Ad

திங்கள், 14 டிசம்பர், 2020

சென்னை: ரூ.1.37 கோடி பணம்; 3 கிலோ தங்கம் - ரெய்டில் சிக்கிய கண்காணிப்பாளர் பாண்டியன் யார்?

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவர் பாண்டியன். இவர் தொடர்பாக ரகசியத் தகவல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக பனகல் மாளிக்கைக்கு லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நுழைந்து பாண்டியன் அலுவலகத்தில் நேற்று மாலை அதிரடியாக சோதனை நடத்தினர். அலுவலகத்தைப் பூட்டிவிட்டு சோதனை நடத்தப்பட்டது.

பாண்டியன் வீடு

சோதனையின்போது போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி பனகல் மாளிகை கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட ஒரு வாகனத்திலிருந்து கணக்கில் வராத 88,500 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடந்த சோதனையில் 38,66,220 ரூபாய் பாண்டியன் தரப்பு வங்கி சேமிப்பு கணக்கில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சாலி கிராமம், திலகர் தெருவில் உள்ள பாண்டியனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர். அங்கு ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய், 3 கிலோ எடையுள்ள தங்க நகைகள் (மதிப்பு ரூ.1.22 கோடி), 3,343 கிராம் எடையுள்ள வெள்ளி பொருள்கள் (மதிப்பு ரூ.1.51 லட்சம்), ரூ.5.40 லட்சம் மதிப்பிலான வைரம், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், சொகுசு கார், 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். அதுதொடர்பாக பாண்டியனிடம் போலீஸார் விசாரணைநடத்திவருகின்றனர்.

Also Read: ‘விஜிலென்ஸ் ரெய்டு; கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!’ - விசாரணை வளையத்தில் வேலூர் ஆர்.டி.ஓ.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ஒருவர் நம்மிடம், ``சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் பணியாற்றும் கண்காணிப்பாளர் பாண்டியன் மூலம்தான் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாக எங்களுக்குத் ரகசியத் தகவல் கிடைத்தது. அதிலும், பனகல் மாளிகையில் வாகன நிறுத்துமிடம்தான் முக்கிய முடிவுகள் எடுக்கும் அலுவலகமாக இருப்பதும் தெரிந்தது. இந்தத் தகவல்கள் எங்களுக்கு ஆதாரங்களுடன் கிடைத்ததும், பாண்டியன் அலுவலகத்தில் ரெய்டு நடத்தினோம். அப்போது அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம், வெள்ளி, ஆவணங்கள் குறித்து பாண்டியனிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம். அவர் அளிக்கும் விளக்கத்துக்குப் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பாண்டியன் வீடு

பனகல் மாளிகையில் பணியாற்றும் சில நேர்மையான அதிகாரிகளிடம் கேட்டபோது``அரக்கோணத்தில் இவர் பணியாற்றியபோது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதன்பிறகுதான், சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். அந்தச் சமயத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் பாண்டியனுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. சென்னை வந்ததும் பாண்டியன், தனக்கு வேண்டப்பட்ட சிலரைத் தேர்வு செய்திருக்கிறார். அவர்கள் மூலம்தான் டீலிங் நடந்திருக்கிறது. சமீபத்தில் பெரிய தொகை கைமாறியிருக்கிறது.

Also Read: வேலூர்: `லஞ்சம் வாங்கத் தனி அலுவலகம்!’ - சுற்றுச்சூழல் அதிகாரி சிக்கியது எப்படி?

பாண்டியனின் இல்லத் திருமண விழாவும் தி.நகரில் உள்ள தி.மு.க பிரமுகருக்குச் சொந்தமான ஹோட்டலில் இலவசமாக நடத்தப்பட்ட தகவலும் வெளியாகியிருக்கிறது. தி.மு.க பிரமுகருக்கு அனுதாபியாக இருந்த பாண்டியன், தற்போது ஆளுங்கட்சியினருடன் நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். தனக்கு வேண்டப்பட்டவர்களுடன் சமீபத்தில் இன்பச் சுற்றுலா சென்று வந்திருக்கிறார்" என்கின்றனர்

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், பணத்தை எடுத்துச் செல்லும் போலீஸ்

அரசு அதிகாரி பாண்டியன் ரெய்டு குறித்து தகவல்கள் தி.மு.க, அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாகிக் கொண்டிருந்த சமயத்தில், இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. சென்னையில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி ஒருவர் பாண்டியனுக்கு மேலதிகாரியாக இருக்கிறார். அரசியல் செல்வாக்கு காரணமாக ஐபிஎஸ் அதிகாரியின் மனைவிக்கும் பாண்டியனுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதுவும் இந்த ரெய்டுக்கு ஒரு காரணம் என்ற தகவல் கிசுகிசுக்கப்படுகிறது. வேலூரில் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரியிடம் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதைப் போல சென்னையில் அரசு அதிகாரியிடமும் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.



source https://www.vikatan.com/news/crime/dvac-raid-at-environment-superintendent-pandians-office-and-house-premises

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக