கொரோனா பாதிப்புகளால் பெரும்பாலான நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. என்னதான் OTT தளங்கள் மூலம் இன்று வீட்டிலிருந்தே உலகமெங்கும் இருக்கும் படங்களைப் பார்க்க முடிகிறது என்றாலும் சூடான பாப்கார்ன் மணத்துடன், ஒரு சமூகமாகக் கூடி பலதரப்பட்ட மக்களின் ஆரவாரத்துடன் படம் பார்க்கும் அனுபவத்தை மிஸ் செய்யவே செய்கிறான் சினிமா ரசிகன். சினிமா ரசிகனுக்கோ இந்த ஏக்கம் மட்டும்தான். திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மற்றும் விநியோகஸ்தகர்களுக்கும் இது மிகப்பெரிய சிக்கல். திரையரங்குகளை விற்றுவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு நெருக்கடியில் இருக்கின்றனர் சிலர். படங்கள் எதுவுமே வெளியாகாததால் துளியும் வருமானம் இல்லை இவர்களுக்கு. இந்தியா என்றில்லை உலகமெங்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இதே நிலைதான்.
உலகின் மிகப்பெரிய திரைப்பட விநியோக நிறுவனம் ஏஎம்சி என்டர்டெய்ன்மென்ட் (AMC Entertainment). இந்நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கான இழப்பைச் சந்தித்துள்ளதாகச் சமீபத்தில்தான் அறிவித்திருந்தது. இதேசூழல் இன்னும் சில மாதங்கள் தொடர்ந்தால் மொத்தமாக திவாலாகிவிடுவோம் என்கிறது அந்நிறுவனம். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கே இந்த நிலை என்றால் சாதாரண விநியோகஸ்தகர்கள் மற்றும் சொந்தமாக ஓரிரு திரையரங்குகள் வைத்திருக்கும் உரிமையாளர்களின் நிலை என்னவாக இருக்கும்?!
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஒரு சில மாகாணங்களிலாவது ஜூலை மாதமே திரையரங்குகள் திறக்க அனுமதி கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர் திரையரங்க உரிமையாளர்கள். ஏஎம்சி நிறுவனமும் ''ஜூலை முதல் மீண்டும் முழுவதுமாக இயங்கத் தொடங்கிவிடுவோம்'' என்று முதலீட்டாளர்களிடம் உத்தரவாதம் கொடுத்திருந்தது. ஆனால், மீண்டும் அங்கு கொரோனா பரவும் வீரியம் அதிகரித்ததால் இதுவும் தள்ளிப்போனது. இப்போதுதான் மீண்டும் அங்கு கொஞ்சம் கொஞ்சமாகத் திரையரங்குகள் திறக்க ஆரம்பித்திருக்கின்றன. இருந்தும் கொரோனா லாக்டெளனில் சந்தித்த இழப்பை மீட்க வெகுகாலம் ஆகும் என்றே தெரிகிறது.
Also Read: 16,627 கோடி நஷ்டமடைந்த அமெரிக்க விநியோக நிறுவனம்... என்னவாகும் திரைப்பட வணிகம்?
திரையரங்குகள் இரண்டு படங்களை மலையென நம்பியிருந்தன. அவை கிறிஸ்டோபர் நோலனின் 'டெனட்' (Tenet) மற்றும் வால்ட் டிஸ்னி தயாரிப்பான 'முலான்' (Mulan). இந்தப் படங்கள் வந்தால் மீண்டும் திரையரங்க வியாபாரம் மீண்டும் சூடுபிடிக்கும் என இவற்றின் வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தன உலக திரையரங்குகள். இரண்டுமே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்கள். ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள். அதனால் இந்தப் படங்கள் வெளிவந்தால் நிலைமை மீண்டும் சீராகும் என நம்பியிருந்தனர் திரையரங்க உரிமையாளர்கள். ஆனால், அறிவித்தது போல ஜூலை மாதம் இரண்டு திரைப்படங்களுமே வெளிவரவில்லை. அதற்கான சூழல் அமையவில்லை. டெனட் வெளியீடு ஆகஸ்ட் இறுதிக்கு தள்ளிப்போனது.
இந்நிலையில் திரையரங்குகள் திறக்கும் வரை காத்திருக்க முடியாது என டிஸ்னி புது ரூட்டை எடுத்திருக்கிறது. 'முலான்' திரைப்படத்தை அதன் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ தளத்தில் செப்டம்பர் 4 வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே பல படங்களும் ஓடிடியில் வெளியாகின்றனவே இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? முலான் சாதாரண ஓடிடி ரிலீஸ் கிடையாது. இதை 'PVOD' ரிலீஸ் என்கிறார்கள். அதாவது Premium Video on Demand. முலானைப் பார்க்க டிஸ்னி+ சந்தா இருந்தால் மட்டும் போதாது. கூடுதலாக 29.99 டாலர்கள் கட்டவேண்டும். டிஸ்னி+ சந்தா இல்லாதவர்கள் சந்தாவும் பெற வேண்டும், இந்தத் தொகையையும் கட்ட வேண்டும். டிஸ்னி+ சந்தா இருக்கும் வரை முலானை வாட்ச்லிஸ்ட்டில் தக்க வைத்துக்கொள்ள முடியும். டிஸ்னி+ சந்தா மட்டும் வைத்திருப்பவர்களுக்கு எப்போதும்போல சில மாதங்களுக்குப் பிறகு 'முலான்' பார்க்கக் கிடைக்கும். இதுதான் லாஜிக். கிட்டத்தட்ட 'விஸ்வரூபம்' சமயத்தில் கமல் சொல்லியிருந்த பிசினஸ் மாடல்தான். ஆனால் தியேட்டரிலும் ரிலீஸாகும் எனச் சொல்லியிருந்தார் கமல்.
சீனா போன்ற வெகுசில நாடுகளில் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகிறது 'முலான்'. முக்கிய நாடுகளிலெல்லாம் இந்த PVOD ரிலீஸ்தான். டிஸ்னியின் இந்த முடிவைத் திரையரங்க உரிமையாளர்களும் வினியோகஸ்தர்களும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். பிரான்ஸ் திரையரங்க உரிமையாளர் ஒருவர் 'முலான்' பேனரை அடித்து நொறுக்கும் வீடியோ கூட சமீபத்தில் வைரலானது.
திரையரங்குகளுக்கு ஏன் இது மிகப்பெரிய பின்னடைவு?
இன்று கிட்டத்தட்ட பாதி ஹாலிவுட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருக்கும் நிறுவனம் டிஸ்னி. ஒவ்வொரு வருடமும் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் பணம் ஈட்டும் படங்களில் டாப் 10 இடங்களில் 5-6 படங்கள் டிஸ்னி படங்களாகத்தான் இருக்கும். 'முலான்' திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் இந்த ட்ராக் ரெகார்ட்டை தக்கவைக்கும், 1 பில்லியன் டாலர் வசூலைக் குவிக்கும் மற்றொரு டிஸ்னி படமாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டது. இந்தத் தொகை தயாரிப்பு நிறுவனம், திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் என அனைவரிடத்திலும் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கும். இப்போது டிஸ்னி அதன் பங்கை மட்டுமாவது பெற்றுவிட வேண்டும் என்றுதான் இந்த PVOD ரிலீஸை கையிலெடுத்திருக்கிறது. ஆரம்பக்கட்டத்தில் என்னதான் திரைப்படங்கள் ஓடிடி-க்கு சென்றாலும் முக்கிய படங்கள் நிச்சயம் திரையரங்குகளில்தான் வெளியாகும் என்று நம்பப்பட்டது. அதை மாற்றியிருக்கிறது 'முலான்'.
பெரிய பட்ஜெட் படங்கள் போட்ட காசை ஓடிடி-யிலிருந்து மட்டும் எடுப்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே பார்க்கப்பட்டது. ஆனால், டிஸ்னி, இந்தப் புதிய வெளியீட்டு யுக்தியை அப்படியே திருப்பிப்போடுகிறது. இது வொர்க்-அவுட்டானால் மற்ற பெரிய பட்ஜெட் படங்களும் இதே ரூட்டை எடுக்கக்கூடும் என்பதுதான் திரையரங்க உரிமையாளர்களின் அச்சமாக இருக்கிறது. மார்வெல் ஸ்டுடியோஸின் 'ப்ளாக் விடோ' போன்று இன்னும் சில பெரிய படங்களும் டிஸ்னியின் கைவசம் இருக்கின்றன. இந்த ட்ரெண்ட் பிக்-அப்பானால் அவையும் டிஸ்னி+ தளத்திலேயே வெளிவர வாய்ப்புகள் அதிகம்.
இருப்பினும், ஒரு படத்துக்கு 29.99 டாலர், அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2,200 ரூபாய் என்பது அதிக விலை என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது. சாதாரண டிக்கெட்டை விட மூன்றிலிருந்து நான்கு மடங்கு வரை அதிகம் இது. இதை டிஸ்னியுமே ஒப்புக்கொள்கிறது. அதிகப்படியான தயாரிப்பு செலவுகளைச் சரிக்கட்ட இதுவே ஒரே வழி என்கிறது டிஸ்னி. 200 மில்லியன் டாலர் (சுமார் 743 கோடி ரூபாய்) பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் படம் 'முலான்'. இதுபோக 100 மில்லியன் டாலர் மார்க்கெட்டிங் பட்ஜெட் வேறு. திரையரங்கில் வெளியாகியிருந்தாலும் 'முலான்' போன்றதொரு படத்தைப் பெரும்பாலும் குடும்பத்துடனே மக்கள் பார்த்திருப்பார்கள். நான்கு பேர் கொண்ட குடும்பம் தியேட்டருக்கு டிக்கெட் எடுத்து வந்து, பார்க்கிங் கட்டணம் கட்டி, ஸ்னாக்ஸ் சாப்பிட்டு படம் பார்த்தால் இந்தத் தொகை வந்துவிடும். இப்போது வீட்டில் இருந்தபடியே அதே கட்டணத்துக்குப் படத்தைப் பார்க்கப்போகிறார்கள். அதனால் இந்த விலை ஓகேதான் என்ற கருத்தையும் முன்வைக்கிறது டிஸ்னி. ஆன்லைன், ஸ்ட்ரீமிங்தான் வருங்காலம் என்பதைப் புரிந்துகொண்டுள்ள டிஸ்னி, 'முலான்' போன்றதொரு படம் இன்னும் பலரை டிஸ்னி+ பக்கம் கொண்டுவரும் என நம்புகிறது.
சர்ன் என்றால் என்ன தெரியுமா?!
'Churn'... ஸ்ட்ரீமிங் உலகில் பணியாற்றுபவர்களுக்கு இந்த வார்த்தையின் முக்கியத்துவம் புரியும். சந்தாவைத் தொடராத சந்தாதாரர்களை இப்படிக் குறிப்பிடுவார்கள். இதை முடிந்தளவு குறைவாக வைத்திருப்பதே ஸ்ட்ரீமிங் தளங்களின் முக்கிய சவாலாக இருக்கிறது.
எதோ ஒரு படமோ, சீரிஸோ பார்க்கச் சந்தா பெறுபவர்கள், பார்க்கச் சுவாரஸ்யமாக வேறு எதுவுமே இல்லை என்றால் அப்படியே அடுத்த மாதமே நழுவிவிடுவார்கள். இது நடக்காமல் தடுக்க எதாவது ஒரு முக்கிய கன்டென்ட் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது அவசியம். நெட்ஃபிளிக்ஸின் வெற்றிக்கு முக்கிய காரணம் இதை ஒழுங்காகக் கையாண்டதுதான் என்று சொல்வார்கள். இப்போது தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் டிஸ்னி+க்காக டிஸ்னி தயார் செய்து வைத்திருந்த படங்கள் மற்றும் சீரிஸ்களின் கையிருப்பு ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே இருக்கிறது. முலான் டிஸ்னி+க்கு வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
இந்த விஷயத்தில், யூனிவர்சல் போன்ற ஸ்டூடியோக்கள் செய்த ஒரு தவற்றையும் செய்யாமல் தவிர்த்திருக்கிறது டிஸ்னி. 'Trolls: World Tour' என்ற அனிமேஷன் படத்தை ஒரே நேரத்தில் தியேட்டர்களிலும், ஓடிடி-யிலும் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது யூனிவர்சல். ஆனால், டிஸ்னி+ இருக்கும் நாடுகளில் திரையரங்குகளில் முலான் வெளியாகாது எனத் தெளிவாக அறிவித்துவிட்டது டிஸ்னி. இந்தியாவைப் பொறுத்தவரையில் தனியாகப் பணம் கட்டி 'முலான்' பார்க்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பதால் PVOD-ல் அது வெளியாகப்போவதில்லை. இன்னும் சில மாதங்களில் சாதாரண சந்தாவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
இப்படி டிஸ்னி கைவிட்ட நிலையில், தற்போது இன்னொரு ஹாலிவுட் ஜாம்பவானான வார்னர் பிரதர்ஸை நம்பியிருக்கின்றன திரையரங்குகள். செய்வதறியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு நோலனின் 'டெனட்' மட்டுமே இப்போதிருக்கும் ஒரே நம்பிக்கை. இன்னும் ஃபிலிம்மில் படம் எடுத்துக்கொண்டிருப்பவர் நோலன். திரையரங்க அனுபவம் மீது தீராக் காதல் கொண்ட அவர் ஓடிடி ரிலீஸ் பற்றிச் சிந்திக்கவே வாய்ப்பில்லை. ''நான் படம் எடுத்தது திரையரங்குகளுக்குத்தான். என்ன நடந்தாலும் அங்குதான் என் படத்தை வெளியிடுவேன்'' எனப் பிடிவாதமாகவே இருக்கிறார். ஆனால், அது படத்தின் பிசினஸுக்கு கைகொடுக்குமா என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. ''உலகமெங்கும் மக்கள் மரணித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் திரையரங்குக்கு வா என நோலன் எப்படிச் சொல்லலாம்?'' என்ற விமர்சனமும் இருக்கிறது. வார்னர் பிரதர்ஸும் அரை மனதுடன் படத்தைத் திரையரங்குகளில் வெளியிட முடிவுசெய்தது. நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் போதே சில நாடுகளில் 'டெனட்' வெளியாகியிருக்கும். ஆனால், வரவேற்பு எப்படி இருக்கும், மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also Read: நோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்!
'டெனட்' திரையரங்குகளில்தான் வெளிவருகிறது என்றாலும் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. எப்போதும் இல்லாததுபோல் மொத்த வசூலில் 63% எங்களுக்கு வந்துவிட வேண்டும் என ஒப்பந்தம் போட்டிருக்கிறது வார்னர் பிரதர்ஸ். எப்போதும் முதல் வாரம் மட்டும்தான் இது அதிகமாக இருக்கும். அதன் பிறகு 50-50 அளவில்தான் இருக்கும். ஆனால், இதை எதிர்த்துப் பேசக் கூட முடியாத பரிதாப நிலையில் இருக்கின்றனர் விநியோகஸ்தர்கள்.
அமெரிக்காவில் 'டெனட்' வெளியாகப்போகிறது என்றாலும் நியூயார்க், கலிஃபோர்னியா போன்ற முக்கிய மாகாணங்களில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அதிக திரையரங்குகள் கொண்ட இரு மாகாணங்கள் இது. சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும், பார்வையாளர்கள் கட்டாயமாக மாஸ்க் போட வேண்டும், ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் திரையரங்கில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும், மேம்பட்ட ஏர் ஃபில்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என கொரோனாவால் திரையரங்குகளுக்குக் கூடுதல் செலவினங்கள் இருக்கின்றன. இதை வாடிக்கையாளர்களிடமிருந்தே பெற முடிவுசெய்திருக்கின்றன திரையரங்குகள். ஏற்கெனவே திரையரங்குகளுக்கு வரத் தயங்கும் மக்களுக்கு இது இன்னுமொரு தடங்கல். திரையரங்குகளுக்குச் சென்றால் முடிந்த வரை மாஸ்க்கை கழட்ட வேண்டாம் என்பதே அறிவுரை. இதனால் திரையரங்குகளில் ஸ்னாக்ஸ், பாப்கார்ன் விற்பனையும் முன்பு போல இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இதெல்லாம் தாண்டி பிற நாடுகளில் இப்போது திறக்கப்பட்டிருக்கும் திரையரங்குகள் தழைக்குமா? இந்தப் பதிலில்தான் இங்கு நம்மூர் திரையரங்குகள் என்ன ஆகப்போகின்றன என்ற கேள்விக்கான பதிலும் ஒளிந்திருக்கிறது.
முன்பு ஹாலிவுட்டைவிட இந்திய சினிமா 3-4 வருடங்கள் பின்தங்கியிருக்கிறது எனச் சொல்வார்கள். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்தக் கால இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறுகிவருகிறது. வருடக்கணக்கிலிருந்த இந்த இடைவெளி ஒரு சில மாதங்களாகக் குறைந்திருக்கிறது. இப்போதெல்லாம் ஹாலிவுட்டில் ஒன்றை முயற்சி செய்து வெற்றி காண்கிறார்கள் என்றால் நம்மூரில் நமக்கேற்ற வகையில் அதை விரைவிலேயே எடுத்து வந்துவிடுகின்றனர். அப்படிதான் ஓடிடி இங்கும் பெரிய விஷயமாக இன்று மாறியிருக்கிறது. ஆனால் இந்த PVOD நம்மூருக்கு செட் ஆகுமா என்பது சந்தேகம்தான்.
Also Read: என்னதான் ஆச்சு இந்த பாலிவுட்டுக்கு?
ஒரு படத்திற்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகை கட்டவேண்டும் என்ற இந்த மாடல் முன்பே இருப்பதுதான். iTunes, YouTube Movies ஆகிய தளங்களில் வாடகைக்கு நம்மால் படங்கள் பார்க்க முடியும். இந்தியாவில் ஹாலிவுட் படங்கள் 150 ரூபாய்க்கு iTunes-ல் (ஆப்பிள் டிவி) வாடகைக்குக் கிடைக்கும். மேற்கத்திய நாடுகளில் மக்கள் பயன்படுத்திய அளவுக்கு இங்கு மக்கள் இந்தச் சேவையை அதிக அளவில் பயன்படுத்தவில்லை. மாத சந்தா கட்டும் ஓடிடி தளங்கள் மட்டுமே இங்கு ஹிட். அதுவுமே அமேசான் ப்ரைம் வீடியோ போன்ற குறைந்த விலை சேவைகள்தான் பலரையும் சென்று சேர்ந்திருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் போன்ற சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.
PVOD முறையில் வெளியிட வேண்டும் என்றாலும் விஜய், அஜித் போன்ற பெரிய நட்சத்திரங்களின் படங்களை மட்டுமே அப்படி வெளியிட முடியும். நம்மூரில் டிவியில் படம் பார்ப்பவர்களை விட மொபைலில் படம் பார்ப்பவர்கள்தான் அதிகம். அதனால் டிஸ்னி+ போலத் திரையரங்க டிக்கெட் விலையை விட மூன்று மடங்கு அதிக விலையில் PVOD முறையில் படத்தை வெளியிடுவதெல்லாம் இங்கு இப்போதைக்குச் செல்லுபடியாகாது. 500 ரூபாய்க்கு ஒரு படம் பார்க்கலாம் என்றெல்லாம் சொன்னால் பாதிப் பேர் கழன்று விடுவார்கள். ஆனால் வேறு வழியே இல்லையென்று தெரிந்தால் இந்தியாவிலும் பெரிய படங்கள் இந்த முறையை முயற்சி செய்து பார்க்க வாய்ப்புகள் அதிகம். நம்மூரைப் பொறுத்தவரையில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமே திரையரங்குகளுக்குப் பார்வையாளர்களை அழைத்து வரமுடியும்.
டிஸ்னி போன்ற ஒரு நிறுவனமே ஓடிடிதான் ஒரே வழி என்று முடிவெடுக்கும்போது நம்மூர் தயாரிப்பாளர்களின் இயலாமையையும் புரிந்துகொள்ள முடிகிறது. தொடர்ந்து இயங்க பல தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இங்கு ஓடிடி தளங்களை விட்டால் வேறு வழிகளில்லை. குறைந்த பட்சம் அவர்களை நம்பியிருக்கும் கலைஞர்கள் மற்றும் ஊழியர்களைக் காப்பாற்றிவிட வேண்டும் என நினைக்கின்றனர் தயாரிப்பாளர்கள். அதனால் இப்படியான இக்கட்டான சூழலில் அவர்களின் இந்த முடிவை நியாய தராசில் வைத்துப் பார்ப்பதும் சரியாகாது.
ஆனால், அதே சமயம் பெரிய படங்கள் ஓடிடி தளங்களுக்குச் செல்வது 'திரையரங்குகளின் முடிவின் ஆரம்பம்தானோ' என்ற எண்ணத்தையும் ஆழ்மனதுக்குள் எழுப்பத்தவறவில்லை.
source https://cinema.vikatan.com/tamil-cinema/is-kollywood-following-footsteps-of-hollywood-leaving-theatres-in-misery
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக