதால், பெருவெள்ளத்தைக் காண பொதுமக்கள் திரண்டுவருகிறார்கள். காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் தொடர்ந்து எச்சரிக்கைவிடுத்தும் பொதுமக்கள் அச்சமின்றி ஆற்றுப்படுகையை எட்டிப்பார்க்கிறார்கள்.

இப்படி எச்சரிக்கையையும் மீறி பெருவெள்ளத்தை வேடிக்கை பார்க்கச் சென்ற இரண்டு பெண் குழந்தைகளும், அவர்களின் தாயும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உயிரிழந்த பெண் குழந்தைகள்

குடியாத்தம், புவனேஸ்வரிபேட்டை அருகிலுள்ள போடிப்பேட்டை தண்ணீர் டேங்க் அருகில் வசிப்பவர் யுவராஜ். இவரின் மனைவி நதியா (31). இந்தத் தம்பதியருக்கு 11 வயதில் நிவிதா, 8 வயதில் ஹர்ஷிணி என்று இரண்டு மகள்கள் இருந்தனர். யுவராஜ், குடியாத்தம் பேருந்து நிலையம் அருகிலுள்ள மளிகைக் கடையில் வேலை செய்துவருகிறார். இன்று வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்ட யுவராஜ், மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்து சென்றார். அவர் சென்ற பின்னர், தாய் நதியாவிடம் இரண்டு பெண் பிள்ளைகளும் ஆற்றை வேடிக்கை பார்க்க அழைத்துச் செல்லுமாறு அடம்பிடித்திருக்கிறார்கள்.

நதியாவும் மகள்களை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு அருகிலிருக்கும் ஆற்றுப்படுகைக்குச் சென்றார். ஆற்றிலுள்ள செக்டேம் அருகில் நின்றபோது, குழந்தைகளின் காலில் சகதி பட்டது. கால்களைச் சுத்தப்படுத்துவதற்காக ஆற்றில் ஓடும் தண்ணீருக்கு அருகில் சென்றிருக்கிறார்கள். அப்போது, இரண்டு பெண் குழந்தைகளும் ஆற்றுத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக தாய் நதியாவும் ஆற்றில் குதித்திருக்கிறார். நீச்சல் தெரியாததால், அவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

உயிரிழந்த நதியா

இதை கவனித்த அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து குழந்தைகளையும், நதியாவையும் காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள். ஆனாலும், மீட்க முடியவில்லை. இதையடுத்து, காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸாரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின்னர், நதியாவும், அவரது இரண்டு பெண் குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டனர். மூன்று உடல்களும் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

குடியாத்தம் சப்-கலெக்டர் ஷேக்மன்சூர், நதியாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தச் சம்பவம், குடியாத்தம் மக்களை சோகத்தில் மூழ்கடித்திருக்கிறது. ‘``ஆற்றுப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம்’’ என்று காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் மீண்டும் எச்சரித்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/accident/mother-and-her-2-girls-died-in-high-flow-river-water-in-gudiyatham

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக